இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் மற்றும் முஷ்ரிக்..
அளவிலா அருளாலனும் நிகரிலா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் மேலோங்கிய காலம் முதலே தங்களுக்கு மாற்றுக் கருத்தில் உள்ள சக முஸ்லிம் சகோதரனை நோக்கி முஷ்ரிக் காஃபிர் என முத்திரைக் குத்துவது சர்வ சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. இது பற்றிய தெளிவின்மையால் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிழைக்கும் நிலை ஏற்ப்படுகிறது.
உதாரணமாக ஒருவரை முஷ்ரிக் என முடிவெடுத்து விட்டால் அவருடன் திருமண உறவு வைப்பது, அவரின் ஜனாஸாவில் பங்கெடுப்பது, அவருக்காக தவ்பா செய்வது என அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் முஸ்லிம்களை நோக்கி அவசரகதியில் கொடுக்கப்படும் முர்தத் ஃபத்வாக்களால் அவசியமற்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவை உண்டாக்கி பாவம் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டாகும்.
எனவே இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் யார் முஷ்ரிக் யார் என்பது பற்றிய தெளிவு முஸ்லிம்களுக்கு இருப்பது அவசியமாகும்.
ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை மட்டுமே அவருடைய வெளிப்படையை வைத்து நாம் தீர்மாணிக்க முடியும். காரணம் இஸ்லாம் என்பது செயல் சம்பந்தப்பட்டது.
.
அவர் மூஃமினா, முஷ்ரிக்கா, காஃபிரா என்பதை வெளிப்படையை வைத்து முடிவெடுக்கவோ, தீர்மாணிக்கவோ நமக்கு ஞானமும் இல்லை. அதிகாரமும் இல்லை. காரணம் ஈமான், ஷிர்க், குஃப்ர், நிஃபாக் இவையெல்லாம் உள்ளம் சம்பந்தப்பட்டவை ஆகும்.
இவற்றை அறிந்து கொள்வதற்கு முன் முதலில் இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்வோம்.
.
===============================
.
📌 ஒருவர் முஸ்லிம் என்பதற்கு நபிகளார் கூறும் வரையறைகள் :-
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمَهْدِيِّ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ "".
'நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
.
அனஸ் இப்னு மாலிக் (ரலி).
ஸஹீஹ் புகாரி : 391.
.
حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَإِذَا قَالُوهَا وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلاَّ بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "".
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போரிட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
.
அனஸ் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 392.
மேலும் புகாரி, முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பும்போது நபிகளார் கூறும் உபதேசத்தில், கலிமா, தொழுகை, ஸகாத், இவற்றை ஏற்றுக் கொண்டு விட்டால் அவர்கள் முஸ்லிம், அவர் அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளவர் எனும் கூடுதல் வாசகமும் இடம்பெறுகிறது..
===============================
📌 ஆக, கலிமா ஷாஹாதா வை ஏற்று, தொழுகை, கிப்லா, நோன்பு, ஸகாத், அறுத்து பழியிடுதல், ஹஜ், ஆகிய வழிபாடுகளை அறியாமைக் கால (பிறமத) வழக்கப்படி செய்யாமல், இஸ்லாம் சொன்னபடி செய்து வருபவர் அவர் அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள முஸ்லிம் ஆவார். இஸ்லாத்தில் இருந்துகொண்டே அவர் செய்யும் மற்ற பாவங்கள், அறியாமைகள் குறித்து அல்லாஹ்வே விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவும் அதிகாரம் படைத்தவன். அந்த முஸ்லிமின் விடயத்தில் சக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்கக் கூடாது.
.
அல்லாஹ்வின் ஒப்பந்தம் என்பது சக முஸ்லிமை சகோதரனாக ஏற்பதும், அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் என அல்லாஹ்வும் ரசூலும் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றுவதும் ஆகும்..அந்த கடமைகளும் உரிமைகளும் என்னென்ன, பீஜேயிச சிந்தணை சில முஸ்லிம்களை முஷ்ரிக்குகள், காஃபிர்கள் என சித்தரிப்பதால் அந்த ஒப்பந்தம் எப்படியெல்லாம் பாழ்ப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் தாவாவின் இலக்கு எபபடியெல்லாம் திசை திருப்பப் பட்டுள்ளது என்பதையெல்லாம் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ் காண்போம்..
