விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - தஃவாவின் வழிமுறைகள்
விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - (தஃவா வழிமுறைகள் )
==============================
ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَـٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ⭘
உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக! தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் - 16 : 125
தஃவாவில் அழகிய விவாதம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
அத்தகைய விவாதத்திற்கு தேவையான இரண்டு விசயங்களை இவ்வசனம் கூறுகிறது.
1.விவேகம் மிக்க பேச்சாற்றல்
2.அழகிய அறிவுரை கூடிய கல்வி
இவை இருந்தால் தான் அது அல்லாஹ் அனுமதித்த அழகிய முறையில் விவாதித்தல் ஆகும்.
===================================
ஆனால் இங்கே சிலர் அநாகரீக வார்த்தைகளுடன் சண்டை போடுவதை கொள்கைக்கான விவாதம் என கருதுகின்றனர்.
வார்த்தைகளுக்கு ஓர் கட்டுப்பாடே இல்லை என வழிகேட்டை சிலர் சரியென நினைப்பதால்,
அநாகரிக சொல்லாடல்கள் , கேலி கிண்டல்கள், தனிநபர் தாக்குதல்கள், கோபத்தில் பிறரை அவமானப் படுத்தும் விதமாக திட்டுதல், வழிகேடர், காஃபிர், முனாஃபிக் ஃபத்வாக்கள் அசத்தியத்திற்கான எதிர்வினைகள் என்கிற பெயரில் செய்யப்படுகின்றன.
.
இதையெல்லாம் மதுஹபு வாதிகள் செய்தால் நாம் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. காரணம் அவர்களின் எதார்த்தமே அதுதான். தவ்ஹீத் வாதிகளுக்கு எதிராக அதுபோன்ற அராஜகங்கள் பல ஆணவத்துடன் செய்துள்ளார்கள். ஆனால் அத்தகைய ஆணவப் போக்கை தவறு என கண்டித்துக் கொண்டே தவ்ஹீத் வாதிகளும் இதை செய்வது தான் ஆச்சர்யமும் முரணும் ஆகும்.
.
ஒரு காலத்தில் சத்தியத்தை சொல்லி அடி உதை வாங்குவதும், அதனால் ஏற்படும் நெருக்கடிகளை சகித்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதுமே தாஃவா, என்று நபிவழிப்படி நடந்த தவ்ஹீத்வாதிகள்,
இன்று நம்மை நோக்கி வரும் சாதாரண விமர்சனங்களை கூட சகித்துக் கொள்ள முடியாமல் சகிப்புத் தன்மை இழந்தவர்களாக, சரிக்கு சமமாக இறங்கி திட்டுவதும், அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட தன் கருத்தை ஏற்காவிட்டால் வசை பாடுவதையெல்லாம் காணும்போது,
இவர்கள் அகீதாவில் தவ்ஹீத் வாதிகளாகவும், குணநலன்களில் மதுஹபு வாதிகள் போன்று இருப்பதையே காட்டுகிறது.
.
இதற்கு இவர்கள் சில மார்க்க ஆதாரம் வேறு எடுத்துக் காட்டி நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
📌 பாதிக்கப்பட்டவர் தீய சொல் பேச அல்லாஹ் அனுமதிக்கிறான்.
📌 தீமையை காணும்போது நபிகளார் கோபம் கொண்டுள்ளார்கள்.
📌 அபுபக்ர் ரலி ஹுதைஃபிய்யாவில் தீய வார்த்தை பேசினார்கள்.
ஆகிய சில சான்றுகள் தான் அவை.
.
இதன் விளக்கங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
.
📌 பாதிக்கப்பட்டவர் தீய வார்த்தை பேசுவது. :-
அநியாயம் செய்யப்பட்டவரைத் தவிர (மற்றவர்கள்) கெட்ட வார்த்தையைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் - 4 : 148
இவ்வசனத்தை ஆதாரம் காட்டியே தாஃவா களத்தில் எதிர்வினையாற்றும்போது எப்படி வேண்டுமானாலும் தீய வார்த்தை பேசலாம் என்பது சிலரின் வாதம்.
