நட்பு ஓர் இபாதத்

தோழமை என்பது துன்யாவுடன் முடிவதல்ல. மறுமை வாழ்வையும் தீர்மானிப்பதாகும். 

மூஃமின்கள் தம் அன்றாட செயல்கள் அனைத்தும் அல்லாஹ் ரசூல் காட்டிய வழியில் அமைத்துக் கொள்வதற்கு பெயர் தான் இபாதத் (அடிபணிதல்) ஆகும். அப்படி அமைத்துக் கொண்டால் நாம் நகம் வெட்டும் செயலுக்கு கூட நமக்கு கூலி உண்டு.

அதுபோல் தான் நல்ல நண்பனை தேர்வு செய்து மார்க்கம் கூறும் நோக்கில் நட்பு கொண்டு பழகுவது ஒரு இபாதத். அதை மார்க்கம் கூறும் வழியில் அமைத்துக் கொண்டால் அந்த (நட்பில்) அமலில் இறைப் பொருத்தம் இருக்கும். அந்த அமல் (நட்பு) நம்மை சொர்க்கத்தில் சேர்க்கும்.

நட்பில் மார்க்கம் கூறும் வரையறைகளை புறந்தள்ளி விட்டு தீய அல்லது வீணான காரியங்களில் மட்டும் ஒன்றிணையும் நண்பர்கள் என்பதை அறிந்தும், உலக மகிழ்ச்சிகாக மட்டும் பழகினால் உலக ஆதாயங்கள் கிடைக்கும். ஆனால் அந்த நட்பில் இறைப் பொருத்தம் இருக்காது. அந்த அமல் (நட்பு) நம்மை நரகில் சேர்க்கும்.

ஆனால் நம்மில் பலர் நட்பை ஒரு இபாதத்தாக பார்ப்பதும் இல்லை. இதனால் மறுமையை நோக்கமாக கொண்டு நட்பு கொள்வதுமில்லை. உலகில் பேசி சிரித்து அரட்டை அடிக்க, வீணான செயல்களுக்கு ஒத்துழைக்கவும், பொழுதை கழிக்கவும், நண்பர்கள் தேவை. இக்கால சொல்வழக்கில் சொல்ல வேண்டுமானால் Fun பன்ன Vibe பன்ன நண்பன் தேவை என்பதே அதிகமான மக்களின் நிலை. பொழுதுபோக்கு மட்டுமின்றி சிலர் உலக ஆதாயங்களை பார்த்து நட்பு கொள்வதும் உண்டு.

நட்பில் இறை பொருத்தத்தையும், மறுமை வெற்றியையையும் நோக்கமாக கொள்ளாமல், இப்படி உலகியல் பார்வையில் மட்டுமே அனுகுவதால் ஏற்படும் இழப்புகளையும், மார்க்கம் கூறும் நோக்கில் நம் பழக்கவழக்கங்களை அமைத்துக் கொண்டால் ஏற்படும் ஈருலக வெற்றியையும் இப்பபதிவில் காணலாம்.



குணங்களை ஆளுமை செலுத்தும் நட்பு

مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ ، أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ ، أَوْ ثَوْبَكَ ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً.

அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்! 📚 நூல் : புகாரி-2101


عَن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ : الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ

، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ

 

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :-  நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:

“மனிதன் தனது நண்பனின் வாழ்க்கை முறையில் இருப்பான். ஆகையால் உங்களில் ஒருவர் யாரை நண்பனாக்குகிறீர்கள் என்பதை கவனமாக பார்த்துக்கொள்ளட்டும்.”📚 அபூதாவூத் : 4833, திர்மிதி : 2378

இது நபிகளாரின் வாக்கு. அதாவது ஒருவனின் சிந்தணை, கொள்கை, பாதை இவையெல்லாம் அவனுடைய சுற்றத்தை பொருத்தே குறிப்பாக நெருங்கிய நட்பு வட்டத்தை பொருத்து அமைந்துவிடும்.

வளரும் குழந்தைகளின் பேச்சுவழக்குகள் தமது பள்ளிக்கூட சூழலைப் பொருத்து அமைவது போல, மனித இயல்பு தமது நெருங்கிய நட்பின் குணங்களை தன்னையே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரிரு குணங்களாவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். எனவே தான் ஒருவன் தன் நண்பனின் வழியில் ஆகிவிடுவான் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

எனவே நட்பு வட்டத்தை தேர்வு செய்வதில் அதிக கவனம் பேணுவோம்.