.
இந்த பதிவில் முஸ்லிம் என்பதற்கு மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ள வரையறைக்குள் ஒருவர் வந்த பின்னரும்,
.
“வெளிப்படையை வைத்து ஒருவரை வழிகேடன், முஷ்ரிக், காஃபிர் என்று முத்திரை குத்தலாம்”
.
என்கிற ஆதாரமற்ற பிஜெயிச வாதம் எந்தளவு மார்க்க முரணானது என்பதை முதலில் இப்பதிவில் அறிந்து கொள்வோம்..
.
===============================
📌 அடிப்படை நம்பிக்கை..
.
قُلْ كُلٌّۭ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًۭا
“ஒவ்வொருவரும் தமது வழிமுறைப்படி செயல்படுகின்றனர். நேரான வழியில் இருப்பவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிவான்” என்று கூறுவீராக!
அல் குர்ஆன் - 17 : 84
.
📌 முதலில் உலகிலுள்ள மக்களில் யார் நேர்வழியில் நடக்கிறார், யார் வழிகேட்டில் இருக்கிறார் என்பதை அல்லாஹ்வை தவிர வேறெவரும் அறிய முடியாது என்கிற இந்த அடிப்படை நம் மனதில் என்றும் இருக்க வேண்டும். அல்லாஹ் தான் நன்கறிந்தவன் எனும்போது நாம் நேர்வழியில் தான் இருக்கிறோம், மற்றவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் கூற முடியாது.காரணம் ஒருவர் முஸ்லிம் என்பதற்கு நபிகளார் கூறியுள்ள அடிப்படையான அம்சங்களை ஏற்று செயல்படுத்தும் எல்லோரும் இஸ்லாத்தினுல் தான் இருக்கிறார்கள். அவர்களின் மற்ற விடயங்கள் குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.
.
ٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதுபற்றி அல்லாஹ் உங்களுக்கிடையே மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
அல் குர்ஆன் - 22 : 69
.
மேலும் பார்க்க : 10:93, 16:124, 32:25,
.
இங்கே ஒவ்வொருவரும் அவரவருக்கு கிடைத்த புரிதலின் அடிப்படையில் மார்க்கத்தை கடைபிடிக்கிறார்கள். நம்மில் யார் நேர்வழி பெற்றவர்கள், வழிதவறியவர்கள் என்பதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது என்பதே நம் உள்ளத்தில் இருக்க வேண்டிய பணிவான நம்பிக்கையாகும்.
.
இந்த அடிப்படை நம் உள்ளத்தில் இல்லையென்றால் நம்மையே அறியாமல் அல்லாஹ்வின் அதிகாரத்தை நாம் கையில் எடுத்து பிறர் விடயத்தில் தீர்ப்பளிப்போம். சக முஸ்லிம்களிடம் பணிவாக நடக்கும் பண்பே நம்மிடம் இருக்காது. காரணம் நாம் மட்டுமே நேர்வழியில் இருக்கிறோம், மற்றவர்கள் வழிகேடர்கள் என்கிற தவறான சிந்தணை மூலம் ஷைத்தான் நம்மை முஸ்லிம்களுக்கெதிராக எப்படியும் பேச வைப்பான், எதையும் செய்ய தூண்டுவான்.
.
===============================
.
வெளிப்படையை வைத்து ஒருவரின் ஈமானை முடிவெடுக்க கூடாது என்பதற்கு கீழ்க்காணும் செய்திகள் சான்றாக உள்ளன.
.
📌 உஸாமா (ரலி) சம்பவம்.
உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தார் மீது படையெடுத்து சென்றபோது அவர்களை தோற்கடித்து அங்குள்ள ஒருவரை சுற்றி வளைக்கிறார்கள். உடனே அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார்.
.
ஆனால் உஸாமா (ரலி) அவர்கள் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிடுகிறார்கள்.
.
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், 'உஸாமாவே! அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள்.
.
அதற்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்' என்று உஸாமா (ரலி) பதில் கூறுகிறார்கள்.
