இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

இறைவனால் சோதனைக்காக வழங்கப்பட்ட அருட்கொடைகள் பலவிதம்.

சிலருக்கு பதவி அதிகாரங்களையும், சிலருக்கு செல்வ செழிப்பையும், சிலருக்கு மக்கள் செல்வாக்கையும், சிலருக்கு அறிவாற்றலையும் இறைவன் பூமியில் சோதனையாக வழங்கியுள்ளான்.இந்த அருட்கொடைகள் யாவும் அவர்களின் சிறப்பு தகுதிகளோ, சிறப்பு அந்தஸ்தோ அல்ல, குறிப்பிட்ட கால சோதனைக்காக வழங்கப்பட்டவை. இவற்றை எந்தெந்த வழியில் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என இஸ்லாம் கூறுகிறது.

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ 

பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

அல் குர்ஆன் -   102 : 8 

மேலும் பூமியில் மனிதர்களுக்கு இறைவன் இந்த அருட்கொடைகளை வழங்கியிருப்பதே, அவர்களை சுற்றியுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவியும் ரிஸ்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். - புகாரி 2896.

எனவே அந்த அருட்கொடைகளை வைத்து யாரும் பெருமையடிப்பதும் , மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்ககவும் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கவனமாக மனிதர்களுக்கு வழிகாட்டி இருக்கிறது. 

இன்னும் சொல்லப்போனால் குலத்தாலும், நிறத்தாலும், செல்வத்தாலும், அதிகாரத்தாலும் ஏற்கனவே மக்களிடையே இருந்த பாகுபாடுகளை சமன் செய்ய வந்த மார்க்கம்  தான் இஸ்லாம் ஆகும். எனவே தான் மற்ற சமூகங்களை காட்டிலும் முஸ்லிம்களிடையே இந்த சமநிலையும், சகோதரத்துவமும் பெருமளவு பேணப்படுகிறது. இந்த சமநிலையை அவர்களையே அறியாமல் கெடுக்கும் காரியங்களில் ஈடுபடுவோர் தான் மெட்டீரியலிச மனிதர்கள். அதாவது உலகாதாய மனிதர்கள். 

                                  


யார் அந்த உலகாதாய மனிதர்கள் ?

உலகில் ஒருவர், அவரின் நன்னடத்தைக்காக அல்லாமல், அவரின் செல்வம், செல்வாக்கு, பதவி, அந்தஸ்து ஆகியவற்றை கவனித்தே முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காண்கிறோம்.

இஸ்லாம் அல்லாத இடங்களில் ஒரு அதிகாரியும் அவருக்கு கீழ் பணிபுரிபவரும் சமமாக கருதப்படுவது இல்லை. ஒரு அலுவலக மேலாலரும் அங்கு தேநீர் தருபவரும் சமமாக மதிக்கப்படுவது இல்லை.குடும்ப உறவுகளில் செல்வந்தரும் ஏழைகளும் சமமாக மதிக்கப்படுவதில்லை.இதற்கு காரணம்  மக்களிடம் இருக்கும் மெட்டீரியலிஸ சிந்தனை..

இந்த சிந்தணை உடையவர்கள் செல்வம், செல்வாக்கு பதவியில் உள்ளவர்களிடம் ஒரு மாதிரியும், இது எதுவுமில்லாத பாமர மக்களிடம் வேறு விதமாகவும் நடந்து கொள்வார்கள். இவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கும் அன்பையும், மதிப்பையும் கூட உலகில் பணம் அந்தஸ்து எதுவுமில்லாத பாமர மக்களிடமும், பலவீனர்களிடமும் காட்ட மாட்டார்கள்.

குடும்ப உறவுகள், ஆட்சிபீடங்கள், பள்ளிவாசல்கள், இயக்கங்கள், அறக்கட்டளைகள் போன்ற மக்கள் கூட்டாக செயல்படும் நிர்வாகங்களில் அப்படியான பாகுபாடுகள் பார்க்கப்பட்டால் சமூகத்தில்  சப்தமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றத்தாழ்வுகளையும் குழப்பங்களையும் உண்டாக்க துவங்கும்.