மறுமையில் வாதிடும் நல்ல நட்பு


 فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ بِأَشَدَّ مُنَاشَدَةً لِلَّهِ فِي اسْتِقْصَاءِ

الْحَقِّ مِنَ الْمُؤْمِنِينَ لِلَّهِ يَوْمَ الْقِيَامَةِ لِإِخْوَانِهِمُ الَّذِينَ فِي النَّارِ، يَقُولُونَ : رَبَّنَا،

كَانُوا يَصُومُونَ مَعَنَا، وَيُصَلُّونَ، وَيَحُجُّونَ. فَيُقَالُ لَهُمْ : أَخْرِجُوا مَنْ

عَرَفْتُمْ.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்.

எங்கள் இறைவா ! இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக !). அப்போது அவர்களிடம், "நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும்

📚 முஸ்லிம் 302 ( நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி )

மறுமையில் சொர்க்கம் செல்ல ஆசைப்படுவோர், துன்யாவில் அதற்காகவே முயற்சிக்கும் மார்க்க பற்றுள்ளவர்களையே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் மறுமையிலும் அவர்களுடன் இருக்க முடியும்.

பள்ளிவாசலுக்கும் மார்க்க கல்வி கற்கவும் அழைப்பவர்களை நேசிப்பதும், அவர்களுடன் நட்புகொள்வதும் மறுமையிலும் அவர்களுடன் சேர்க்கும். அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் மன்ராட வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், வீணான காரியங்களுக்கு அழைக்கும் நண்பர்களையும் மட்டுமே நேசிப்பது மறுமையிலும் அவர்களுடனேயே கொண்டு சேர்க்கும்.

📌இறை நினைவுடனே வாழும் மக்களுடன் நட்பு கொள்ள வேண்டும், அவர்களை விட்டும் திரும்பி விட கூடாது


وَٱصْبِرْ نَفْسَكَ مَعَ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ وَلَا

تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَاتُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن

ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًۭا﴿28

தமது இறைவனின் பொருத்தத்தை நாடி காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்திப்பவர்களுடன் உம்மை நிலைநிறுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் கண்கள் திரும்பிவிட வேண்டாம். நம்மை நினைப்பதை விட்டும் யாருடைய உள்ளத்தைக் கவனமற்றதாக்கி விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது சுய விருப்பத்தைப் பின்பற்றினான். அவனது காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.

அல் குர்ஆன் -   18 : 28

பள்ளிவாசலில் மட்டுமல்லாமல் காலை மாலை என எல்லா நேரங்களிலும் இறை நினைவுடன் இருப்பவர்கள், தமது எல்லா செயல்களிலும் இஸ்லாத்தை முன்னிறுத்தி சொல்லையும் செயலையும் அலங்கரிப்பவர்கள் இவர்களுடனே நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் ஆலிம்களிடம் மட்டும் தான் நட்பு கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம். எல்லா முஸ்லிம்களும் அப்படி தான் இருக்க வேண்டும். வீணானவற்றை தவிர்ந்து தமது சிந்தணை, சொல், செயல் இவை அனைத்தையும் இறைச் சிந்தணையுடன், இறைவனுக்கு அஞ்சியே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும். அதன்படி வாழ்பவர்கள் மட்டுமின்றி, இத்தகையோருடன் தம் நேரத்தை செலவிடுவோரும் மறுமையில் வெற்றி பெறுவார்கள்.

அவர்களிடம் அமல்கள் பெருமளவு இல்லாவிட்டாலும் நன்மக்களுடன் பழகியதற்காகவே அவர்களுடன் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு உண்டு என கீழ்க்காணும் ஹதீஸ் கூறுகிறது.


حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ قَالَ " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ". تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்' என்று கூறினார்கள். 📚ஸஹீஹ் புகாரி : 6170

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, 'மறுமை நாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?' என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர' என்று பதிலளித்தார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை.

நான் நபி(ஸல்) அவர்களையும் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன்.

மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே! 📚 ஸஹீஹ் புகாரி : 3688.

இதற்கு மாற்றமாக ஒன்று கூடினாலே இஸ்லாத்தை பற்றியோ, இறைவனை பற்றியோ எந்த நினைவும் இல்லாமல், மறுமைக்கு எந்த பயனும் அளிக்காத பேச்சுக்களில் ஈடுபடுவோருடன் நட்பு கொள்வது நம் மறுமையை எப்படியெல்லாம் பாழாக்கும் என்பதை அல்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இறைவன் நமக்கு எச்சரிக்கை செய்கிறான்.

