இஸ்லாத்தில் பட்டப்பெயர்கள்

தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை பட்டப்பெயர் வைத்து இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் சிலரிடம் உள்ள தீய பழக்கமாகும்.

.
இஸ்லாம் ஒருபோதும் தீய பட்டப்பெயர்கள் வைப்பதை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே பேசுகிறது.
.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘ 

இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே அநியாயக்கார்கள். 

அல் குர்ஆன் -   49 : 11
.
எங்களில் சிலருக்கு இரண்டு, மூன்று பெயர்கள் இருக்கும். அவற்றில் சிலதைக் கொண்டு அழைக்கப்படுவார். அது அவருக்கு வெறுப்பைத் தருவதாக அமையும். அப்போதுதான். “(தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்!” என்ற (49:11) வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அபூ ஜபீரா (ரலி),
நூல்கள்: திர்மிதீ (3191), அபூதாவுத் (4311), இப்னுமாஜா (3731), அஹ்மத் (16045)
.
ஒரு சாராரை அவர் விரும்பாத பெயர்கூறி அழைப்பது, கேலி செய்வது இவற்றை கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டது என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
.
இது எல்லா மனிதர்களும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்றாலும், தாஃவா களத்தில் உள்ளவர்களுக்கு இதில் கூடுதல் கவனம் வேண்டும். காரணம் அவர்கள் தான்  பல கருத்து வேறுபாட்டில் பயணிக்கும் முஸ்லிம்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்து, நல்வழி படுத்தவும், சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை சுமந்தவர்களும் ஆவர்.
.
அந்த பொறுப்பிலுள்ளவர்கள் அந்த நோக்கத்தில் மட்டுமே தாஃவா களத்தில் பேசவும், எழுதவும் வேண்டுமே தவிர, கேலி கிண்டல்களுக்கு இடம் கொடுப்பதில் அர்த்தமேயில்லை. அது மார்க்கம் தடுத்த பக்குவமற்ற செயலாகும்.
.
ஆனால் வேதனை என்னவெனில், சாதாரண மனிதர்களிடம் இருக்கும் பேச்சொழுக்கம் கூட தாஃவா களத்திலுள்ள சிலரிடம் இல்லை என்பது தான்.
.
📌 தவ்ஹீத் வாதிகள் சிலர் தர்காவுக்கு செல்வோரை "கபுர் முட்டி, கபுர் வணங்கி, பிண வணங்கிகள்" என அவர்கள் அனைவரையும் பொதுவாக பட்டப்பெயர் சூட்டி அழைப்பதும்,
.
📌 சுன்னத் ஜமாத்தினர் தவ்ஹீத் வாதிகளை நோக்கி ஆட்டு மந்தைகள், ஃபத்வா குரூப், ஹதீஸ் மறுப்பாளர்கள் இன்னும் பல பெயர்கள் சொல்லி அழைப்பதும்,
.
📌 ஜாக், சவூதி பிறையை பின்பற்றுவோரை கள்ள சலஃபி என சிலர் அழைப்பதும்,

இப்படி சமுதாயத்தில் பட்டப் பெயர்களுக்கு பஞ்சமில்லாமல் நீண்டுகொண்டே செல்கின்றன. இந்த தீய பழக்கம் யாரையும் நல்வழிப்படுதவோ, யாருடைய உள்ளங்களையும் வென்றெடுக்கவோ, கருத்துவேறுபாடுகளை களையவோ உதவாது.
.
மாறாக முஸ்லிம்களிடையே இருக்கும் கருத்துவேறுபாடுகளை வெறுப்புணர்வாக மாற்றவே இது உதவும். எனவே தான் இஸ்லாம் இதை தடுக்கிறது.

நபி (ஸல்) தீய பட்ட பெயர்கள் சூட்டினார்களா ?
சிலர் நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு தீய பட்டப்பெயர் சூட்டினார்கள் என்று வாதிட்டு, மாற்றுக் கொள்கையினரை பட்டப்பெயர் சூட்டி அழைப்பதை நியாயப்படுத்த முயல்கின்றனர். அதற்கு வழக்கமாக இரண்டு சான்றை காட்டுவார்கள்.

1) நபி ஸல் அவர்கள் நெருப்பு வணங்கிகள் என்று சிலரை குறிப்பிட்டுள்ளார்கள்.

2) அபுல் ஹிக்மை, அபு ஜஹ்ல் என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகியவையே அந்த இரண்டு சான்றுகளாகும்.

ஹதீஸ்களின் தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் வாசித்துவிட்டு சிந்திக்காமல் முன்வைக்கப்படும் சான்றுகள் இவை.