இஸ்லாம் கூறும் சமநிலை..

📌 மூஃமின்களை நபிகளார் ஒரு கட்டிடத்தோடு ஒப்பிடுகிறார்கள். அங்கு இஞ்சினியராக உள்ளவரும் சித்தாளாக உள்ளவரும் அல்லாஹ்வின் பார்வையில் சமமாக தான் கருதப்படுவார். காரணம் இருவரும் அல்லாஹ்வின் அடிமைகளே.

📌 கஃபாவுக்கு தங்க போர்வை போர்த்தும் மன்னர் குடும்பம் என்பதாலேயே, அங்கு கழிவறை சுத்தம் செய்பவரை விட இறைவனின் பார்வையில் உயர்ந்தவர் என்றாகிவிட மாட்டார்கள். இருவரும் அவனது அடிமைகளே.

📌 ஒரு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் சட்ட ஒழுங்குக்காக குடிமக்கள் கவர்னர்களுக்கும், கலீஃபாவுக்கும் கீழ்ப்படிந்து நடப்பர். அதை மார்க்கம் வலியுறுத்துகிறது. அதே வேலையில் அந்த பதவியில் இருப்பதாலேயே குடிமக்களை விட கவர்னர்களோ, கலீஃபாவோ உயர்ந்தவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என ஆகிவிட மாட்டார்கள். காரணம் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் அவனது அடிமைகளே.

மக்களில் சிறந்தவர்கள் இறையாசசவாதிகளே.

إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ 

உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார்.  (49:13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,,

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْحَسَبُ الْمَالُ وَالْكَرَمُ التَّقْوَى ‏"‏ ‏.‏

( பொதுமக்கள் பார்வையில் ) பொருளாதாரமே நன்மதிப்பாக உள்ளது( உண்மையில் ) கண்ணியம் என்பது இறையச்சமே ஆகும் .

சமுரா பின் ஜுன்துப் ( ரலி ) ,நூல் : ஸுனன் இப்னுமாஜா 4219 தரம் : ஸஹீஹ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,,

"அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்."

(ஸஹீஹ் முஸ்லிம் : 5012)

உலகில் புகழ், அந்தஸ்து செல்வம், செல்வாக்கு, கிடைக்கப் பெற்றவர்களை விடவும் இது எதுவுமில்லாத இறையச்சமுடைய பாமர மக்கள், இறைவனுக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்..

(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம்  தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.

அபூஹுரைரா (ரலி)., ஸஹீஹ் முஸ்லிம் : 5116

ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். 

பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஸஹீஹ் புகாரி : 5091.

நபிகளாரின் காலத்தில் பெரும் வல்லரசுகளான ரோமாபுரி மன்னனையும், கிஸ்ராவையும் எதிர்த்து மக்கள் தங்கள் உரிமைகளை கேட்பதும், அவர்களை கேள்வியெழுப்புவதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

ஆனால் அதே காலத்தில் நபியாகவும், ஆட்சியாளராகவும் இருந்தபோதும் தனக்கான உரிமைகளை உரிமையோடு கேட்டு பெறவும், ஆட்சியாளரை நோக்கி கேள்வியெழுப்பும் சுதந்திரத்தை வழங்கி, மன்னராட்சி மூலம் மனிதர்களிடையே இருந்த இந்த ஏற்றத்தாழ்வுகளை குழிதோண்டி புதைத்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மக்களாட்சியை இஸ்லாம் தான் முதன்முதலில் உலகுக்கு தந்தது.

எனவே தான் பெரும் இஸ்லாமிய வல்லரசை உருவாக்கிய உமர் ரலி அவர்களை நோக்கியே சாதரண பெண்கள் கூட மஹர் விஷயத்தில் கேள்வியெழுப்ப முடிந்தது.ஏனெனில் இங்கே மக்களில் சிறந்தவர் என்பதற்கான அளவுகோல் தக்வாவும், அதை வெளிப்படுத்தும் நன்னடத்தையும் தானே தவிர அவரது பிறப்போ, நிறமோ, செல்வமோ, செல்வாக்கோ அவரது பட்டங்களோ பதவிகளோ அல்ல..