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கெட்ட தோழமை.

பொதுவாக கெட்ட நண்பர்கள் என்றவுடன் மது, புகை, திருட்டு, விபச்சாரம் போன்ற வெளிப்படையில் அறியப்பட்ட பாவங்கள் செய்வோரையே குறிக்கும் என்று நாம் கருதுவோம். 

ஆனால் அவர்களை விட ஆபத்தானவர்கள் உண்டு. அவர்கள் தான் மார்க்கத்தை விட்டும் திசை திருப்பி உலக வாழ்வை நோக்கியே நமது சிந்தணை, செயல்பாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிக்க செய்கின்ற நல்லவர்கள் போர்வையில் இருக்கும் மனித ஷைத்தான்கள்..

காரணம், புகை, மது போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களை  காணும்போது நமக்கு இருக்கும் எச்சரிக்கை உணர்வு, இந்த உலக மோகத்தை நோக்கி வழிகாட்டும் நட்புகளிடம் இருக்காது. இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மார்க்க சிந்தணையை மறக்கடித்து, உலக சிந்தனையின் பால் தள்ளி விடுவார்கள்.

இதுபற்றிய அல்குர்ஆன் எச்சரிக்கையை கவனியுங்கள்.

وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ

وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ ﴿204﴾

இவ்வுலக வாழ்க்கையைக் குறித்து உம்மைக் கவரும் விதமாகப் பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவன் தனது உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குகிறான். அவனோ கடுமையாகத் தர்க்கம் செய்பவன்.

📚 அல் குர்ஆன் -   2 : 204

உலக உல்லாசங்கள் குறித்து ஆசைமூட்டி நம்மை கவரும் வகையில் பேசும் நபர்களை நண்பர்களாக வைத்துக் கொண்டால், நம்மை அறியாமலேயே உலக வாழ்வில் மூழ்கி இறைவனை மறந்து விடும் நிலை உண்டாகும்.

காரணம் அது பாவம் என்று வேறுபடுத்தி அறியாமல் அவர்களின் உலக ஆசை பிடித்த குணங்களிலேயே நாமும் கலந்து போயிருப்போம். உதாரணமாக சிலர் பேசினாலே சினிமாக்கள், சுற்றுலாக்கள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, கேலிக்கைகள் என்பது போன்ற உலக உல்லாசங்கள் குறித்து மட்டுமே சிந்திப்பார்கள். அதையே நம்மிடமும் பேசுவார்கள். இவர்களிடம் தொழுகை, மார்க்கப் பற்று, அல்குர்ஆன் வரலாறுகள் போன்ற பேச்சுக்களுக்கு நேரமே இருக்காது.

இப்படி இறைவனை மறந்து, துன்யாவில் நம் பொறுப்புகளையும் கடமைகளையும் மறந்து வாழும் நபர்களின் நட்பினால் மறுமையில் என்னவாகும் என்பதை அல்குர்ஆன் படம்பிடித்து காட்டுகிறது.

இறைவனின் உபதேசங்களை புறக்கணித்தோருக்கு ஷைத்தான் நண்பன் ஆவான்.

وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَـٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَـٰنًۭا فَهُوَ لَهُۥ قَرِينٌۭ﴿36﴾


அளவிலா அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிப்பவருக்காக ஒரு ஷைத்தானை ஏற்படுத்துவோம். அவன் அவருக்கு நண்பனாகி விடுவான்.


وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ ﴿37﴾


(ஷைத்தான்களான) அவர்கள் நேர்வழியை விட்டும் இவர்களைத் தடுக்கின்றனர். இவர்களோ தாம் நேர்வழியில் நடப்பதாக நினைக்கின்றனர்.



حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَـٰلَيْتَ بَيْنِى وَبَيْنَكَ بُعْدَ ٱلْمَشْرِقَيْنِ فَبِئْسَ ٱلْقَرِينُ ﴿38﴾


இறுதியாக, அவன் நம்மிடம் வரும்போது “எனக்கும், உனக்குமிடையே கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே ! இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று (ஷைத்தானை நோக்கிக்) கூறுவான்.