அல்லாஹ் ஒன்றை தடை செய்கிறான் என்றால் அதை விட்டு தவிர்ந்து கொள்வதில் நபிகளாரே முதல் நபர் ஆவார். அல்லாஹ் தீய பட்டப்பெயர் சூட்டுவதை தடை செய்துள்ளான் எனும்போது அதை எப்படி நபிகளார் செய்வார்கள் என்பதை முதலில் சிந்திக்க வேண்டாமா ?

“நெருப்பு வணங்கிகளான” மஜூஸிகள் தங்களை தாங்களே மஜூஸிகள் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். 

அதற்கு தமிழாக்கம் தான் நெருப்பு வணங்கிகள்.

ஒரு சாரார் தங்களை எவ்விதத்தில் அழைத்துக்கொள்கிறார்களோ அவ்விதத்தில் அவர்களை அழைப்பதில் தவறில்லை. அது பட்டப்பெயரே ஆகாது. அதை தான் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.

ஆனால்,
.
📌 தவ்ஹீத் வாதிகள் யாரும் தங்களை ஆட்டு மந்தை என்றோ, ஃபத்வா குருப் என்றோ அழைத்துக் கொள்வதில்லை.
.
📌 தர்ஹா செல்வோர் யாரும் தங்களை கபுர்முட்டி, பிணவணங்கி, கபுர் வணங்கி என்றெல்லாம் அழைத்துக் கொள்வதில்லை.
.
📌 ஸலஃபியிசம் எனக் கூறி ஜாக் சவூதியை பின்பற்றும் யாரும் தங்களை கள்ள சலஃபிகள் என அழைத்துக் கொள்வதில்லை.
.
எனவே முஸ்லிம்கள் தங்களுக்குள் “தர்ஹாவுக்கு செல்பவர்கள்" “தவ்ஹீத் ஜமாத்தினர்”, ஜாக் அல்லது ஸலஃபிகள் என்று அவரவர்களுக்குரிய அடையாளம் கொண்டு குறிப்பிடாமல், மேற்சொன்ன பட்டப்பெயர்களை பயன்படுத்தி அழைப்பது ஒருவரையொருவர் அவமானப் படுத்திக் கொள்ளும் செயலாகும்.
.
அல்குர்ஆன் & ஹதீஸ்களுக்கு மாற்றமான செயல்களை முஸ்லிம்களிடம் காணும்போது அதை எடுத்து சொல்வதே நமது கடமையேயன்றி, நம் நிலைபாட்டை ஏற்காதவர்களை அவமானப்படுத்த நினைப்பது தாஃவா களத்திற்கு அழகல்ல.
.
இதில் கூடுதல் பொறுப்பு தவ்ஹீத் வாதிகளுக்கு உள்ளது. காரணம் தர்ஹாவுக்கு செல்வோர் அல்குர்ஆன் ஹதீஸை படித்து இஸ்லாத்தை பின்பற்றுவோர் அல்ல என்பது அறிந்த விடயம் தான். 
.
ஆனால் சாணுக்கு சாண், முழத்துக்கு முழம் அல்குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்று பேசுவோர் தவ்ஹீத் வாதிகள் தான். அத்தகைய தவ்ஹீத் வாதிகள் பேச்சே அல்குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக அமைந்தால், அது மாற்றுக் கொள்கையினரின் உள்ளங்களை தொடாது.
.
ஏகத்துவ புரட்சியாளர் நபி இப்ராஹிம் அலை எந்த இடத்திலும் “சிலை வணங்கிகளே” என்று கூறவில்லை.
.
நபிகளார் குறைஷிகளை யா மஃஷரல் குரைஷ் என்று அழைத்துள்ளார்கள். சிலை வணங்கிகளே என்று அழைத்ததில்லை.

இவற்றையெல்லாம் தவ்ஹீத் வாதிகள் சிந்திக்க வேண்டும்.