உலக அருட்கொடைகளை வைத்து மனிதர்களிடையே உயர்வு தாழ்வு காண்பது ஜாஹிலியா கால பண்பாகும்.இஸ்லாத்தை ஏற்ற பின்னர் தலைவனும் அல்லாஹ்வின் அடிமை, தொண்டனும் அல்லாஹ்வின் அடிமை, பிற மதங்களில் இருப்பது போல இங்கே நாட்டான்மை முறைக்கோ பன்னையார் முறைக்கோ அனுமதியில்லை என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

இந்த எண்ணம் இருப்பவர்களால் தான், 

📌 ஏதேனும் மக்களை நிர்வகிக்கும் பதவிகளில் உள்ளவர்கள் இந்த பதவி ஒரு சோதனை தானேயன்றி அதிகாரம் அல்ல என்கிற உணர்வுடன் மக்களிடம் பணிவுடன் நடக்க முடியும்..

📌செல்வந்தர்கள் ஏழைகளை இழிவாக கருதாமல் இந்த செல்வம் ஒரு சோதனை, ஏழைகளால் தான் தமக்கு செல்வம் வழங்கப்படுகிறது என்கிற உணர்வுடன் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவார்கள்..

📌 பலமானவர்கள் தங்களின் பலம் ஒரு சோதனை என்பதை உணர்ந்து பலவீனர்களை பாதுகாப்பார்கள். பூமியில் ஆணவமின்றி நடப்பார்கள்..

📌 குடும்ப உறவுகளிடையே ஏழைக்கு ஒரு பார்வை, பணக்காரனுக்கு ஒரு பார்வை என இல்லாமல், அனைவரும் என் இரத்த உறவுகள் என்கிற உணர்வுகள் நிலைகொள்ளும். பாகுபாடுகள் கலையப்பட்டு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளும், குழப்பங்களும் தவிர்க்கப்படும்..

உமர் ரலி அவர்களிடம் நபி (ஸல்) சொன்ன செய்தியும், கலீஃபா உமர் ரலி அவர்களின் நடத்தையும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

யமன்வாசிகளின் "முராத்" (மூலக்) கோத்திரத்தின் "கரன்" குலத்தை சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்.  அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். 

(உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறி இருந்தார்கள்.

உமர் ரலி அவர்களும் அவர்களின் ஆட்சி காலத்தில் யமன் வாசிகள் மதீனா வந்தால் உங்களில் உவைஸ் பின் ஆமிர் இருக்கிறாரா என விசாரிப்பார். அவ்வாறே ஒருமுறை உவைஸ் (ரஹ்) அவர்களை நேரில் கண்டு நபிகளார் அவரைப் பற்றி கூறிய சிறப்புகளை எடுத்துரைத்து தனக்காக பாவமன்னிப்பு கோருமாறு கேட்டுக்கொண்டார்கள்.

பின்னர் உங்கள் பகுதி "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?" என்று கேட்டார்கள். 

அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "வேண்டாம், சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறிவிட்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் மதீனாவுக்கு வரும் கூஃபாவாசிகளிடமும் உவைஸ் பின் ஆமிர் ரலி பற்றி உமர் ரலி அவர்கள் அக்கரையோடு விசாரிக்க தவறியதில்லை.

அவர் எளிமையான நிலையில் வாழ்கிறார் என சொன்னபோது அவரின் சிறப்பு பற்றி உமர் ரலி அவர்கள் கூஃபாவாசிகளிடம் கூறவே அவரது புகழ் கூஃபா முழுக்க பரவியது. மக்கள் அவருக்கு நல்ல போர்வை உள்ளிட்ட பொருட்களை கொண்டு அன்பளிப்பு செய்தனர்.

ஆனால் அவரோ அவற்றையெல்லாம் விரும்பாமல் தனித்து சாதாரணமாக வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டார்.(ஹதீஸ் சுருக்கம்)

ஸஹீஹ் முஸ்லிம் : 4971.

