மறுமை வெற்றிக்கு மட்டுமா தாஃவா ?
கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் "வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார்."
ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3612.
📌 தாஃவா என்பது மறுமை வெற்றிக்கு மட்டுமே என்பது பொதுவாக மக்களின் எண்ணம். அது தவறாகும். முறையாக தாஃவா செய்து குறிப்பிட்ட இலக்கை அடைந்தால் இம்மையிலும் அது வெற்றி மிகுந்த வாழ்வை ஏற்படுத்தி தரும்.
இம்மை வெற்றி என்றால் என்ன ?
இன்று மக்களின் பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வு குறித்து உலகமே பேச துவங்கியுள்ளது. மனிதர்களை கல்வியிலும், இறையச்சத்திலும் மேம்படுத்துவதன் மூலம், குற்ற செயல்கள் குறைந்த நிம்மதியான பாதுகாப்பான சூழலை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தி தருவதே இம்மை வெற்றியாகும்.
அந்த இம்மை வெற்றியை அடைவதற்கு (உலகக்) கல்வியில் முன்னேற்றம், அதிகாரங்கள் அடைதல், இன்ன கட்சிக்கு ஓட்டுபோடுதல் ஆகிய பல தீர்வுகள் முன்வைக்கப் படுகின்றன. கல்வி என்பது அடைய வேண்டிய ஒன்று தான்.
ஆனால் கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடைவதோ, அதிகாரத்தை அடைவதற்காக இஸ்லாம் அல்லாத குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்திருப்பதோ, தற்காலிக தீர்வு மட்டும் தானே ஒழிய அதுவே நிரந்தர வெற்றியோ தீர்வோ அல்ல..
மனிதகுலத்தின் நிம்மதியான பாதுகாப்பான சூழலுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி மட்டுமே தீர்வாகும் . அந்த இலக்கை அடைவதற்கான பாதை தான் தாஃவா ஆகும்..
முறையாக தாஃவா செய்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் வென்றெடுத்தால் இஸ்லாம் மேலோங்கும். அதாவது இஸ்லாம் பெரும்பான்மையாக மாறும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலே மக்களின் நிலை ஓரளவு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும்.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தேர்வு செய்யும் பொறுப்பு முஸ்லிம்களின் வாக்கு எண்ணிக்கையின் படியே அமையும்.
முதலில் மனிதர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் மிகுந்த மற்ற எல்லா மதங்கள், கொள்கைகளை விட, மனிதனை மனிதனாக பார்க்கச் சொல்லும் இறைவனின் மார்க்கமான இஸ்லாம் பெரும்பான்மையாக ஆகுவதே தாஃவாவின் இலக்காக இருக்க வேண்டும். இதையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۭا
எல்லா மார்க்கங்களைவிட இ(ம் மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக அவனே நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் தனது தூதரை அனுப்பினான். சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
அல் குர்ஆன் - 48 : 28
இஸ்லாம் பெரும்பான்மை மார்க்கமாக இருப்பது முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை அல்ல. அனைத்து சமூக மக்களுக்கும் நிம்மதியான மகிழ்வான வாழ்வைத் தரும். இந்த இம்மை வெற்றியும் தாஃவாவில் அடங்கியுள்ளது.அந்த வெற்றி எந்தளவிற்கு பாதுகாப்பு மிக்க சூழலை உலக மக்களுக்கு ஏற்படுத்துமென்றால்,
பதிவின் துவக்கத்தில் உள்ள நபிமொழியில் இறுதியாக நபிகளார் கூறுவதை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் "வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார்."
மார்க்கம் முழுமையடைந்துவிட்டால் அதாவது ஆன்மீகத்தில் மட்டுமின்றி, ஆட்சியிலும் இஸ்லாம் இருந்தால் வாகன பயணிகள் அல்லாஹ்வை தவிர வேறு எதற்கும் அஞ்சாமல் வெகுதூரம் பயணம் செய்யுமளவுக்கு சுதந்திரமான, நிம்மதியான சூழல் உண்டாகும் என்று நபிகளார் (ஸல்) கூறினார்கள்.
தத்துவங்கள் சொல்லலாம். ஆனால் செயல்படுத்துவது இலகுவானதல்ல. ஆனால் அப்படியான ஆட்சியை நபிகளார் சொன்னபடி நிறுவியும் காட்டியது தான், அனைத்து தத்துவஞானிகளிலிருந்து அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.