ஆனாலும் அந்த காரணக்தை ஏற்காமல், அவர் உளப்பூர்வமாக சொன்னாரா இல்லையா என்பதை நீ உள்ளத்தை பிளந்து பார்த்தாயா என நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொணமுடிவெடுத்தார்கள்
.
ஸஹீஹ் முஸ்லிம் 158
.
📌 எதிர்த்து சண்டையிட்டுவிட்டு தோல்வியை உணர்ந்த சூழலில் கலிமா சொன்னால் யாராக இருந்தாலும் வெளிப்படையை வைத்து அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தான் கலிமா சொல்கிறார், உள்ளத்தில் ஈமான் இல்லை என்றே கருதுவார்கள். அப்படி தான் உஸாமா ரலி அவர்களும் முடிவெடுத்தார்கள்.
.
ஆனாலும் நபிகளார் அதை ஏற்காமல் அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா என திரும்ப திரும்ப கேட்டு கடிந்து கொண்டதிலிருந்து, கலிமா சொல்லிவிட்ட பின்னர் ஒருவரை வெளிப்படையை வைத்து அவரின் உள்ளத்திலுள்ள ஈமானை முடிவு செய்வது தவறாகும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
.
===============================
📌 குழந்தை பருவத்தில் பேசிய சம்பவம். (ஹதீஸ் சுருக்கம்)
.
மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் பேசியதில்லை. ஒருவர் மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள்; (மற்றொருவர்) ஜுரைஜின் பிள்ளை (என அவதூறு சொல்லப்பட்ட குழந்தை).
…..மூன்றாவதாக தன் தாயிடம் பாலருந்திக் கொண்டிருந்த ஒரு குழந்தைப் பற்றி நபிகளார் கூறுவார்கள்.
ஒரு வனப்புமிக்க ஒரு மனிதன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், "இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப்பார்த்து, "இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே" என்று பேசியது.
.
பிறகு தாயும் மகளும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, "நீ விபச்சாரம் செய்தாய்; திருடினாய்" என்று (இடித்துக்) கூறி அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்" என்று கூறிக்கொண்டிருந்தாள். அப்போது அக்குழந்தையின் தாய், "இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே" என்று கூறினாள். உடனே அக்குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), "இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!" என்று கூறியது.
உடனே அந்த தாய் தன் குழந்தையிடம்,
.
உன் தொண்டை அறுபடட்டும் ! அழகிய தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் கடந்து சென்றபோது நான், "இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனை ஆக்குவாயாக" என்று கூறினேன். அப்போது நீ "இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!" என்று கூறினாய்.
பிறகு மக்கள், "விபச்சாரம் செய்துவிட்டாய்; திருடிவிட்டாய்" என்று (இடித்துக்)கூறி அடித்துக் கொண்டிருந்த இந்த அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றபோது நான், "இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தேன். அப்போது நீ "இறைவா! இவளைப் போன்று என்னை ஆக்குவாயாக!" என்று கூறினாய். (ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டாள்.)
.
அதற்கு அக்குழந்தை, "(வாகனத்தில் சென்ற) அந்த மனிதன் (அடக்குமுறைகளை அவிழ்த்து விடும்) கொடுங்கோலனாக இருந்தான். ஆகவே, நான் "இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!" என்று கூறினேன்.
.
"விபசாரம் செய்துவிட்டாய், திருடிவிட்டாய்" என்று கூறிக் கொண்டிருந்தனரே அப்பெண் விபசாரம் செய்யவுமில்லை, திருடவுமில்லை. ஆகவேதான், "இறைவா! அவளைப் போன்று என்னையும் (நல்லவளாக) ஆக்குவாயாக!" என்று கூறினேன்" என்று பதிலளித்தது.
அபூஹுரைரா (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் : 4986.
.
இந்த சம்பவமும், வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரின் இன்னொரு பக்கத்தையே நம்மால் அறிய முடியாது எனும்போது, உள்ளத்தை அறிய முடியும் என்று நம்பும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்..
.
===============================
.