அநியாயம் இழைக்கப்படுவது என்றால் உடலாலோ பொருளாளோ மானத்தாலோ அநியாயமாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மார்க்க கருத்தை ஒருவர் மறுத்து பேசினால், அல்லது நம் புரிதலுக்கு மாற்றமான விளக்கம் கொடுத்தால் அதனால் தஃவா செய்தவர் அடைந்த பாதிப்பு என்ன ?? மாறாக அவர் இறைவனிடம் கூலியை நாடியே தஃவா செய்பவராக இருந்தால் எடுத்து சொன்னதோடு நம் கடமை நிறைவேறி விடுகிறது.
அங்கே இவரது மானமோ செல்வமோ உடலோ பாதிக்கப்படாத போது, எதிர்தரப்பு அறிவிலி தவறாக பேசினாலும் கூட திருப்பி பேச மார்க்க அடிப்படையில் என்ன நியாயம் உள்ளது ??
இப்படி அறிவீனமாக பேசுபவர்களை ஒதுக்கி புறம் தள்ள வேண்டுமே ஒழிய அதற்கிணையாக நாமும் இறங்கி பேசக்கூடாது என்பதே குர்ஆன் கற்றுத்தரும் தஃவா ஆகும்.
இதை கீழ்க்காணும் வசனங்களை கொண்டு அறியலாம்.
خُذِ ٱلْعَفْوَ وَأْمُرْ بِٱلْعُرْفِ وَأَعْرِضْ عَنِ ٱلْجَـٰهِلِينَ⭘
மன்னிக்கும் தன்மையை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக!
அல் குர்ஆன் - 7 : 199
وَلَا تُطِعِ ٱلْكَـٰفِرِينَ وَٱلْمُنَـٰفِقِينَ وَدَعْ أَذَىٰهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًۭا⭘
(நபியே!) இறைமறுப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் துன்புறுத்தல்களை அலட்சியம் செய்வீராக! அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைப்பீராக! பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.
அல் குர்ஆன் - 33 : 48
📌 வேதத்தின் அறிவுரைகளை மறந்து, தொடர் மோசடில் ஈடுபடுவோரையும் மன்னித்தல்.
فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ لَعَنَّـٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَـٰسِيَةًۭ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ ۙ وَنَسُوا۟ حَظًّۭا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍۢ مِّنْهُمْ إِلَّا قَلِيلًۭا مِّنْهُمْ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ⭘
அவர்கள் தமது வாக்குறுதிக்கு மாறு செய்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். அவர்கள் (வேத) வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். அவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு மோசடியைக் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களை மன்னித்து, அலட்சியம் செய்வீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல் குர்ஆன் - 5 : 13
=============================
📌அதுவும் மார்க்க விசயத்தில் சச்சரவு செய்ய துளியும் இடமில்லை..
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள்.
.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
.
அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரீ (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5180.
===========
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2457.
அல்லாஹ் ரசூலின் இந்த அறிவுரைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மனோ இச்சைப் படியும், குரோத உணர்வுடனும் செயல்படுவது எவ்வளவு பெரிய பாவம்.
இவற்றையெல்லாம் பிரிந்தறிந்து சிந்திக்காமல், அந்த ஒரு வசனத்தை வைத்து தாஃவா களத்தில் வரும் நெருக்கடிகள், அவதூறுகளுக்கு எதிர்வினையாக எப்படி வேண்டுமானாலும் தீய வார்த்தை பேசலாம் என்று கூறுவோர் சிந்திக்க வேண்டும்,
இவ்வசனம் தனிநபர் பாதிப்புகளில் கோபம் கொப்பளிக்க ஒருவர் தீய வார்த்தை பேசிவிட்டால் அல்லாஹ் அதை குற்றம்பிடிக்க மாட்டான் என்பதற்கான அனுமதியா ? அல்லது முன்மாதிரியாக எடுத்து எப்போதும் செயல்படுத்த வேண்டிய வசனமா ?