உலகில் இன்றுள்ள அரசியல் சித்தாந்தங்களில் மக்களுக்கு தேவையான ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாமல் இருப்பதை காணலாம்.
உதாரணமாக,
📌 சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகளில், தனிமனித ஒழுக்கம் இருக்காது. மது, மாது என மனிதர்களை வழிதவற செய்யும் எல்லாவற்றையும் திறந்துவிட்டு அதற்கு தனிமனித சுதந்திரம் என்பார்கள்.
📌 தொழிலாளர் நலன் பேசும் கட்சியில் இறை நம்பிக்கை இருக்காது.
📌 இறை நம்பிக்கையுள்ள கட்சிகளில் இணைவைப்பு நம்பிக்கையாக அது இருக்கும் அல்லது மதவெறி இருக்கும்.
📌 பெண் சுதந்திரம் பேசும் மேற்கத்திய அரசியல் அமைப்புகள் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த கலாச்சாரமே சர்வ நாசம்.
ஆனால் நபிகளார் அதை தொடர்ந்து அபுபக்ர், உமர் (ரலி) ஆகியோர் நிறுவிய ஆட்சியில் மட்டுமே மனித குலத்திற்கு தேவையான அனைத்தும் ஒருசேர இருந்தது. மனிதகுலம் நிம்மதி பெருமூச்சு விட்டது.
அந்த ஆட்சியில்
📌 மக்களின் அடிப்படை தேவைகளை (ஜகாத் மூலம்) அரசாங்கம் பூர்த்தி செய்ய பொறுப்பேற்று கொண்டது.
📌 யாசிப்பது வெறுக்கப்பட்டு உழைத்து உண்ண வழிகாட்டப்பட்டது.
📌 அளவுக்கதிகமான செல்வ ஆசையில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலபுலன்களை, விவசாயம் செய்வோருக்கு கொடுத்து நாட்டின் வேலை வாய்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது.
📌 ஏழைகளுக்கு பிச்சை போட்டு, குறிப்பிட்டவர்கள் மட்டும் மக்களின் உழைப்பையும், வளங்களையும் சுரண்டி வாழும் முறைகள் ஒழிக்கப்பட்டது…(இன்றைய கார்பரேட்டுகள் இஸ்லாமிய சித்தாந்த ஆட்சியில் தலையெடுக்க கூட முடியாது)
📌 பின்னர் மது, சூது, விபச்சாரம், திருட்டு, வழிப்பறி, கொலை, ஊழல் என அனைத்து சமூக விரோத செயல்களும் ஒழிக்கப்பட்டன. அவற்றுக்கு கடும் தண்டனைகள் சட்டமாக்கப்பட்டன.
கடும் தண்டனைகள் ,தவறுகளின் அனைத்து வாயில்களையும் சட்டத்தின் மூலமாக அடைக்கப்பட்ட பிறகே வழங்கப்பட்டன.
ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்படும் . பசிக்கு திருடியவன் திருடனாக ஆக மாட்டான் இஸ்லாமிய சட்டத்தில் ..
மது போதையின் அனைத்து பரிணாமங்களையும் தடை செய்து விட்டு மது குடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும்…
ஆபாசங்கள் பக்கம் தூண்டும் அனைத்தையும் தடை செய்த பிறகு தான் விபச்சாரத்துக்கு மரண தண்டனை..
குறையற்ற சட்டங்களைக் கொண்ட நேர்த்தியான ஆட்சி அமைப்பு தான் இஸ்லாமிய அரசியல் கொள்கை...
( இதை அறிந்து தான் பூரண சுதந்திரம் என்பது உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் உள்ளது என காந்தியடிகள் கூறினார்கள் )
உதாரணமாக ,இன்று அரபு நாடுகளில் பூரண இஸ்லாம் இல்லையென்றாலும், அங்கு இஸ்லாமியர்கள் ஆட்சியில் இருப்பதால் அது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் நாடுகளாக திகழ்வதை பார்க்கலாம்.
மேலும், பாகிஸ்தான், பங்கலாதேஷ் போன்ற நாடுகளில் கூட அங்கு இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய அறிவு எதுவும் இல்லாமையால் அங்கு பெரிய பொருளாதார முன்னேற்றம் எதுவுமில்லை.
ஆனால் பெயரளவிலாவது இஸ்லாம் அங்கு பெரும்பான்மையாக இருப்பதால் இந்திய முஸ்லிம்கள் போல அந்நாட்டு முஸ்லிம்களோ முஸ்லிம் அல்லாதவர்களோ, பாஸிசத்தின் பிடியில் சிக்கி உயிர்களையும், உடமைகளை இழக்கும் நிலையில் அங்கெல்லாம் இல்லை..
