ஆடம்பரமும் அதன் அளவுகோலும் ஓர் ஆய்வு
இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் "ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும். திர்மிதி 2336.
அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும். இதை உணராமல் செல்வத்தை சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பார்த்து பேணுதலுடன் இருப்பவர்கள் கூட, அதை செலவழிக்கும் விடயத்தில் அவர்களையே அறியாமல் ஆடம்பரத்திலும் வீண் விரயத்திலும் வீழ்ந்து விடுகின்றனர். இது குறித்து நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) எனக்குப்பின் 'இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்' என்றார்கள்.
.
ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?' எனக் கேட்டதற்கு 'நன்மையான செல்வம் தீயதை உருவாக்காது தான், எனினும் கரையோரம் மேயும் கால்நடைகள் சிலநேரம் விஷசெடிகளை உண்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வது போல செல்வத்தை தவறாக அணுகுவது அழித்து விடும். நல்வழியில் செலவிடும் வரை அவனுக்கு அது நண்பனாக இருக்கும் என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்). அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) ஸஹீஹ் புகாரி : 1465
ஆடம்பரம் என்றால் என்ன ? செலவினங்களில் எது ஆடம்பரம் எது அத்தியாவசியம் என்கிற தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதே செல்வத்தால் ஏற்படும் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற ஓர் அளவுகோலை கொண்டு ஆடம்பரத்தை அளவிடுகின்றனர்.. சிலர் ஆடம்பரத்துக்கு அழகு படுத்தல் எனும் சாயம் பூசுகின்றனர், சிலர் எனக்கு இறைவன் அளித்த வசதிக்கு இது ஆடம்பரம் அல்ல என்று வியாக்கியானம் கூறுகின்றனர். இதனால் ஒருவருக்கு ஆடம்பரமாய் தெரிவது மற்றவருக்கு அத்தியாவசியமாகத் தெரிகிறது.
இதற்கு என்ன தான் தீர்வு ? குர்ஆன் ஒருபோதும் குழப்பமான கட்டளைகளை இடுவதில்லை. இந்த மார்க்கத்தின் இரவும் கூட பகலைப் போன்ற தெளிவானது.
எது வீண் விரயம் என்பதை குர்ஆன் தெளிவாகவே சொல்கிறது.
இஸ்ராஃப் என்பதன் அகராதி
يَـٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.!
அல் குர்ஆன் - 7 : 31
அழகு படுத்துங்கள், ஆடை அணியுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள் ஆனால் விரயம் செய்யாதீர்கள் என்று இந்த வசனம் கூறுகிறது. விரயம் என்பதை குறிக்க அல்குர்ஆனில் “இஸ்ராஃப்” என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.
إِسراف : (اسم)
مصدر أَسْرَفَ
இதன் அகராதி “தேவைக்கும் அதிகமாக'', ''வரம்பை மீறிய” ஆகிய அர்த்தங்கள் வரும். இதை புரிந்துகொள்ள அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள சில உதாரணங்களை கவனிக்கவும்.
الإِسْرافِ في المال: تَبْدِيدُهُ وَصَرْفُهُ بِلاَ فائِدَةٍ
📌 செல்வத்தில் "இஸ்ராஃப்" என்பது எந்த பயனும் இல்லாததற்கு செலவழிப்பது ஆகும்.
الإٍسْرافُ في الحَديثِ : الإِطالَةُ
📌 செய்தியில் அல்லது பேச்சில் "இஸ்ராஃப்" என்பது தேவை இல்லாத வார்த்தைகளை அதிகப்படியாக பேசுவது.
الإِسْرافُ في الأَكْلِ: الإِفْراطُ فِيهِ .
📌 உணவில் "இஸ்ராஃப் என்பது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதாகும்.
அதாவது இறைவன் இவ்வுலகில் சோதனைக்காக வழங்கியுள்ள அருட்கொடைகளை அத்தியாவசிய தேவைக்காக மட்டும் அல்லாமல், எந்த நன்மையும் இல்லாத வீணான காரியங்களுக்காக உலக ஆசாபாசங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு செலவிடுவதே அவனது அருட்கொடைகளில் தேவைக்கு அதிகமாக வரம்பு மீறுதலாகும்.