எளியவரும், எளியவர்களுடனே வாழ்பவரும், யாரென்றே அறியப்படாதவருமான யமன் வாசி உவைஸ் அல் கர்னி (ரஹ்) அவர்களிடம்,யாருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி ஸல் சான்றளித்தார்களோ அப்படிப்பட்ட கலீஃபாவான உமர் ரலி  அவர்களை  பாவமன்னிப்பு கேட்கச் சொல்லி இருக்கிறார்கள் நபி ஸல் அவர்கள்.

அல்லாஹ் நம்மிடம் பார்ப்பது இவர் நிர்வாகியா ? போஸ்டர் ஒட்டுபவரா ? இவன் தலைவனா, இவன் தொண்டனா என்பதை அல்ல.யாருடைய உள்ளத்தில் எவ்வளவு இறையச்சம் உள்ளது, யாரிடம் அந்த இறையச்சத்தை வெளிப்படுத்தும் நன்னடத்தை உள்ளது என்பதைத் தான்.

முஸ்லிம்களின் அறியாமை:

இஸ்லாம் கூறும் இந்த சமநிலையை உலகுக்கு போதிக்க வேண்டிய மூஸ்லிம்களிடமே இன்று எந்தளவு பாகுபாடுகள்.

இவர் என் மஹல்லா (அல்லது என் இயக்க) உறுப்பினர் இவர் உறுப்பினர் அல்லாதவர், இவர் பதவியில் உள்ளவர், இவர் பதவியில் இல்லாதவர், இவர் பெரிய மௌலவி, இவர் சின்ன மௌலவி, இவர் ஸ்டார் பேச்சாளர், இவர் சாதா பேச்சாளர், இவர் மாநில நிர்வாகி, இவர் மாவட்ட நிர்வாகி, இவர் வசதி படைத்தவர், இவர் ஏழை என்று, ஒவ்வொருவருக்கும் அவரின் உலக நிலையை வைத்து கூட்டியும் குறைத்தும் வேறுபடுத்தி முக்கியத்துவம் தரப்படுவதை காணலாம். 

மனிதர்களாக ஏற்ப்படுத்திக் கொண்ட இந்த நிர்வாக படித்தரங்கள் ஒரு நிர்வாக ஒழுங்குக்காக மட்டும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை வைத்து சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளில் பாகுபாடு பார்க்கும் போது தான் மூஃமின்களிடையே இருக்க வேண்டிய சமநிலையும் சகோதரத்துவமும் கேள்விக் குறியாகின்றது..

சின்ன சின்னதாக ஆரம்பிக்கும் இந்த மெட்டிரியலிஸ சிந்தணை நாங்கள் 1000 தலைக்கட்டு கொண்ட பெரிய மஹல்லா, நீ சின்ன மஹல்லா, நான் பேரியக்கம், நீ சிறிய லெட்டர் பேடு இயக்கம் என உம்மத்தின் பாகுபாடாக உருவெடுக்கிறது. இதன் அடுத்த பரிணாமம் தான் வரம்பு மீறி,

ஒரு கூட்டத்தில் சிலருக்கு மட்டும் சிவப்பு கம்பளம் விரிப்பது, தனித்துவமான இருக்கைகள் போடுவது, பொன்னாடைகள் போத்துவது, அவ்லியாக்கள் ஆக்கி மூடத்தனங்களில் ஈடுபடுவது, அடிக்கும் போஸ்டர்களில் கூட பெரிய பொறுப்பில் உள்ளர்வர்கள் பெயரை பெரிதாகவும், அதற்கு கீழுள்ள நிர்வாகியின் பெயர் சிறிதாகவும் அச்சிட்டு வேறுபாடுகள் கற்பிக்கும் அளவுக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் நடைமுறைகள் பல, முஸ்லிம்களையும் விட்டு வைக்கவில்லை.