ஆக ஒரு நாட்டில் பெயரளவில் இஸ்லாம் பெரும்பான்மையாக இருந்தாலே அந்நாட்டு மக்கள் பாசிஸ ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள் என்றால்,
இஸ்லாமிய அறிவுபடைத்த மக்கள் பெரும்பான்மையாக மாறும்போது அந்நாடு எல்லா வகையிலும் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லும்.
இதை நோக்கமாக கொண்டு தான் இந்தியாவில் நமது தாஃவா இருக்க வேண்டும்.
இது தான் தாஃவாவின் நோக்கம் என உணர்ந்தால் மட்டுமே நமது தாஃவா நபிகளாரின் பாதையில் அமையும்.
ஆனால் இதை, உலகை சுரண்டி சுகபோகமாக ஆளத் துடிக்கும் யூத உலகம் இதை எப்படி பொறுக்கும் ?
சதிகளால் மோதல்களை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை துடைத்ததில் வெற்றி கண்டார்கள் யூதர்கள்..
நபிகளார் காலத்தில் திட்டத்தைத் தொடங்கி உஸ்மான் ரலி காலத்தில் குழப்பங்களைக் கட்டவிழ்த்தார்கள்..
அதிலிருந்து இந்த உம்மத் இந்த மார்க்கத்தை மேலோங்க செய்ய உழைப்பதை விட்டுவிட்டு தமக்குள் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது...
அலியா ? முஆவியாவா ? என்று துவங்கி, பிறகு ஷியாவா சுன்னியா ? என நீட்சிபெற்று, இன்று தவ்ஹீதா சுன்னத்தா என்று மாறி, அதிலும் தவ்ஹீதில் அந்த இயக்க நிலைபாடா, இந்த இயக்க நிலைபாடா என கருத்து வேறுபாடுகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றது..
இதற்கு காரணம், தாஃவாவின் பெரிய இலக்கை மறந்த முஸ்லிம்கள் சிறுசிறு விடயங்களில் அடித்துக் கொள்வதில் திசைதிருப்பப் பட்டு போயுள்ளார்கள்..
பூமியில் மீண்டும் எப்போது அத்தகைய இஸ்லாமிய ஆட்சி ?
📌அல்லாஹ்வின் வாக்குறுதி
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًۭا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًۭٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ⭘
உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்வோருக்கு, அவர்களின் முன்னோரிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கியது போல் அவர்களுக்கும் பூமியில் ஆட்சியதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின் (அதை) அவர்களுக்குப் பாதுகாப்பு நிலையாக மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எதையும் இணையாக்காமல் என்னையே வணங்குவார்கள். இதன்பிறகு (என்னை) யார் மறுக்கிறார்களோ அவர்களே பாவிகள்.
அல் குர்ஆன் - 24 : 55
📌 மனிதர்கள் பெரும்பாலோர் இறைநம்பிக்கைக் கொண்டு நல்லமல்கள் செய்தால் முன்னோர்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது போல நமக்கும் ஆட்சியை அல்லாஹ் வழங்குவான்.
📌இதனால் அவன் பொறுந்திக்கொண்ட மார்க்க்த்தில் நம்மை நிலைப்படுத்துவான். காஃபிர்கள் ஆட்சியில் மார்க்கத்தை விட்டு வழிதவற வாய்ப்புகள் உள்ளது..இஸ்லாமிய ஆட்சியில் வழிதவற வாய்ப்பு இல்லை..
இதை தான் மார்க்கத்தில் நிலைப்படுத்துவான் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
📌இதன் மூலம் இதற்கு முன் அச்சத்துடன் வாழ்ந்த நிலை மாறி அச்சமின்மை ஏற்படும்.
என்று இவ்வசனம் கூறுகிறது.
எனினும் நபியவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட மஹ்தி அலை வரும் வரை கிலாஃபத் ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அப்படியே நிறுவினாலும் அது நம்பகமானதாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.