📌எளிமையாக முடிக்க முடிந்த அத்தியாவசிய செலவினங்களை, பெருமைக்காக, புகழ்ச்சிக்காக கூடுதலாக செலவிடுவது, மறுமையில் எந்த எந்த நன்மையும் பெற்றுத் தராத வீணான பொழுது போக்குகள், கேலிக்கைகளுக்கு செய்யப்படும் செலவினங்கள்,
பேசினால் நல்லதை பேசு அல்லது வாய்மூடி இரு என்கிற ஹதீஸை மறந்து அதிகப்படியாக பேசப்படும் வீணான பேச்சுக்கள்,
பசி தீர்ந்த பின்னரும் ருசிக்காக தேடித்தேடி செலவழித்து உண்பதையே ஒரு பொழுதுபோக்காக கொண்டிருப்பது இவை அனைத்தும் இஸ்ராஃப் ஆகும்.
அல்குர்ஆனில் இஸ்ராஃப் எனும் வார்த்தை :-
அல்குர்ஆனில் இஸ்ராஃப் எனும் வார்த்தை வீண் விரயம் என்கிற பொருளில் மட்டும்
பயன்படுத்தப்படவில்லை. பல இடங்களில் வரம்பு மீறல் என்கிற பொருளிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சில உதாரணங்கள் இங்கே.
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
“வரம்புமீறுவோரின் ஆணைக்குக் கட்டுப்படாதீர்கள்! அல் குர்ஆன் - 26 : 151
قَالُوا۟ طَـٰٓئِرُكُم مَّعَكُمْ ۚ أَئِن ذُكِّرْتُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ مُّسْرِفُونَ
நீங்கள் கெட்ட சகுனமாகக் கருதுவது உங்களுடன்தான் இருக்கிறது. உங்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டாலுமா (இவ்வாறு கருதுவீர்கள்)? அவ்வாறல்ல ! நீங்கள் வரம்பு மீறிய கூட்டத்தார்” என்று (அத்தூதர்கள்) கூறினர். அல் குர்ஆன் - 36 : 19
இந்த இரண்டு வசனங்களிலும் مُّسْرِفُونَ எனும் வர்த்தைக்கு வரம்பு மீறியோர் என மொழிபெயர்ப்பு இருப்பதை காணலாம். வரம்பு மீறி அநாவசியமாக செலவளித்தல் பின்வரும் வசனத்தில் தெளிவான ٱلْمُبَذِّرِينَ என்ற வார்த்தையிலும் குறிப்பிடப்படுகிறது.
إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَـٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِرَبِّهِۦ كَفُورًۭا
வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாக உள்ளனர். ஷைத்தானோ தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். அல்குர்ஆன் - 17 : 27
ஆக, "இஸ்ராஃப்" என்றால் நாம் நினைப்பது போல் ஏதோ உணவை தூக்கி கீழே கொட்டுவது மட்டும் அல்ல. உலக ஆசையின் காரணமாக தேவையை விட அதிகம் சாப்பிடுவது, தேவையை விட அதிகம் தேவையற்றவைகளை பேசுவது, தேவையை தாண்டி அநாவசியமாக பயனற்ற ஆடம்பரங்களுக்காக செலவழிப்பது இவையனைத்தும் "இஸ்ராஃப்" ஆகும்.
உணவு படுக்கை விரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்களில் நபிகளார் எப்படி வழிகாட்டியுள்ளார்கள் என்பதற்கு கீழ்க்காணும் செய்திகள் சான்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்" என்று கூறியதைக் கேட்டேன். ஸஹீஹ் முஸ்லிம் : 4182.
நபிகளார் கேட்ட துஆ:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைப் போக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5681.