📚 அல் குர்ஆன் -   43 : 36 - 38


மார்க்க சிந்தணையின்றி, இறை உபதேசங்களை புறக்கணித்து உலக வாழ்க்கை பற்றிய சிந்தணையிலேயே வாழ்வோருக்கு ஷைத்தான் நண்பனாகி விடுவான். இத்தகைய ஷைத்தான்கள் மனிதர்களிலும் உண்டு என கீழ்காணும் வசனம் கூறுகிறது.


وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا شَيَـٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ


بَعْضٍۢ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًۭا ۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَافَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا


يَفْتَرُونَ﴿112﴾ 

இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களிலுள்ள ஷைத்தான்களை எதிரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுவதற்காக அலங்காரச் சொற்களைக் கூறுகின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களையும், அவர்கள் கற்பனை செய்பவற்றையும் விட்டு விடுவீராக! 📚 அல் குர்ஆன் -   6 : 112

அறியாமையினால் இதுபோன்ற மனித ஷைத்தான்ளிடம் நட்பு கொள்வதால் மறுமையில் நட்டவாளியாகி இருப்போம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

 فِى جَنَّٰتٍۢ يَتَسَآءَلُونَ﴿40﴾ عَنِ ٱلْمُجْرِمِينَ﴿41 مَا سَلَكَكُمْ فِى سَقَرَ﴿42﴾ قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ﴿43﴾ وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ﴿44﴾ وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ﴿45وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ﴿46  

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். 📚அல்குர்ஆன்: 74:40-46

சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி ஸகர் எனும் நரகில் வீழ்ந்ததற்கு காரணம் கேட்டபோது நான்கு காரணங்களை கூறுகிறார்கள்.

📌தொழுகை இல்லாமை, 📌 தர்மம் செய்யாமை,

📌 பொழுதை கழிக்கும் வீணானவற்றில் மூழ்கியவர்களுடன் நாங்களும் கிடந்தோம்.

📌கியாமத் நாளை மறுத்து வாழ்ந்தோம்,

தொழுகை, ஓதுதல், மார்க்க கல்வியில் கூட்டு முயற்சிகள் போன்ற சிந்தணையின்றி, எப்போதும் வீணிலும், விளையாட்டிலும் ஒன்று கூடுவதற்காகவே நட்பு கொண்டால் நாமும் வீணில் மூழ்கி மறுமையில் நட்டவாளியாகும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நயவஞ்ச நண்பர்கள்,


اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ

الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْ‌ؕ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ‌ؕ اِنَّا لْمُنٰفِقِيْنَ هُمُ

الْفٰسِقُوْنَ﴿67

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். 📚 அல்குர்ஆன்: 9:67

இவ்வசனம் நயவஞ்சகத்தனம் கொண்டவர்களுடன் நட்பு கொள்வது பற்றி எச்சரிக்கிறது.

நயவஞ்சகர்களின் அடையாளங்கள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏராளமாக நமக்கு எச்சரித்துள்ளார்கள். பொய், புறம், பிறரின் அமல்களில் குறைகூறிக் கொண்டே இருத்தல், மோசடி, வாக்குறுதி மீறல், பொறாமை, ஆணவம் என ஏராளமான தீமைகளை ஒருசேர தங்கள் இயல்பிலேயே கலந்தவர்கள் தான் நயவஞ்சகர்கள்.

நாம் சிறியதாக கருதும் இதுபோன்ற தீய குணங்கள் கொண்டவர்களிடம் பழகினால் நம் மறுமை நிலை கேள்விக்குறியாகும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கின்றது. காரணம் இவர்களோடு சேரும் பொழுது இவர்களது தீய குணம் நம்மிடம் சிறிதளவாவது ஒட்டிக்கொள்ளும். நமது ஈமான் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் இவர்களைப் போன்றே நாமும் மாறிவிடும் அபாயம் உண்டு .


மறுமை நம்பிக்கையற்ற நண்பன்.


قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌۭ﴿51يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ﴿52﴾ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ﴿53﴾ قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ﴿54﴾ فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ﴿55﴾  قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ﴿56﴾ وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ﴿57

“எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?” என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.

நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான். அவர் எட்டிப் பார்க்கும் போது அவனை நரகின் மத்தியில் காண்பார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்” என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார். "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

📚அல்குர்ஆன்: 37 : 51-57 

மறுமையை நம்பிக்கையற்று பூமியில் வாழ்ந்தவர்களுடன் உலகில் நட்பு கொண்டு வாழ்ந்தவர்கள், மறுமையில் தனது நண்பனை நரகில் கண்டு தன்னையும் வழிகெடுக்க முயன்றாய் இறைவன் தான் என்னை காப்பாற்றினான் என்று கூறும் வசனம் நமக்கு எச்சரிக்கையூட்டும் வசனமாகும். இன்று மறுமையை நம்பினோம் என வாயளவில் சொல்லும் பல முஸ்லிம்களே அதற்கு தக்க வாழ்வதில்லை. உலக பற்றினால் "வாழும் வரை வாழ்க்கை'' என தூண்டுதலால் வசனங்கள் பேசிக்கொண்டு தீய நண்பர்களின் இஸ்லாத்திற்கு முரணாக உலகில் மூழ்குவோரும் உண்டு. இதுவும் மறுமையை நிராகரிப்பதாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

📌 நேசிக்க முதல் தகுதி படைத்தவர் நபிகளார்..

أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ﴿16

 

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் விடுத்து (வேறு) அந்தரங்க நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளாதவர் யார் என்பதையும், உங்களில் போரிடுவோர் யார் என்பதையும் அல்லாஹ் அடையாளம் காட்டாத நிலையில் விடப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா ? நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

📚 அல்குர்ஆன்  9:16


إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمْ رَٰكِعُونَ ﴿55
அல்லாஹ்வும், அவனது தூதரும், இறைநம்பிக்கை கொண்டோருமே உங்களது பொறுப்பாளர்கள். (இறைநம்பிக்கை கொண்ட) அவர்கள் பணிந்தவர்களாகத் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள்.

📚 அல் குர்ஆன் - 5 : 55

 عَن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ، وَوَلَدِهِ، وَالنَّاسِ

أَجْمَعِينَ

“உங்களில் யாரும் (முழுமையான) ஈமான் கொண்டவராக இருப்பதில்லை; நான் அவருக்கு அவரின் தந்தையைவிடவும், அவரின் மகனைக் காட்டிலும், மற்ற மனிதர்களை விடவும் அதிகம் பிரியமானவராக ஆகும்வரை.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚 ஸஹீஹ் அல்-புகாரி 15 📚 ஸஹீஹ் முஸ்லிம் 44

 

📌 நேசம் காட்ட நபிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் தாய்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர் “பிறகு யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “பிறகு, உன் தந்தை’’ என்றார்கள். 📚 புகாரி-5971

சிலர் வெளி மக்களிடமெல்லாம் நல்ல முறையில் பழகிக் கொண்டு தாயை கேட்பாரற்று விடுவார்கள். இது பிழையாகும். முதலில் குடும்பம் பிறகு இரத்த உறவுகளிடையே பேண வேண்டிய நேசம் அவசியமாகும். அதன் பின்னர் தான் வெளி நட்புகளெல்லாம்.

உலக நோக்கங்கள் எதுவுமின்றி அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசித்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பாக்கியங்கள் பற்றி கூறும் நபிமொழிகள் சில.

என்னை மதிப்பதற்காக ஒருவரையொருவர் நேசித்தவர்களுக்கு ஒளியால் மேடைகள் அமைக்கப்படும். நபிமார்களும், ஷுஹதாக்களும் அவர்களின் நிலைக்கு ஆசைப்படுவார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.📚 திர்மிதி 2312

=====================

அல்லாஹ் மறுமை நாளில், "என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..

📚 முஸ்லிம் : 5015

=====================

ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?" என்று அந்த வானவர் கேட்டார்.அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்" என்று சொன்னார்.

📚 முஸ்லிம் : 5016. 

=====================

(மார்க்கத்திற்காக). தம் சகோதரரை நேசித்தால் அவரை நேசிக்கிறேன் என்பதை அவரிடம் தெரிவித்து விடட்டும் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்...

அபுதாவூத் 4459. திர்மிதி 2314

=====================

"ஒருவரது ஈமானின் தரம் அவர் கொள்கின்ற நட்பில் வெளிப்படும்"

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.

2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது. 📚 முஸ்லிம் : 67

எனவே, உலக தேவைகளுக்காக மட்டுமே நட்புகொண்டு மறுமையில் இழப்பிற்கு உள்ளாகாமல், இஸ்லாம் வழிகாட்டிய பிரகாரம் நமது நட்பு வட்டத்தை அமைத்துக் கொண்டு ஈருலக வெற்றியை பெற முயல்வோம்..

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அந்த சிந்தனையை நல்குவானாக.. !


Comments

Popular posts from this blog

இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

ஆய்வும் தக்லீதும்