காரணம் அடிப்படை இஸ்லாமிய அறிவே இல்லாமல், கிலாஃபத் எனும் புனிதமான சொல்லை பயன்படுத்தி, இளைஞர்களை தவறாக மூலைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் தள்ளுவதற்கு உலகில் ஏராளமான கூட்டங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் அப்படியான பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. இதனாலேயே கிலாஃபத் எனும் வார்த்தையே ஏதோ பயங்கரவாத வார்த்தைப் போல, முஸ்லிம்களே அதை உச்சரிக்க அச்சப்படும் வார்த்தையாக மாறியுள்ளது. அதற்கு காரணமே கிலாஃபத்தின் சரியான பாதை தாஃவா தான், வன்முறையோ, தீவிரவாதமோ அல்ல என்கிற சரியான பாதையை விளக்கி கூறாமல் விட்டது தான்.
ஆகவே, நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட மஹ்தி அவர்களின் வருகையே நபிகளாரின் அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய ஆட்சியாகும் என்பதால் அவர்கள் வரும்வரை எந்த கூட்டத்தையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாமல் இருப்பதே பாதுகாப்பும் ஆகும் என்பதை விளக்கிக் கூறுவது நம் கடமையாகும்.
அது வரை நம்முடைய பொறுப்பு தாஃவா மட்டும் தான்.
தஃவா என்பது முஸ்லிம்களுக்குள் ஏற்படும் கருத்து பிளவுகளை பெரிதுபடுத்தி சண்டையிட்டு பலவீனப்படுத்துவது அல்ல. வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் பேராயுதமே தாஃவா ஆகும்.
நாமும் தாஃவா செய்கிறோம் சரி, ஆனால் நபிகளார் சொன்ன பிரகாரம் செய்கிறோமா ?
நபிகளாரின் தாஃவா மறுமை வெற்றி மட்டும் இலக்காக கொண்டு மட்டும் இல்லை. இம்மையிலும் வலுவான சமுதாயத்தை கட்டமைத்து காண்பித்தார்கள்..
நமது தாஃவா நபிகளாரைப் போலவே ஏனைய எல்லா வழிபாடுகளையும் ஒழித்து, இஸ்லாம் மேலோங்குதல் என்பதை இலக்காக கொண்டு இருந்தால், இஸ்லாமிய ஆட்சி வருவதற்கு முன்னர் குறைந்தபட்சம் இஸ்லாம் பெரும்பான்மை மார்க்கமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தற்போது தஃவா செய்யும் பெரும்பாலானவர்களிடம் ஏதேனுமொரு நபிவழிக்கு முரணான வழிமுறைகளைக் கவனிக்கலாம்.. ஆனால்,நபிகளாரின் தஃவா எவ்வாறு இருந்தது?
நபிகளாரின் ஒட்டுமொத்த வரலாற்றையும் படித்தால், அவர்களின் தாஃவா வை கீழ்க்காணும் வகையில் வகைப்படுத்தலாம்..
📌 ஓரிறைவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பதில் தாமும் உறுதியாக இருந்து, இறைவனுக்கு இணைவைக்கும் இஸ்லாம் அல்லாத ஏனைய எல்லா வழிபாடுகளுக்கு எதிராகவும் கடும் பிரச்சாரம் செய்வது,
📌 ஏகத்துவம் மட்டுமின்றி தனிவாழ்விலும் பொது வாழ்விலும் இறைவனின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படித்து நடந்து, பிறருக்கும் அதை எடுத்துரைக்கும் அழைப்பு பணியின் பாதையில், சகிப்புத் தன்மையுடன், பெருந்தன்மையுடன், பணிவுடனும் நடந்து மக்களின் உள்ளங்களை நற்குணத்தால் வெல்வது.
📌 அல்லாஹ் ரசூல் என நம்பிக்கை கொண்டுவிட்ட மூஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்கிற உணர்வோடு, சகோதரர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் இல்லாத ஒருவரை ஒருவர் நேசிக்கும் சமுதாயத்தை கட்டமைத்து, அந்த வலிமையான சமுதாயம் மூலம் சமுதாய பாதுகாப்பை உறுதி செய்வது.
இவையனைத்திலும் நபிகளார் கவனம் செலுத்தினார்கள். இவை மூன்றில் ஒன்றை கவனிக்க தவறினாலும் தாஃவாவின் கோணமே திசைதிரும்பும்.
ஆனால் இன்று முஸ்லிம்களிடம் இவை ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை என்பது வேதனையான உண்மை.
📌சமூக ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் மார்க்க முரணான விசயங்களை கண்டிக்காமல் சமரசம் செய்து கொள்கின்றனர். கொள்கையை இழந்தால் இறைஉதவி இல்லை என்பதை மறந்து விடுகின்றனர்.