ஆட்சியாளராகவும், நபியகவும் இருந்த நபிகளார் ஏன் போதுமான அளவு மட்டும் உணவை கேட்க வேண்டும் ? பசி தீர்ந்த பின்னரும் ருசிக்காக தேவைக்கு அதிகமாக சாப்பிடும் உணவும் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது அதாவது இறைவனின் அருட்கொடையை னம் தேவையை தாண்டி வரம்பு மீறி உண்பது தான். எனவே தான் வகைவகையான உணவு பானங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்களை நபிகளார் உம்மத்தில் தீயவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :
எனது உம்மத்தில் சிலர் இருக்கிறார்கள்,அவர்கள் வகைவகையான உணவுகளை உண்கிறார்கள், வகை வகையான பானங்களை குடிக்கிறார்கள், வகை வகையான ஆடைகளை அணிகிறார்கள். பேச்சிலே பெருமையடிப்பார்கள் அவர்கள் தான் என் உம்மத்தின் தீயவர்கள். முஃஜமுல் கபீர் 7512
அப்படியானால் ருசியான உணவு பானங்களை உண்ணக்கூடாதா ? நபிகளாரை போல ரொட்டியும் பேரிச்சையும் தான் உண்ண வேண்டுமா என்றால் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது ருசியான உணவு உண்பது என்பது வேறு அவற்றிலேயே ஈடுபாடு கொண்டு செலவழிப்பது வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் துன்யாவில் அப்படி உண்டு சுகித்து வாழும் நோக்கத்திற்காக அனுப்பபட வில்லை.
வீட்டு உபயோக பொருட்களில் கவனம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) :-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஒரு விரிப்பு ஆணுக்குரியது. மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது. மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4232.
இந்த நபிமொழி படுக்கை விரிப்பு குறித்து மட்டும் கூறினாலும் இது வீட்டு உபயோக பொட்ருகள் அனைத்துக்கும் பொருந்தும். வீட்டு உபயோக பொருள்கள் நாம் தேவைக்கு வாங்கி பயன்படுத்துவது அத்தியாவசியமாகும். ஆனால் நாமும் பயன்படுத்தாமல் பிறருக்கும் கொடுக்காமல் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதே ஷைத்தானுக்குரியது என்று நபி ஸல் நமக்கு கூறுகிறார்கள்.
இன்று நம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை விட எப்போதாவது தேவைப்படும் தேவைப்படும் என்று தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும் பொருட்கள், தான் அதிகம். நாம் உபரியாக உபயோகமில்லாமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள் இன்னொருவனிடம் ஒன்று கூட இல்லாத அடிப்படை தேவையாக இருக்கும். அவற்றை அறிந்து நம் தேவை நிறைவேறிய பின்னர் தேவை உடையவர்களுக்கு தேடி சென்று கொடுத்து உதவுவதே செல்வத்தில் நமக்குள்ள சோதனையே ஆகும். எனவே தான் தர்மங்களை கேட்பவருக்கும் கேட்காதவருக்கும் உரிமை உள்ளது என அல்லாஹ் கூறுகிறான்.
ஏழைகளின் உரிமை
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ⭘ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும், (யாசிக்காத) ஏழைக்கும் நிர்ணயிக்கப்பட்ட உரிமை உண்டு. அல் குர்ஆன் - 70 : 24,25
وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
அவர்களின் செல்வங்களில் இரந்து கேட்போருக்கும், (கேட்காத) ஏழைகளுக்கும் உரிமை உண்டு. அல் குர்ஆன் - 51 : 19
இதை அறியாமல் நம் தேவைகள் நிறைவேறிய பின்னரும் செல்வம் இருக்கிறதே என்பதற்காக வீணான ஆடம்பரங்களுக்காக, உலக உல்லாசங்களுக்காக செலவழிப்பது குறித்தும், நமது ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்களில் பயன்படுத்தும் சாதனகளை விட பயன்படுத்தாமல் சேர்த்து வைக்கும் பொருட்கள் ஷைத்தானுக்குரியது என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
எப்போது தேவைக்கு அதிகமாக செலவழிக்கிறோமோ அங்கெல்லாம் பெருமை, பகட்டு, அல்லது உலக ஆசைகளுக்காக தவிர செலவழிக்கப்படுவது இல்லை. வீட்டு செலவினங்கள், உபயோகப் பொருட்கள் தொடங்கி திருமணச்செலவு வரைக்கும் எல்லா செலவிலும் இதை நீங்கள் காணலாம்.
