இஸ்லாத்தில் ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்
நோய் நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை (அர்ருக்யா) ஓதி நிவாரணம் தேடும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து அமல்ப்படுத்துவதன் மூலம் அல்லாஹ் நாடினால் ஷிஃபா அடைலாம்.
மேலும் குறிப்பிட்ட மனிதர்கள் ஓதிப்பார்த்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விடுத்து, அனைவரும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தாமே ஓதிப்பார்க்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம், இறை வார்த்தையில் மட்டுமே நிவாரணம் (ஷிஃபா) உள்ளது என்ற உண்மையான நம்பிக்கைக்குப் பதிலாக, ஓதிவிடும் மனிதர்களைப் புனிதர்களாகக் கருதும் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும்.
குறிப்பாக ஓதி பார்ப்பதில் தண்ணீரில் ஓதி ஊதுவது, தகடு, தாயத்து, கயிறு முடிவது, சில உணவு பொருட்களில் மந்திரிப்பது போன்ற ஷிர்க்கான, பித்அத்தான நடைமுறைகளை விட்டு ஒதுங்கி சரியான வழிமுறையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம்.
==========
📌 வலிக்கு ஓதிப் பார்த்கும் முறை
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நோயைப் பற்றி முறையிட்டால் அல்லது அவருக்கு ஒரு புண் அல்லது காயம் ஏற்பட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்கள் ஆள்காட்டி விரலால் தரையைத் தொட்டு, பின்னர் அதை உயர்த்துவார்கள் (அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா அவர்கள் தனது ஆள்காட்டி விரலால் இதை செய்து காட்டினார்கள்) மேலும் இவ்வாறு ஓதுவார்கள்:
بِاسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، لِيُشْفَى بِهِ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا
'பிஸ்மில்லாஹி, துர்ப(த்)து அர்ழினா, பிரீக(த்)தி பஃழினா, யுஷ்ஃபா பிஹி சகீமுனா, பி இத்னி ரப்பினா'
(அல்லாஹ்வின் பெயரால், எங்களில் சிலரின் உமிழ்நீருடன் கலந்த எங்களின் பூமியின் மண், எங்களின் இறைவனின் அனுமதியுடன் எங்களின் நோயாளியைக் குணப்படுத்தும்.) நூல்: முஸ்லிம்-4417
இப்னு ஹிப்பானுடைய அறிவிப்பில் كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ بِبُزَاقِهِ بِإِصْبَعِهِ (மண்ணில் தோய்த்த) தனது விரலில் உள்ள உமிழ்நீரைக் கொண்டு கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
நபியவர்கள் தம்முடைய ஆட்காட்டி விரலில் உமிழ்நீரை தொட்டு, பின்னர் மண்ணைத் தொட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்க்க இப்படியொரு வழிமுறையை கையாண்டுள்ளார்கள் என்பது இந்த செய்தியின் வழியாக விளங்கலாம்..
==========
📌 வலி உண்டான இடத்தில் கையை வைத்து ஓதுதல்
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து,
بِسمِ اللَّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ : أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِن شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
"பிஸ்மில்லாஹ்' என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை அவூது பி இஜ்ஜத்தில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு”
என்று சொல்வீராக என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் உணர்கின்ற தீமையிலிருந்தும் நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.) நூல் : முஸ்லிம் (4430)
==========
📌 வலக்கரத்தால் வலியுண்டான இடத்தைத் தடவி ஓதிப்பார்த்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தில் சிலருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து,
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ البَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு ஸகமா. என்று பிரார்த்தித்தார்கள்.
(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!) நூல்: புகாரி-5743
இதே துஆ அனஸ் (ரலி) அவர்கள் வழியாக சிறு வார்த்தை மாறுதலுடன் இடம்பெறுகிறது.
اللهم رب الناس، مذهب البأس، اشف أنت الشافي، لا شافي إلا أنت، شفاءً لا يغادر سقماً” ((رواه البخاري)).
அனஸ் (ரழி) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் :
‘'அல்லாஹும்ம ரப்பன்னாஸி, முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி, லா ஷாஃபிய இல்லா அன்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு ஸகமா
(யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! இந்த நோயைப் போக்கி, குணப்படுத்துவாயாக. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவர் யாருமில்லை. எந்த நோயையும் விட்டுவைக்காத ஒரு முழுமையான நிவாரணத்தை வழங்குவாயாக) புகாரி 5742
==========
📌 பொதுவாக மூன்று முறை பிரார்த்தித்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்த போது..