📌கொள்கை உறுதி பேசுபவர்கள், தங்கள் அணுகுமுறையில் நளினமின்மையால் அனைவரும் சகோதரர்கள் என்பதை மறந்து ஒருவரை ஒருவர் வசைபாடி பிளவுகளை ஏற்ப்படுத்தி விடுகின்றனர்.
நபி ஸல் அவர்கள் எல்லா நிலையிலும் பேணிய சகிப்புத்தன்மையை இவர்களிடம் காண முடிவதில்லை.
காஃபிர்களிடம் கூட காட்டாத கடுமையை தங்களுக்குள் ஏற்படும் மஸாயில் பிரச்சனையில் காட்டுகின்றனர்.காரணம் நமது இலக்கு நபிகளார் காட்டித் தந்ததை அறியாது திசைத்திருப்பப் பட்டது தான்.
இது போன்று சகிப்பின்மையாக நடந்து கொள்ளும் முஸ்லிம்கள் பதிவின் துவக்க நபிமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றொரு செய்தியை கவனிக்க வேண்டும்.
எதிரிகளின் கொடுமை தாளாமல் அல்லாஹ்விடம் கையேந்த சொன்ன தமது சஹாபாக்களிடம் நபிகளார் சொன்ன வாசகம்.
📌 உங்களுக்கு முன்னிருந்த இஸ்லாத்தை ஏற்ற மூஃமின்களுக்கு மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
📌 இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
முன்சென்ற சமுதாயத்தில் அவ்வளவு பெரிய கொடுமைகள் நிகழ்ந்தும் அவர்கள் கொள்கை உறுதியுடன் இருந்தார்கள் என்பதுடன் மட்டுமின்றி, அந்த கொடுமைகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொண்டு ஷஹீத் ஆனார்கள்.
அவர்கள் அவ்வளவு கொடுமைகளை சகித்துக் கொண்டு இலக்கை நோக்கி மக்களின் உள்ளத்தை வென்றதால் தான் பெரும் வெற்றியை இறைவன் அளித்தான்.
ஆனால் இன்று முஸ்லிம்களோ ஒருவருக்கொருவர் வசைபாடுதலை வரம்பு மீறினால் நாமளும் மீறலாம் என்று கூறி நியாயப்படுத்துகின்றனர் .
மக்கா வாழ்க்கையில் நபிகளார் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களுக்கு அவர்கள் பதிலுக்கு என்ன அத்துமீறலை மேற்கொண்டார்கள் ?
காஃபிர்களிடம் கூட கனிவாக நடந்து கொண்டு அவர்களை வென்றெடுக்க பாடுபட்ட நபிகளார் எங்கே ? முஸ்லிம்களிடம் கூட சிறுசிறு விடயங்களில் சகிப்பு தன்மையை இழந்து நிற்கும் நாம் எங்கே ?
அவர்களை நோக்கி “மரணம் உண்டாகட்டும்” என்று கூறிவந்த யூதர்களை நோக்கி ஒரு நபியாகவும், ஆட்சியாளராகவும் இருந்து கொண்டு அவர்களை தண்டிக்க எல்லா அதிகாரமும் படைத்திருந்தும் கூட“வ அலைக்க” என்பது தான் நபியின் பதிலாக இருந்தது. அதை தாண்டி கோபத்தில் கொந்தளித்த அன்னை ஆயிஷா ரலி அவர்களை கூட நபிகளார் தடுக்கவே செய்தார்கள் என்பதெல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது ?
யாரின் விமர்சனத்திற்கும் மறுமொழி உரைப்பதோ, வாதத்தில் வெல்வதோ இங்கு முக்கியமல்ல மாறாக நாம் அடைய வேண்டிய இலக்கு தான் முக்கியம்.
அந்த இலக்கு பிறரின் உள்ளங்களை வென்றெடுப்பதால் மட்டுமே சாத்தியமாகும். மாற்றுக் கருத்துடையோரை கேலி செய்வதாலோ, வசைபாடுவதாலோ அல்ல..
ஆனால் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகளில் பிணங்கிக் கொள்வதை அல்லாஹ்வும் ரசூலும் ஒருபோதும் விரும்பியதில்லை. முஸ்லிம்களிடையே அடித்துக் கொள்வதை அழிவு என்றார்கள் நபிகளார். இதற்கு கீழ்க்காணும் செய்திகள் சான்றாக உள்ளன.