அழகுபடுத்துதலும், அநாவசிய செலவும்..
ஆடம்பரம் கூடாது, எளிமையே மூஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும், அதுவே நபியின் சுன்னாவாகும் என நாம் கூறும்போது, அல்லாஹ் அழகானவன் அழகை விரும்புகிறான் என்று நபிமொழி உள்ளதே அழகுபடுத்திக் கொள்ள செலவழிக்கக் கூடாதா எனும் கேள்வி எழுகின்றது.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வசனத்தில் விரயம் செய்யாதீர்கள் என்ற தடை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்ற கட்டளையோடு இணைந்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அழகுபடுத்தலுக்கும் அநாவசிய செலவுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது.
அழகு படுத்துதல் எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றால், ஏன் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா ரலி வீட்டில் அழகான திரைச்சீலை தொங்கியதால் கோபித்துக் கொண்டு திரும்பினார்கள் என்பதை சிந்திக்கவும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பி விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு ? (அதனால்தான் திரும்பி வந்து விட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி – 2613
அழகை அல்லாஹ் விரும்புவதாக கூறிய நபிகளார் தான் அலங்காரத் திரைச்சீலையை வெறுத்து வெளியேறினார்கள். திரைச்சீலை ஹராம் என்பதால் இல்லை.
ஆனால், உடுத்த ஆடையே இல்லாத மக்கள் வாழும் ஊரில், அழகுக்காக தொங்க விடுவதை நபிகளார் விரும்பவில்லை என்பதே நபி (ஸல்) அவர்களின் வெறுப்பிற்கு காரணம் ஆகும். எனவே தான் அதை விட தேவையுடைய வேறொருவருக்கு கொடுத்தனுப்ப சொல்கிறார்கள்.
பெருமையின்றி ஒருவரின் ஆடையும், காலணியும், அழகானதாக அணிந்து கொள்வது தவறில்லை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள் பருகுங்கள், தர்மம் செய்யுங்கள், நல்ல ஆடை அணியுங்கள்.. பெருமையின்றியும் விரயம் இன்றியும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடம் அவனது அருள் காணப்படுவதை விரும்புகிறான்.
நூல் அஹ்மது: 6708
ஆனால் அதற்காக உறவுகளிலும் அண்டை வீட்டாரிலும் அடிப்படை தேவைக்கே இல்லாத மக்களை கண்டுகொள்ளாமல், லட்ச ரூபாய்க்கு ஒருவன் ஆடை எடுத்துப் போட்டுக் கொண்டு, நான் ஆடம்பரத்துக்காக அணியவில்லை, அழகுக்காக அணிந்தேன், இந்த ஒரு லட்சம் எனக்கு எளிதான செலவு தான் என ஒரு பணக்காரன் சொன்னால் அதை சரி காணும் அளவுக்கு இஸ்லாம் தெளிவற்ற மார்க்கமல்ல.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் புகாரி : 6446 6447.
ஆக அல்லாஹ் அழகை விரும்புகிறான் என்பதன் பொருள் அந்த அழகு படுத்துதல் மார்க்க வரையறைக்குள், இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் வகையில் அமைய வேண்டும். ஒரு பெண் தன் சிகையை சீவி அலங்கரிக்கலாம் . பார்லர் சென்று பத்தாயிரம் செலவிலும் அலங்கரிக்கலாம். முன்னது அலங்காரம், பின்னது ஆடம்பர செலவு என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
ஆடை அலங்காரங்களில் மட்டுமல்ல இந்த கட்டளை வீடு கட்டுவது, பள்ளி வாசல் கட்டுவது, வாகனம் வாங்குவது மற்றும் அவற்றை அலங்காரம் செய்வது அனைத்தையும் குறிக்கும்.
அழகு படுத்துவதற்கும் ஆடம்பரம், உல்லாசம் என உலகில் சுகபோகமாக வாழ்வதற்கும் ஆசை படும் முன், அடிப்படை தேவைக்கே அருகில் உள்ள மக்கள் அல்லல் படுவதை வசதி படைத்தோர் கவனிக்க வேண்டும். நமது ஆடம்பரத்தை விட பிறரின் அடிப்படை தேவைக்கே முன்னுரிமை வழங்கி நல்வழியில் செலவிட வேண்டும்.