اللَّهُمَّ اشْفِ سَعْداً اللهُمَّ اشْفِ سَعْدَا اللَّهُمَّ اشْفِ سَعِداً
அல்லாஹும்ம ! இஷ்ஃபி ஸஅத், இஷ்ஃபி ஸஅத், இஷ்ஃபி ஸஅத்,
'இறைவா! ஸஅதுக்கு நிவாரணம் வழங்குவாயாக! ஸஃதுக்கு நிவாரணம் வழங்குவாயாக! ஸஃதுக்கு நிவாரணம் வழங்குவாயாக! என மூன்று முறை கூறினார்கள். ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 3352)
இதில் இஷ்ஃபி “ஸஅத்” என்பதற்கு பதிலாக இஷ்ஃபி நோயுற்றவரின் பெயரை இணைத்து பிரார்த்திக்க வேண்டும். மூன்றுமுறை அவ்வாறு கூறுவது சுன்னா என்பதை உணர்த்தவே இந்த பொதுவான பிரார்த்தனையை இவ்விடம் குறிப்பிட்டுள்ளோம்.
==========
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மரணத்தருவாயில் அல்லாத நோயாளியை நலம் விசாரிக்கச் செல்பவர்
أَسْأَلُ اللَّهِ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشفِيَكَ
"அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அய்யஷ்ஃபீக்க..
(பொருள் மகத்துவமிக்க அரியணையின் எஜமானன் மகத்துவமிக்க அல்லாஹ் உனக்கு நிவாரணம் அளிப்பானாக என அவனிடம் கேட்கிறேன்)"என்று ஏழு முறை அவரிடம் கூறினால் அந்நோயிலிருந்து அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளிப்பான். நூல்கள் : அபூதாவுத் (2700), திர்மிதீ (2009)
==========
📌 நோயாளியிடம் தன்னம்பிக்கையூட்டும் ஆறுதல் வார்த்தைகளை கூறுதல்.
நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால்,
"" لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ "".
'கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்' என்று கூறுவார்கள். ஸஹீஹ் புகாரி : 3616.
==========
📌 ஜிப்ரீல் (அலை) அவர்களின் ருக்யா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது,
بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ
“பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க” என்று ஓதிப் பார்த்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்.)
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி), நூல்: முஸ்லிம்-4403
தொகுப்பு : ரியாலுஸ்ஸாலிஹீன்.
==========
📌 அய்யூப் (அலை) பிரார்த்தனை
அய்யூப் நபியவர்கள் தமக்குக் கடுமையான நோய் ஏற்பட்ட போது பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ⭘
“எனக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டது. நீ கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்”nஎன்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது அவருக்குப் பதிலளித்து, அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அல் குர்ஆன் - 21 : 83
==========
📌 சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்.
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார்
நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து 'எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?' என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார்.
அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் 'உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?' அல்லது 'ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?' என்று கேட்டோம். அவர், 'இல்லை; குர்ஆனின் அன்னை' என்றழைக்கப்படும் ('அல்ஃபாத்திஹா') அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்' என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'செல்லும் வரையில்' அல்லது 'சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்' ஒன்றும் செய்துவிடாதீர்கள்' என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம்.
நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். 'இது ('அல் ஃபாத்திஹா' ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 5007
==========
📌 முஅவ்விதத்தைன் அத்தியாயங்கள் ஓதி, கைகளில் ஊதித் தடவுதல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள். நூல்: புகாரி-5748
இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள் என புகாரி 5018வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
==========
தாங்கவியலாத துன்பத்திலும் மரணத்தை வேண்டுதல் கூடாது. பின்வருமாறு பிரார்த்திக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي
“இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும். அனஸ் (ரலி),நூல்: புகாரி-6351
இவை தவிர்த்து ஓதி பார்ப்பதில் தண்ணீரில் ஓதி ஊதுவது, தகடு, தாயத்து, கயிறு முடிவது, சில உணவு பொருட்களில் மந்திரிப்பது போன்ற அனைத்தும் நபிவழிக்கு மாற்றமான ஷிர்க்கான, பித்அத்தான நடைமுறைகள் ஆகும் என்பதை உணர்ந்து நபிவழிப்படி ஓதிபார்த்தலை அமைத்துக்கொள்ள வேண்டும்.

Comments
Post a Comment