📌 மாலிக் பின் துக்ஷன் சம்பவம். (ஹதீஸ் சுருக்கம்)
தமக்கு பார்வை குன்றி வருவதால் தனது இல்லத்தில் ஒரு இடத்தில் நபி (ஸல்) அவர்களை தொழுகை நடத்துமாறும், அந்த இடத்தை தம்முடைய தொழுமிடமாக ஆக்கிக் கொள்கிறேன் என்றும் இத்பான் பின் மாலிக் (ரலி) எனும் நபித்தோழர் ஒருவர் அழைப்பு விடுப்பார்.
.
தங்கள் பகுதிக்கு வருகை தந்துள்ள நபி (ஸல்) அவர்களை காண மக்களெல்லாம் வந்த போது மாலிக் பின் துக்ஷன் எனும் நபித்தோழர் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்பதால் மக்களில் சிலர் அவரை நயவஞ்சகன் ஆகிவிட்டார் என்று கூறினார்கள்.
.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவரைப் பற்றி அவ்வாறு சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
.
அதற்கு மக்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினார்கள். அ(வ்வாறு நயவஞ்சகர் என விமரிசித்த)வர், "(அல்லாஹ்வின் தூதரே!) அவர் நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையுமே நாங்கள் காண்கிறோம்" என்று சொன்னார்.
.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் திருப்தியை நாடி "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான்" என்று கூறினார்கள்.
.
இத்பான் பின் மாலிக் (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் : 1165.
.
மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் வெளிப்படையை வைத்து அவர்களின் உள்ளத்தை முடிவெடுக்க மிகத் தகுதியான சூழல்கள் தான். என்றாலும் அவ்வாறு செய்தவர்களை நபிகளார் தடுத்தார்கள்..
.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லிவிட்டவரை அப்படி கூறக் கூடாது, காரணம் அவர்களுக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விட்டான் எனும்போது,
.
அவர்களை முஷ்ரிக் காஃபிர் என நரகவாசி எனும் சொல்லுக்கு இணையாக கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பதும், வரம்பு மீறிய செயலும் ஆகும்.
.
===============================
.
📌 நபிகளாருக்கே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் தான் தெரியும்.
.
قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَـٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَـٰنُ فِى قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَـٰلِكُمْ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ⭘
(நபியே!) “இறைநம்பிக்கை கொண்டோம்” எனக் கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக ‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்’ என்று கூறுங்கள். உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கை நுழையவே இல்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் உங்கள் நற்செயல்களில் எதையும் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான்” என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
அல் குர்ஆன் - 49 : 14
.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரின் உள்ளத்தில் ஈமான் உள்ளதா “அதாவது அல்லாஹ்வைப் பற்றியும் அவன் நம்பிக்கைக் கொள்ள சொன்ன விடயங்கள் பற்றியும் சரியான புரிதல் உள்ளதா அல்லது நாவில் இஸ்லாமும் உள்ளத்தில் அறியாமைக் கால மூட நம்பிக்கையும் உள்ளதா என்பதை பற்றி நபிக்கே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் தான் தெரியும் எனும்போது, நாம் எப்படி பிறரின் உள்ளத்திலுள்ள ஈமானின் நிலையை எடைபோட முடியும் என்பதை சிந்திக்கவும்.
மேற்சொன்ன சம்பவங்களின் படி வெளிப்படையை வைத்து பிறரை முஷ்ரிக் என முத்திரைக் குத்துவது தான் தவறாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
.
===============================
தர்ஹா தாயத்து போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள மக்கள் பற்றிய புரிதல் :-
இதில் எழும் கேள்வி என்னவென்றால், இஸ்லாத்தில் இருந்துகொண்டு, தர்ஹா வழிபாடு, தாயத்து, சூனியம், ஜோதிடம் போன்ற ஷிர்க்கான செயல்களில் ஒருவர் ஈடுபட்டாலும் அவர் முஷ்ரிக் ஆக மாட்டாரா என்பது தான்.
.
இஸ்லாத்தில் இருந்துகொண்டு, இறைவனின் தன்மைகளில் இணைவைப்பதும் ஷிர்க் ஆகும் என்பதில் மாற்றமில்லை.எனவேதான் குறிப்பிட்ட செயல்களை செய்த முஸ்லிம்களை நோக்கியே நபிகளார் فَقَدْ أَشْرَكَ இணை வைத்து விட்டார் என சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
.