நடைமுறை உதாரணங்கள் சில.
📌 வீட்டை கட்டிய பிறகு வெறும் அழகுக்காக அதன் எலிவேஷனுக்கு லட்சக் கணக்கில் செலவழிக்கும் நபர்கள், சரியான வீடுகூட இல்லாதவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து விட்டார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
📌 பள்ளிவாசலை கட்டிய பின்னர் வெறும் அழகுக்காக அதன் முகப்பை அலங்கரிக்கவும், வெளிச்சத்திற்காக மின் விளக்குகள் என்பதை தாண்டி அலங்காரத்திற்காக பலவர்ண மின் விளக்குகளால் மிளிர வைக்க தனியாக செலவழிக்கும் நபர்கள், கூரைப் பள்ளியில் தொழுவோரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை கவனிக்க வேண்டும்.
.
📌 ஏன் ஏசி போடுவதற்கும், கார்பெட் விரிப்பதற்கும், பலவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்க வசதிபடைத்த எத்தனையோ பள்ளிவாசல் நிர்வாகங்கள், பள்ளி இமாமின் சம்பளத்தில் கஞ்சத்தனம் செய்வதை காண்கிறோம். இரண்டில் எது அத்தியாவசியம் என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை.
📌பயன்படுத்த ஒரு நல்ல ஃபோன் வைத்திருப்பவர் அதை போதுமாக்கிக் கொள்ளாமல், ஐஃபோன் அடுத்த மாடல் ரிலீஸ் ஆகிவிட்டதே என்பதற்காக ஓடி சென்று வாங்குவதில் பெருமிதம் கொள்கின்றனர்.
📌 வாகனம் என்பது போக்குவரத்து தேவைக்காக என்கிற நிய்யய்யத்தில் மட்டும் பார்ப்பவர் ஒரு நல்ல மைலேஜ் தரும் வாகனம் வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பார். போக்குவரத்து தேவையையும் தாண்டி குறிப்பிட்ட உயர் ரக ரேஸிங் பைக்குகள், கார்கள் வாங்கினால் எனக்கு பெருமை, அதை ஓட்டி செல்லும்போது நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பதில் தனக்கொரு பெருமிதம் என்று கருதுவோர் செலவு அதிகமுள்ள வாகனத்திற்கு முன்னுரிமை வழங்கி, தேவையை விட பெருமைக்காக வாங்குவார்கள். இதை பலர் ஆடம்பரமாகவே கருதுவதில்லை.
📌பசிக்காக மட்டும் சாப்பிட்ட காலம் மாறி ருசிக்காக சாப்பிடுவதையே வாடிக்கையாக கொண்டு ருசியான ஒவ்வொரு இடமாக தேடிச் சென்று அதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை பலர் ஆடம்பரமாகவே கருதுவதில்லை.
📌 உறவுகள், சுக துக்க நிகழ்வுகள், வியாபாரம், கல்வி சுற்றுலா போன்ற அத்தியாசிய தேவைக்காக பயணம் செய்த காலம் போய், ரீல்ஸ்களை பார்த்து கடும் குளிரான சீதோசன நிலைகளை அனுபவிக்க சுற்றுலாக்கள் செல்லப்படுகிறது. ஆனால் நபிகளாரோ கடும் குளிரையும், வெயிலையும் நரகத்தின் மூச்சுக் காற்று என்று கூறினார்கள்.
இதை சிந்திக்காமல் வெறும் க்ளைமேட் என்ஜாய்மெண்ட்டிற்காக லட்சக் கணக்கில் செலவழித்து ஊர் ஊராக லக்ஸரி வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவோர் அந்த லட்சங்கள் பல குடும்பங்களின் அத்தியாவசிய தேவை என்பதை சிந்திப்பதில்லை.