சில குடும்பங்களில் கூட பெற்றோர்கள் பிள்ளைகளை சம்பாத்தியத்தை வைத்து அவர்களிடம் நடந்து கொள்ளும் விதங்களில் பாகுபாடு காட்டுவது, இரத்த உறவுகளிடையே ஏழை பணக்காரன் பாகுபாடு பார்க்கப்பட்டு அதற்கு தக்கவாறு கூட்டியும் குறைத்தும் மதிப்பளிக்கப் படுவதையும் காணலாம்.

முஸ்லிம்களிடம் நுழைந்துவிட்ட இந்த சிந்தணை மனிதர்களை இறைவன் ஒரே ஆண் பெண்ணிலிருந்து படைத்தான் என்கிற இறை வசனத்திற்கே அர்த்தமிழக்க செய்து பிரிவினைகளை உண்டாக்கி விடுகிறது. 

இந்த சிந்தணையின் எதிரொலி தான் அரசு எந்திரங்கள் கூட பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு வேகமாகவும், குறைவான பணம் கொடுப்போருக்கு மெதுவாகவும் இயங்குகின்ற அவலட்சணம்.இதையெல்லாம் தவறு என உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டிய முஸ்லிம்களே இதை அறியாமல் இருப்பது வேதனை.

"ஒருவருக்கு அவரின் செல்வம் செல்வாக்கை வைத்து நீங்கள் கொடுக்கும் கூடுதல் மறியாதை நீங்கள் உங்கள் காரியத்திற்கு கொடுக்கும் லஞ்சமாகும்."

உலகில் சிலருக்கு அமானிதமாகவும் சோதனையாகவும் தரப்பட்ட அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு அல்ல என்பதை எப்போதும் நினைவில்க் கொள்ள வேண்டும்.நாம் அவரை கண்ணியப் படுத்துகிறோம் என்ற பெயரில், அவர்களுக்கு முன்னால் பணிந்து நடப்பது, அவர்களின் தவறை சுட்டிக்காட்ட தயங்குவது, மனதில் உள்ள சத்தியத்தை பணம் பதவி அந்தஸ்து கொண்டவர்களிடம் வெளிப்படையாக பேசத் தயங்குவது, 

எல்லோரிடமும் இயல்பான சுபாவத்தோடு இல்லாமல், பணம், பதவியில் உள்ளவர்களை கண்டால் மட்டும் அதிகமாக பல்லைக் காட்டிக் கொண்டு, முதுகெலும்பை வளைத்து பணிந்துவிடுவது என சில மக்கள் செய்யும் சுயமறியாதையற்ற காரியங்கள் அவரது இறையச்சத்தையும் பாதிப்பதோடு மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வான சிந்தனைக்கு வழி வகுக்கும். சமூகத்தின் சமநிலையே கெட்டுப்போகும்.

இவையனைத்தையும் அடித்து நொறுக்க வந்த மார்க்கமே இஸ்லாம் என்பதை இன்று முஸ்லிம்களே மறந்துவிட்டு ,உலகம் போகும் மைய நீரோட்டத்தில் கலந்து விட்டனர். இதனால் பூமியில் குழப்பத்தையும் நாசத்தையும் தேடிக் கொள்கின்றனர்.

இதுவே பூமியில் குழப்பம் செய்வதாகும்.

நேசமும் அல்லாஹ்வுக்காகவே.

உலகில் அனைத்து அமல்களையும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்றே, நமது நேசத்தையும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கென தனிச் சிறப்புகளை நபிகளார் கூறியுள்ளார்கள். 

உலக நோக்கங்களின்றி அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசித்துக் கொண்டவர்கள் விசாரனை நடக்கும் நாளில் அர்ஷின் நிழலை பெறுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் மறுமை நாளில், "என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் : 5015

.

ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?" என்று அந்த வானவர் கேட்டார்.அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப் பெற்ற தூதர் ஆவேன் நான்" என்று சொன்னார்.

அபுஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் : 5016.

.