அப்படி முன்மாதிரியாக எடுத்து மாற்றுக் கருத்து கூறும் நபர்களை தீய வார்த்தை கூறி திட்டினால் தாஃவாவில் யாரையாவது வென்றெடுக்க இயலுமா ?
அல்லாஹ்வுக்கு தெரியாதா ஃபிர்அவ்னுடைய ஆணவம் என்னவென்று. அவனிடமே மென்மையாக பேசு என சொல்லி அனுப்பிய இறைவனின் அறிவுத்தலை சிந்திக்காமல், முஸ்லிம்களிடம் எப்படி வேண்டுமானாலும் தீய வார்த்தை பேசலாம் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்.
==================================
.
அடுத்ததாக ஹூதைபியா உடன்படிக்கையின் போது அபுபக்கர் ரலி ஒரு வார்த்தை பேசிவிடுவார் அதை வைத்துக்கொண்டு முகநூலில் அறிவின்றி யாரேனும் தரக்குறைவாக பேசினாலும் நாங்களும் அது போல இறங்கி பேசுவோம் என்கின்றனர்..
.
இது மிகப் பெரும் தவறாகும்..
ஹூதைபியாவில் ஆயிரத்து நானூறு சஹாபாக்கள் உம்ராவுக்காக கிளம்பி வந்து எதிரிகளால் இடைமறிக்கப்பட்டு சமாதானத்துக்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, ஒரு முஷ்ரிக் சஹாபாக்களை தரக்குறைவாக விமர்சித்த பொழுது அபுபக்கர் தன்னை மீறி கோபத்தில் பேசியது ஆகும். அங்கு நபி ஸல் அமைதி காத்தது அபுபக்கரின் கோப உணர்வுக்கு நியாயம் இருந்ததால்.
இது கெட்ட வார்த்தை பேசுவதற்கான அனுமதியோ முன்மாதிரியோ அல்ல. அது விதிவிலக்காக ஏற்ப்பட்ட நிகழ்வு. அதுவும் அந்த எதிரி அல்லாஹ்வின் எதிரியாவான்.
அபுபக்ர் ரலி முஸ்லிம்களிடம் அவ்வளவு கடுமையாக பேசியதில்லை. முஸ்லிம்களிடம் சிறு கடுஞ்சொற்கள் கூறுவதை கூட நபிகளார் கண்டிதுள்ளார்கள்.
அதற்கு உதாரணம்,
சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!" என்று கூறினர்.
.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!" என்று (கடிந்து) கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, "அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்" என்று சொன்னார்கள்.
.
ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, "என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, எங்கள் அருமைச் சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்.
.
ஸஹீஹ் முஸ்லிம் : 4916.
.
அப்போது முஷ்ரிக்காக இருந்த அபுசுஃப்யானுக்காக முஸ்லிம்களை சிறிதளவு கடிந்துகொண்ட அபுபக்ர் ரலி அவர்களை நோக்கி "அவர்களை நீங்கள் கோபப்படுத்தி இருந்தால் அல்லாஹ்வை கோபப்படுத்தி விட்டீர்கள்" என்று கூறிய நபிகளாரின் வழிகாட்டலை இவர்கள் மறந்துவிட்டார்களா ?
.
அபுபக்ர் (ரழி) கோபத்தின் உச்சத்தில் ஒரு முஷ்ரிக்கை நோக்கி சொன்ன வார்த்தை ஆதாரமாக ஆகிவிட்டதா ?
.
அதை ஆதாரமாக எடுத்து முஸ்லிமாக இருக்கும் ஒரு மாற்றுக்கருத்தாளரை ஏசுவது எப்படி சரி ஆகும் ?? அவர் அறிவீனமாக நடந்தால் நாமும் திருப்பி அறிவீனமாக நடக்க வேண்டியது இல்லையே.
சண்டை போட்டு திட்டுவதற்கு அபுபக்கரை உதாரணம் காட்டுபவர்கள், அதே அபுபக்கர் தன் மகளின் மானத்துக்கு பங்கம் ஏற்ப்படுத்திய மிஸ்தஹை மன்னித்தார்கள் அதை எப்போதாவது பின்பற்றி இருக்கிறார்களா??