📌 அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! கருத்துவேறுபாடு கொள்ளாதீர்கள்! அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள்! உங்கள் பலம் குன்றிவிடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
அல் குர்ஆன் - 8 : 46
📌 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஸஹீஹ் புகாரி : 5060.
📌 ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரீ (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5180.
கருத்து வேறுபாடு கொண்டால் தைரியமிழந்து பலம் குன்றி போய்விடுவோம் என அல்லாஹ் கூறுகிறான்.
நாம் இன்று கருதுவது போல கருத்துவேறுபாடுகளில் அடித்துக் கொள்வதே தாஃவா என்றால், நபிகளார் ஏன் கருத்து வேறுபாடுகளை தவிர்ந்து கொள்ள சொல்ல வேண்டும் ?
நபிகளார் செய்த தாஃவாவின் இலக்கு பெரியதாக இருந்ததால், சிறுசிறு விடயங்களில் தீவிரமாக அடித்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.
எடுத்து சொல்லிவிட்டு இலக்கை நோக்கிய பணிகளில் பயணிக்க வேண்டுமே தவிர, சிறு சிறு மஸாயில்களில் கூட என் நிலையை ஏற்காத வரை நீ என் சகோதரனே கிடையாது, நீ காஃபிர், முஷ்ரிக் என ஃபத்வாக்கள் பறக்கவிட்டு அடித்துக் கொள்வது நமது இலக்கல்ல…
அழகிய முறையில் எடுத்து சொல்லிவிட்டு கடந்து செல்ல வேண்டிய முஸ்லிம்களிடையே உள்ள சிறுசிறு மஸாயில் கருத்து வேறுபாடுகளில் கடுமையாக அடித்துக் கொண்டு சகோதரத்துவத்தை வேரறுப்பதும்,
தீவிரம் காட்டி ஒழிக்க வேண்டிய சிலை வணக்கம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தொப்புள்கொடி உறவு என கடந்து செல்வதுமாக இருப்பது நபிகளாரின் தாஃவாவுக்கு நேர்முரண் ஆகும்.
ஆனால் , இன்று இலக்கை அறியாமல் மனம்போன போக்கில் தாஃவா களத்தில் சமுதாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது..
ஒற்றுமைக்காக கொள்கையை விட்டுக்கொடுத்து நபிவழிக்கு முரணான செயல்களில் ஒன்று குழுமுவது எந்தளவு பாவமோ, அதேபோல கருத்து வேறுபாடுகளால் முஸ்லிம்களிடையே வெறுப்பை வளர்ப்பதும் பாவமாகும்.
முஸ்லிம்களிடையே எழும் விமர்சனங்களை சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும் எதிர்கொண்டு, சக முஸ்லிமின் உள்ளத்தை வென்றெடுக்க பாடுபடுவது கொள்கை சமரசம் ஆகாது.
இந்த புரிதல் வந்தால் மட்டுமே தாஃவாவின் இலக்கும் தெளிவாக அமைந்து, மறுமையில் மட்டுமின்றி, இவ்வுலகிலேயே தாஃவாவின் மூலம் முஸ்லிம்கள் உலகையே வெல்ல முடியும்.
இந்த இலக்கு இல்லாமல் வெறும் மஸாயில் விடயங்களில் அடித்துக் கொள்வது மட்டுமே தாஃவா என நினைத்து திசைமாறிய பயணத்தை தொடராமல், உள்ளங்களை வென்றெடுக்கும் முயற்சியுடன் தாஃவா களத்தை அனுகவும், அதன் மூலம் சமுதாயத்தை அல்லாஹ்வின் கயிறு எனும் ஓரணியில் ஒன்றிணைத்து வழிநடத்தவும் முயல வேண்டும். இதுவே நபிவழியும் காலத்தின் தேவையும் ஆகும்,
அல்லாஹ் கூறுகிறான்..
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًۭا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ ۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ⭘
📌யார் தமது மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினராகி விட்டனரோ அவர்களின் எந்த விஷயத்திலும் உமக்குத் தொடர்பில்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே இருக்கிறது. பின்னர், அவர்கள் செய்து கொண்டிருந்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
அல் குர்ஆன் - 6 : 159
وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًۭا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًۭا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍۢ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ⭘
அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர்களாக இருந்தீர்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை உண்டாக்கினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். நீங்கள் நரகப் படுகுழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான். இவ்வாறே நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தனது சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல் குர்ஆன் - 3 : 103
Mashallah 🔥🔥🤲🤲
ReplyDelete