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةًۭ تَعْبَثُونَ⭘ وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
“ஒவ்வோர் உயரமான இடத்திலும் அடையாளச் சின்னங்களை எழுப்பி வீணான காரியங்களைச் செய்கிறீர்களா? நீங்கள் நிரந்தரமாக வாழலாம் என்பதற்காக மாளிகைகளை எழுப்புகிறீர்களா?” அல் குர்ஆன் - 26 : 128,129
டூரிஸம், வீணான என்ஜாய்மெண்ட், மலை உச்சி ரெசார்ட்களை நினைவு படுத்துகிறது இவ்வசனம்.
மொத்தத்தில் இஸ்லாம் சொன்ன பிரகாரம் வாழாமல், இந்த உலகம் நமக்கு எதையெல்லாம் கவர்ச்சியாக காட்டி இழுத்து செல்கிரதோ அதன் படியே வாழ்வது செல்வத்தின் சோதனையில் நம்மையே அறியாமல் மூழ்க செய்கிறது.
காரூனின் வரலாறு தரும் படிப்பினை
إِنَّ قَـٰرُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَءَاتَيْنَـٰهُ مِنَ ٱلْكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ إِذْ قَالَ لَهُۥ قَوْمُهُۥ لَا تَفْرَحْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْفَرِحِينَ
‘காரூன்’ மூஸாவின் சமுதாயத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவர்களிடம் அவன் வரம்பு மீறினான். அவனுக்கு நாம் செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோம். அதன் சாவிகள், பலம் பொருந்திய கூட்டத்தாருக்குப் பாரமாக இருக்கும். அவனிடம், “நீ ஆணவம் கொள்ளாதே! ஆணவக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” என்று அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக !
وَٱبْتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ ٱلْفَسَادَ فِى ٱلْأَرْضِ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ
“அல்லாஹ் உனக்கு வழங்கியதில் மறுமை வீட்டைத் தேடிக் கொள்! இவ்வுலகில் உனது பங்கை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு உதவியது போல நீயும் உதவி செய்! பூமியில் குழப்பம் விளைவிக்க விரும்பாதே! குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” (என்றும் கூறினர்.)
قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍ عِندِىٓ ۚ أَوَلَمْ يَعْلَمْ أَنَّ ٱللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِۦ مِنَ ٱلْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةًۭ وَأَكْثَرُ جَمْعًۭا ۚ وَلَا يُسْـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلْمُجْرِمُونَ
“என் அறிவுத்திறமைக்காகவே இது எனக்கு வழங்கப்பட்டது” என்று அவன் கூறினான். இவனுக்கு முன்னர், இவனைவிட அதிக வலிமையைக் கொண்ட, (செல்வத்தை) அதிகமாகக் குவித்து வைத்திருந்த பல தலைமுறையினரை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் பாவச் செயல்களைப் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ فِى زِينَتِهِۦ ۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا يَـٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ أُوتِىَ قَـٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٍۢ
அவன், தன் அலங்காரத்துடன் தனது சமுதாயத்தாரிடம் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்புவோர், “காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று நமக்கும் இருந்திருக்க வேண்டுமே ! அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினர்.
وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ ٱللَّهِ خَيْرٌۭ لِّمَنْ ءَامَنَ وَعَمِلَ صَـٰلِحًۭا وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّـٰبِرُونَ
“உங்களுக்குக் கேடுதான்! இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோருக்கு அல்லாஹ்வின் கூலியே மிகச் சிறந்ததாகும். பொறுமையாளர்களைத் தவிர (வேறெவருக்கும்) அது கொடுக்கப்பட மாட்டாது” என்று கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்.
فَخَسَفْنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلْأَرْضَ فَمَا كَانَ لَهُۥ مِن فِئَةٍۢ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مِنَ ٱلْمُنتَصِرِينَ⭘
அவனையும், அவனது வீட்டையும் பூமிக்குள் புதையுண்டு போகுமாறு செய்து விட்டோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவும் எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. தன்னைத் தற்காத்துக் கொள்பவர்களிலும் அவன் இருக்கவில்லை.