தாயிஃபில் கல்லடி பட்டு இரத்தம் தெறிக்க ஓடி வந்தும் அந்த மக்களை மன்னித்தார்களே அதை முன்மாதிரி யாக எடுத்துண்டா??
ஒரு காலத்தில் ஏதோ சில கசப்பான சம்பவங்களால் மாறி மாறி அடித்துக் கொண்டு, முபாஹலா வரை சென்று ஒருவரையொருவர் ஏசிக் கொண்டு இந்த சமுதாயம் சந்தித்த தலைகுனிவுகள் போதாதா. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குரோதத்தை ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால் நாமும் அதற்கு ஈடுகொடுத்து ஊக்குவிக்க வேண்டுமா ?
இது போன்ற ஷைத்தானிய சண்டைகளின் போது, யாராவது ஒருவர் சகிப்புத் தன்மையுடன் எதிர்வினைகளை அமைத்துக் கொண்டு இவை தொடர விடாமல் முற்றுப்புள்ளி வைக்க முயல்வதே நல்ல அழைப்பாளரின் பண்பாக இருக்கும்.
.
அதை விடுத்து அந்த நிய்யத்தே இல்லாமல் நீயா நானா என நிற்பது அழைப்பு பணிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் மன உளைச்சலை ஏற்ப்படுத்தும் செயலாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
.
இதையெல்லாம் சொன்னால் நாம் இஸ்லாத்தை அழிக்கும் நயவஞ்சகர்கள் என அபத்தமாக பேசுகிறார்கள். உண்மையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மாறி மாறிக் அடித்துக் கொள்ளும் இவர்கள் தான் அல்லாஹ்வின் கோபத்தையும் அழிவையும் கொண்டு வருபவர்கள் என்பதை நாம் மார்க்க சான்றுகளுடன் கூற முடியும்.
.
==================================
📌 அடுத்தாக நபிகளார் கோபம் கொண்டதாக இவர்கள் எடுத்து வைக்கும் சம்பவங்கள் சில.
📌 ஸகாத் சம்பவத்தில் “நீர் உண்மையாளராக இருந்தால், உம்முடைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்"
📌 விபச்சாரம் செய்ய அனுமதி கேட்ட நபித்தோழரிடம், உனது தாயுடன் (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" உனது சகோதரியுடன் (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" என்றெல்லாம் நபிகளார் கேட்டது..
.
போன்ற சில சம்பவங்களை காட்டி நபிகளார் கோபம் கொண்ட சம்பவங்கள் உள்ளதே என நம்மிடம் கேட்கின்றனர். மாற்றுக்கருத்தில்லை.
.
நபிகளார் முகம் சிவந்த தருணங்களும் பல உண்டு. ஆனால் அதுபோன்ற தருணங்களில் நபிகளார் எங்கே அவர்களுக்கு தீய பட்டப்பெயர்கள் சூட்டி, கேலிகிண்டல்கள் செய்து இழிவுபடுத்தி வேடிக்கை பார்த்தார்கள் என்பதே நமது கேள்வி..
பிரச்சனையின் விபரீதத்தை உணர்த்த ஒரு கருத்தை ஆணித்தனமாக சொல்வதற்கும், தீய பட்டப்பெயர், இழிவுபடுத்தும் வசைகள் என அநாகரீகமாக சொல்வதற்கும் வித்தியாசமுண்டு..
.
நபிகளார் பயன்படுத்தியது, அவர்களின் தவறை அவர்களையே உணர வைக்கும் அளவுக்கான சிந்திக்க தூண்டும் ஆணித்தனமான வாதங்கள், வார்த்தைகள். இறுதியில் விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டவருக்கும் நேர்வழிக்காக துஆ செய்துதான் அனுப்பினார்கள்.
.
இங்குள்ள பலர் செய்வதோ கூடவே உள்ளவர்களை கூட முகம் சுழிக்க வைக்கும் அநாகரீக வார்த்தைகள்.