அபு ஜஹ்ல் என அழைத்த காரணமும் பின்னனியும்.
.
இந்த உம்மத்தின் ஃபிர்அவ்ன் என்றார்கள் நபிகளார் அவனை. அவனுக்கு குரைஷிகள் வைத்திருந்த பெயர் “அபுல் ஹிக்ம்” அறிவின் தந்தை என்பதாகும்.
.
குரைஷிகள் சிலரே விரும்பாத காரியங்களை முஸ்லிம்கள் விடயத்தில் அபு ஜஹ்ல் செய்து வந்தான். உதாரணம் பத்ர் போர். பத்ர் போரை குரைஷிகள் சிலரே விரும்பவில்லை என்றாலும், இவனது தூண்டுதலுக்கும், நிர்பந்தத்திற்கும் இணங்கியே பலர் அந்த போரில் கலந்துகொண்டு உயிரை விட்டார்கள்.
.
ஆக அவனது தலைமைத்துவம் சிந்திக்கும் சிலரையும், முஸ்லிம்களை எதிர்க்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியது.
.
ஆகவே அவனது தலைமைத் துவத்தை மட்டுப்படுத்தவும், அவன் அறிவின் தந்தையல்ல, அறியாமையின் தந்தை என்கிற எதார்த்த உண்மையை குரைஷிகளுக்கு உணர்த்தவும் நபிகளார் அவனுக்கு அபு ஜஹ்ல் பெயரை சூட்டினார்கள்.
.
அதில் கூட நபிகளாரின் சாதூர்யத்தை சிந்திக்க வேண்டும்.
.
நபிகளார் நினைத்திருந்தால் மூடன், முட்டாள் என பொருள் தரும் غبي, سفيه இன்னும் இதுபோன்ற ஏராளமான வார்த்தைகளை பயப்படுத்தியிருக்க முடியும். அது அவனை அவமானப்படுத்துவதாக, சிறுமைப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
.
ஆனால் நபிகளாரின் நோக்கம் அதுவல்ல. அவனுக்கும் நபிகளார் நேர்வழியையே நாடினார்கள். 
.
எனவே ஜஹ்ல் என அறிவின்மை, அறியாமை என்ற அர்த்தம் தரக் கூடிய எதார்த்த வார்த்தையை தான் பயன்டுத்தினார்களே தவிர, இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தவில்லை.
.
பேச்சிலும் எழுத்திலும், அறியாமை, அறிவின்மை என நாகரீகமாக குறிப்பிடுவதற்கும், முட்டாள், மூடன் என அநாகரீகமாக குறிப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா ?
.
மேலும், நபிகளார் ஒட்டுமொத்தமாக குரைஷிகளை நோக்கியும் அனைவரும் ஜாஹில்களே என்று அழைத்ததில்லை. அவர்கள் குலப்பெயர்கள், குடும்ப பெயர்களை குறிப்பிட்டே அழைத்துள்ளார்கள்.

காரணம் அவர்களில் சிந்திப்பவரும் இருப்பார். அப்படிப் பட்டவர்களையும் சேர்த்து அறிவீனர்களே, மூடர்களே, சிலை வணங்கிகளே என அழைத்தால், அது சிந்திப்பவருக்கும் கோபமூட்டி வெறுப்பேற்றிவிடும் செயலாக அமைந்து விடும்.
.
அது தாஃவாவின் நோக்கத்தையே திசைத்திருப்பும் செயலாகிடுவும்.
.
எனவே, காஃபிர்கள் அறிவின் தந்தையாக கருதி வந்த ஒருவனை மட்டும் நபிகளார், அவன் அறிவின் தந்தையல்ல, அறியாமையின் தந்தை என்கிற எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலேயே கவனமுடன் வார்த்தையை கையாண்டுள்ளார்களே தவிர இன்று முஸ்லிம்கள் செய்வது போல் முஸ்லிம்களில் ஒரு சாராரை முழுவதுமாக நபிகளார் இழிவுபட பட்டப் பெயர் சூட்டி குறிப்பிட்டதில்லை.
.
நபி ஸல் அவர்கள் தன் எதிரியை குறிக்கவும் கண்ணியம் தான் பேணியுள்ளார்கள். அது தான் அனைத்து முஸ்லிம்களும் பேண வேண்டிய கண்ணியமாகும். 
.
குறிப்பாக தாஃவா களத்திலுள்ளவர்கள் இவற்றை பேணி நடப்பதன் மூலமே பிறரை வென்றெடுக்க முடியும். 
.
அதை விடுத்து விமர்சனங்களுக்கே பொறுமையிழந்து தாஃவா களத்தில் கேலியும், கிண்டலும், தீய பட்டப் பெயர் சூட்டி அவமானப்படுத்துவதுமாக பயணிப்பதால் சமுதாயத்தில் வெறுப்புணர்வே மிஞ்சும்.
.
யாரையும் வெறுப்பதோ, வெறுப்பேற்றுவதோ நமது நோக்கமல்ல, வென்றெடுப்பதே நமது நோக்கம் என்பதையறிந்து பக்குவத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
.
இறைவன் அனைவருக்கும் இத்தகைய பொறுமையை தர வேண்டும். அதற்கு முதலில் நாம் அந்த நிய்யத்தை உள்ளத்தில் ஏந்த வேண்டும்.

குறிப்பு : இழிவுபடுத்தும் நோக்கமின்றி ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பத்திற்கென அடையாளப் பெயர்கள் இருக்கும். அது தவறல்ல. நபிகளார் அபு ஹுரைரா என பிரியமாக பெயர் வைத்தும் அழைத்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

ஆய்வும் தக்லீதும்

நபி வழியில் கபுர் ஜியாரத் ..