وَأَصْبَحَ ٱلَّذِينَ تَمَنَّوْا۟ مَكَانَهُۥ بِٱلْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ ۖ لَوْلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۖ وَيْكَأَنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَـٰفِرُونَ⭘
நேற்று அவனது இடத்திற்கு ஆசைப்பட்டவர்கள், “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். அல்லாஹ் நமக்கு அருள்புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமிக்குள் புதையுறச் செய்திருப்பான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? நன்றிகெட்டவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவோராகி விட்டனர். அல் குர்ஆன் - 28 : 76 - 82
மூஸா (அலை) சமுதாயத்தின் காரூன் என்றொருவன். அவனது கஜானா சாவிகள் வலிமையான கூட்டத்தினருக்கே பாரமாக இருக்குமளவுக்கு பெரும் செல்வந்தன். அவன் மக்களிடையே ஆடம்பரமாக வலம் வருவதை பார்த்த உலக பற்றுள்ள மக்கள், இவனைப்போல நாமும் செல்வந்தனாக ஆகியிருக்க கூடாதா என்று ஆசைப்பட்டனர்.
ஆனால் கல்வியறிவு படைத்தவர்களோ இப்படி ஆசைப்படுவோருக்கு கேடுதான், மூஃமின்களுக்கு அல்லாஹ்விடமே சிறந்த கூலி உள்ளது, உலகத்தை பார்த்து ஆசைப்படாதீர்கள் என்று அந்த மக்களிடம் கூறியதோடு மட்டுமின்றி, காரூனை நோக்கியும் இந்த செல்வத்தில் பூமியில் செலவழிக்க வேண்டிய பங்கை மறந்து உலகில் ஆடம்பரமாக ஆணவமாக வாழாதே, மறுமைக்கான வீட்டை தேடிக்கொள் என்று உபதேசம் செய்கின்றனர்.
ஆனால் அவனோ இது எனது அறிவாலும் திறமையாலும் அடைந்துகொண்ட செல்வமாகும் என்று கூறி ஆடம்பர வாழ்வில் நிலைத்திருந்தான். ஆனால் அல்லாஹ்வோ அவனை பூமியில் புதையுற செய்து அவனுக்கு பாடம் புகட்டியது மட்டுமின்றி, நேற்றுவரை அவனைப் போல ஆக வேண்டும் என ஆசைப்பட்ட மனிதர்கள் எங்கே என அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான்.
இன்று செல்வம் வழங்கப்பட்டுள்ள பலரும் தர்மம் செய்வதை விடவும் ஆடம்பரம் செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கு காரணம், செல்வம் என்பது தன் அறிவாலும் திறமையாலும் உழைப்பாலும் அடைந்து கொண்டது என்று கருதுகின்றனர்..
அந்த சிந்தனை தான் நம் செல்வத்தை தாராளமாக தர்மம் செய்வதை விட்டு தடுக்கிறது,நான் கஷ்டபட்டு சம்பாதித்த என் செல்வம். இதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிப்பேன் என்கிற சிந்தணையை விதைக்கிறது.
அருட்கொடைகளின் நோக்கம் :-
நபிகளாரும் நபித்தோழர்களும் ஆடம்பரங்களை விரும்பாமல் எளிமையாக வாழ்ந்ததற்கு காரணம் அவர்கள் இந்த பூமியில் அருட்கொடைகள் வழங்கப்பட்ட நோக்கம் மறவாமல் வாழ்ந்தார்கள். நாம் அடிப்படையையே மறந்து வாழ்கிறோம்.
إِنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَـٰدُكُمْ فِتْنَةٌۭ ۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ
உங்கள் செல்வங்களும், பிள்ளைகளும் சோதனையே! அல்லாஹ், அவனிடமே மகத்தான கூலி உண்டு. -அல் குர்ஆன் - 64 : 15
இவ்வசனத்தில் அல்லாஹ் நமது செல்வம் குடும்பம் அனைத்துமே சோதனை என்று சொல்லிக் காட்டுகிறான்.
آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ ۖ فَالَّذِينَ آمَنُوا مِنكُمْ وَأَنفَقُوا لَهُمْ أَجْرٌ كَبِيرٌ
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! எதன் மேல் உங்களைப் பொறுப்பாளர்களாக அவன் ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு (நல்வழியில்) செலவிடுவோருக்கு பெரிய கூலி உண்டு. -அல்குர்ஆன் 57:7
இவ்வசனத்தில் செல்வத்தின் மீது நம்மை பொறுப்பாளர்களாக ஆக்கி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
ஹலாலான வழியில் கஷ்டபட்டு உழைத்து நாம் அடைந்துகொண்ட செல்வமாக இருந்தாலும் அதன் மீது பொறுப்பாளர்கள் தானேயன்றி உரிமையாளர்கள் அல்ல. எனவே தான் அருட்கொடைகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம்.
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 102:8
உலகில் நாம் செல்வத்தை அடைந்துகொள்ள கொடுக்கும் உழைப்பு என்பது நமது முயற்சி மட்டுமே. ஆனால் நம்மில் யாருக்கு அதிக செல்வத்தை வழங்க வேண்டும், யாருக்கு குறைத்து வழங்க வேண்டும் என்று தீர்மாணிப்பவன் இறைவன் தான்.
அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். அல் குர்ஆன் - 28 : 82
இந்த பூமியில் நமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அருட்கொடைகளும் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதற்கான சோதனையேயன்றி, நம் உழைப்புக்கான கூலியோ, அந்தஸ்தோ அல்ல. அதுவெல்லாம் மறுமையில் தான்.
செல்வத்தை என் அறிவாலும் உழைப்பாலும் அடைந்தே என்போர் ஒரு எதார்த்தத்தை சிந்திக்கட்டும். உழைப்பவர்கள் எல்லோரும் செல்வத்தை அடைந்து கொள்கின்றனரா ? ஒரு கடைத்தெருவில் அனைவருக்கும் ஓரே மாதிரியான வருமானம் கிடைப்பதில்லை. உலகில் பெருமளவு உழைப்பை கொடுக்காமலே செல்வந்தர்களாக இருப்போரும் உண்டு. காலம் முழுக்க உழைத்தும் ஒதுங்க இடம் கூட இல்லாமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்களும் உண்டு.
இதற்கு காரணம் சிலருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுத்து சோதிக்க நாடுகிறான். சிலரை கொடுக்காமல் சோதிக்க நாடுகிறான்.
செல்வந்தர்களுக்கு இருக்கும் சோதனை அவர்கள் அந்த செல்வத்தின் மீது பற்றில்லாமல் தேவைக்கு மட்டும் செலவழித்துக் கொண்டு நல்வழியில் செலவிடுவதற்கு அதிக முன்னுரிமை வழங்கி மறுமைக்காக வாழ்கிறார்களா என்பது தான். ஏழைகளுக்கு இருக்கும் சோதனை அவர்கள் ஏழ்மையிலும் திருடாமல், மோசடி செய்யாமல், இருப்பதைக் கொண்டு நேர்மையாக வாழ்கிறார்களா என்பதாகும்.
இன்னும் சொல்லப்போனால் ஒருவனுக்கு செல்வம் வழங்கப்படுவதே அவனை சுற்றியுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவியும் ரிஸ்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். - புகாரி 2896.
அதாவது அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை வழங்கி பூமியில் செழிப்பாக ஆக்குவதே அவர்களை சுற்றியுள்ள பலவீனர்கள் ஏழைகளின் பொருட்டால் தான். அவர்களை கொண்டே செல்வந்தர்களை சோதிக்க நாடுகிறான் என்று கூறுகிறார்கள்.
இவற்றையெல்லாம் சிந்திக்காமல் வாழ்வதால் தான் தாம் சம்பாதிக்கும் செல்வம் தமக்குரியது என மனிதன் கருதுகிறான்..
முஆத் இப்னு ஜபல் ரலி கூறினார்கள் நபி ஸல் அவர்கள், தன்னை யமனுக்கு அனுப்பிய போது, "ஆடம்பரத்தைக் குறித்து உன்னை எச்சரிக்கிறேன். அல்லாஹ்வின் அடியார்கள் பகட்டானவர்களாக இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
முஸ்னது அஹ்மது: 22105
------------------
நமது வாட்சப் சானலைப் பின்தொடர..
https://whatsapp.com/channel/0029VbA02EB2phHJ62InjR38
Comments
Post a Comment