.
இவை இரண்டும்க்கும் வித்தியாசமின்றி கட்டுப்பாடுகள் இல்லாமல் எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், அதற்காக சினிமா வசனங்களையும் பயன்படுத்தலாம் என்றால், தாஃவா களம் ரனகளமாக தான் இருக்கும்.
.
இவற்றை சொன்னால் கடும்போக்கு இல்லாத தாஃவாவில் கொள்கை உறுதி இருக்காது என்கின்றனர். நபிகளார் எந்த கடுமையான, இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் தானே தாஃவா செய்தார்கள். அப்படியென்றால் இவர்களின் பார்வையில் நபிகளார் யார் ?
.
தீய வார்த்தைகள் இல்லாமலே சத்தியத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூற முடியும், எதிராளியும் சிந்திக்க தூண்டும் வகையில் பேசி வென்றெடுக்க முடியும் என்பதற்கு இவ்வுலகில் நபிகளாரை விட அழகிய முன்மாதிரி இருக்க முடியுமா ?
.
எந்நிலையிலும் அவர்களின் வழியை விடுத்து மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொள்ளாதீர்.
.
மேலும், முஸ்லிம் காஃபிர் வேறுபாடெல்லாம் இல்லை, செயலை வைத்து தான் எகிர்வினை என்பவர்களுக்கு இறுதியாக ஒன்று,
.
📌 ஒரு முஸ்லிம் நம்மை கொலை செய்யவே வந்தாலும் அவனை தற்காப்புக்காக தாக்க அனுமதி இருக்கிறதே தவிர, நாம் சாக வேண்டுமென அவன் நினைப்பதுபோல, அவன் சாக வேண்டுமென நாமும் நினைத்தால் இருவரும் நேர்ந்து நரகம் செல்ல வேண்டியது தான். அதை கீழ்க்காணும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
.
இவருக்கு (அலீ(ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
.
அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார் என்று கூறினார்கள்' என கூறினார்'
.
அஹ்னஃப் இப்னு கைஸ்.
ஸஹீஹ் புகாரி : 31.
📌 ஆக, மாற்றுக் கருத்திலுள்ள முஸ்லிம்கள் நமக்கு நமக்கு பல நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
❌நம் பிரச்சாரத்தை தடுக்கிறார்கள்,
❌ நம் பேனர்களை கிழிக்கிறார்கள்,
❌ நம்மைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள்,
❌ நம்மை இழிவுபடுத்த துடிக்கிறார்கள்,
இன்னும் பல. இவற்றையெல்லாம் நாம் மறுக்கவில்லை.
.
ஆனால் இதுபோன்ற நெருக்கடிகளை நாம் முறியடிக்கும் எண்ணத்தில் இஸ்லாமிய வரம்புக்குள் நின்று எதிர்வினையாற்றினால் அது தவறே இல்லை. அந்த எதிர்வினைகள் பொது மக்களுக்கும் நம் நிலையை தெளிவுபடுத்தும் விதமாக, எதிராளியையும் சிந்திக்க தூண்டும் விவேகத்துடன் அமைய வேண்டும்.
ஆனால் அவன் நம்மை முஸ்லிம் என்றும் பாராமல் அழிக்கவும், இழிவுபடுத்தவும் துடிப்பது போல, நாமும் அவனை அழிக்கவும் இழிவுபடுத்துவதிலும் அகமகிழ்ந்து வார்த்தைகளை பிரயோகம் செய்து வந்தால், இந்த சண்டைகள் இருவரையும் சேர்த்து நரகம் கொண்டு சேர்க்கும் வரை முடிவின்றி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
.
எனவே நபிமார்கள் முஷ்ரிக்குகளை நோக்கி பேசிய வசனங்கள் வார்த்தைகளையெல்லாம், முஸ்லிம்களை நோக்கி பேசுவதற்கு முன் மிகுந்த கவனம் பேணுவது நலம்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
Comments
Post a Comment