என்னை மதிப்பதற்காக ஒருவரையொருவர் நேசித்தவர்களுக்கு ஒளியால் மேடைகள் அமைக்கப்படும். நபிமார்களும், ஷுஹதாக்களும், அவர்களின் நிலைக்கு ஆசைப்படுவார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலி),  திர்மிதீ 2312

ஆக, இங்கே இறையச்சத்திற்கும் அதை வெளிப்படுத்தும் நன்னடத்தைக்கும் மட்டுமே தான் மதிப்பளிக்கப்பட வேண்டும். உலக ஆதாயங்களின்றி இறைவனுக்காகவே ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். நபிகளார் அதற்காகத்தான் நபித்தோழர்களால் நேசிக்கப்பட்டார்கள். நபி ஆவதற்கு முன்பே நற்குணத்தால் மட்டுமே மக்களிடம் அவர்கள் நன்மதிப்பை பெற்றிருந்தார்கள். பதவியை வைத்தோ, செல்வம் செல்வாக்கைக் கொண்டோ அல்ல என்பதை மறுமை வெற்றிக்காக வாழும் மனிதர்கள் நினைவில்க் கொண்டு செயல்பட வேண்டும்..

பதவியில் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரம் கூடாதா ?

இந்த சமநிலை குறித்து நாம் கூறும்போது, பதவியில் உள்ளவர்களுக்கு கீழ்ப்படியக் கூடாதா ? திறமையாளர்கள், சாதனையாளர்களுக்கான நன்மதிப்பு மற்றும் உரிய அங்கீகாரம் கொடுப்பது தவறா என்பது போன்ற சந்தேகம் எழத் தேவையில்லை. நாம் அப்படியான கருத்தை இந்த கட்டுரையில் கூறவில்லை.

பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு உரிய விடயங்களில் கீழ்ப்படிய மறுத்தால் உலகில் நிர்வாக கட்டமைப்பே சீர்குழைந்து போகும்.பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தன் கீழுள்ளவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். திறமையாளர்கள், சாதனையாளர்களுக்குரிய அங்கீகாரத்தை உரிய முறையில் கொடுத்து அவர்களையும் பிறரையும் உற்சாக மூட்டலாம். அவர்கள் கஷ்டப்பட்டே அந்த நிலையை அடைந்திருப்பார்கள். பல தியாகங்களுக்கு மத்தியிலேயே பொறுப்புகளை சுமப்பார்கள்.

ஆனால், அதை மட்டுமே வைத்து மனிதர்களை நேசிப்பதும், உயர்வாகக் கருதுவதும், அவர்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்காக சுயத்தை இழந்து சத்தியத்திற்கு புறம்பாக வளைந்து கொடுத்து செல்லவும் உங்களை அனுமதிக்காதீர்கள்.

மேலும் அவர்களைப் போல எவ்வித செல்வமோ புகழோ அல்லாத பாமர மக்களை இவர்களால் எந்த பயனும் இல்லை என்று இழிவாக கருதாதீர்கள்,.ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய நன்மதிப்பையும், உரிமைகளையும் சமளவில் கொடுத்து விடுங்கள், இல்லையென்றால் நாம் பூமியில் யாரை இழிவாக கருதினோமோ அவர்கள் மறுமையில் நாம் நினைத்ததை விட உயர்ந்த இடத்தில் இருக்கலாம், இதை அறியாமல் பூமியில் நாம் அவர்களை காயப்படுத்தியிருந்தால், அதற்காக மறுமையில் நம் அமல்களை இழக்க வேண்டி வரும் என்பதே இந்த கட்டுரையின் கருத்தாகும்.

எனவே பணம், புகழ், அந்தஸ்து என மக்களை வேறுபடுத்தி பாராமல். நல்ல குண நலன்களை பார்த்து மக்களை நேசிக்க பழகிக் கொள்வோம்.  உலக நோக்கமின்றி இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது கூட மறுமையில் நமக்கு நன்மையாகவே அமையும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மனைவரையும் அத்தகைய நற்குனம் மிக்க மனிதர்களாக ஆக்கிடுவானாக...!






Comments

Popular posts from this blog

நட்பு ஓர் இபாதத்

ஆய்வும் தக்லீதும்