உதாரணமாக தாயத்து தொங்க விடுபவர் இணைவைத்து விட்டார், காஃபாவின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார், முடிச்சுகளில் ஓதி ஊதுபவர் இணைவைத்து விட்டார் என நபிகளார் பல்வேறு சந்தரப்பங்களில் கூறியுள்ளார்கள். இது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
.
ஆனால் இந்த விதியை தவறாக பயன்படுத்தி. இதுபற்றி தீர ஆய்வு செய்யாமல் மேம்போக்கான புரிதல்களை கொண்டு தங்களுடன் மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களையும் காஃபிர் முஷ்ரிக் என முடிவெடுக்கும் போக்கையும், அதனால் ஏற்படும் இம்மை மறுமை இழப்புகள் குறித்தே இப்பதிவு அலசுகிறது.
.
இஸ்லாத்தில் ஒரு நிலைபாட்டை ஓரிரு வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை வைத்து எடுப்பது முறையல்ல. சில நடைமுறை எதார்த்தங்களுடன் அது தொடர்பான மார்க்க ஆதாரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இதில் அவசரப்பட்டு குழப்பம் விளைவிப்போரில் நாம் ஆகிவிட மாட்டோம்.
.
இதை விரிவாக காண்போம்.
===================================
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு உள்ளத்தில் அறியாமை விலகாத மனிதர்கள்..
.
قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَـٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَـٰنُ فِى قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَـٰلِكُمْ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ⭘
(நபியே!) “இறைநம்பிக்கை கொண்டோம்” எனக் கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக ‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்’ என்று கூறுங்கள். உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கை நுழையவே இல்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் உங்கள் நற்செயல்களில் எதையும் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான்” என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
அல் குர்ஆன் - 49 : 14
.
இவ்வசனத்தில் ஈமான் கொண்டதாக கூறும் கிராமவாசிகளை நோக்கி நபிகளார் முஸ்லிம் ஆகிவிட்டதாக சொல்லுங்கள். ஈமான் உங்கள் உள்ளத்தில் நுழையவில்லை என்று கூறுகிறார்கள்.
.
அதாவது அவர்கள் வெளிப்படையில் இஸ்லாம் கூறும் வழிபாடுகளை ஏற்று செயல்படுத்துகிறார்கள்.. ஆனால் இன்னும் ஜாஹிலிய கால இறைமறுப்புக் குரிய நம்பிக்கைகள் அவர்களின் உள்ளத்திலிருந்து அகலவில்லை என்பதே ஈமான் நுழையவில்லை என்பதன் பொருளாகும். இதை கீழ்க்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது..
.
ٱلْأَعْرَابُ أَشَدُّ كُفْرًۭا وَنِفَاقًۭا وَأَجْدَرُ أَلَّا يَعْلَمُوا۟ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ⭘
இறைமறுப்பிலும், நயவஞ்சகத்திலும் கிராமவாசிகள் மிகக் கடுமையானவர்கள். தனது தூதர்மீது அல்லாஹ் அருளியவற்றின் வரையறைகளை அறியாமல் இருப்பதற்கே அவர்கள் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
அல் குர்ஆன் - 9 : 97
.
ஆக கிராமவாசிகள் உள்ளத்தில் குஃப்ரும், முனாஃபிக் தனமும் கொண்டவர்கள் என்றும். அதுவும் அதில் மிகக் கடுமையானவர்கள் என்றே அல்லாஹ் கூறுகிறான். அப்படி இருந்தும் நபிகளார் அவர்களை முஸ்லிமாகவே அங்கீகரித்தார்கள். அதற்கு காரணம் அவர்களிடம் இருந்த சில மார்க்க வரையறைகள் குறித்த அறியாமையே என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுவதாலும், வெளிப்படையில் இஸ்லாமிய வழிபாடுகளுக்கு கீழ்படிந்து விட்டார்கள் என்பதாலும் அவர்களை நபிகளார் முஸ்லிமாகவே ஏற்றார்கள்.
.
இந்த அடிப்படையிலேயே நாம் இன்றுள்ள முஸ்லிம்களை பிரித்தறிய வேண்டும். அதாவது திட்டவட்டமாக அறிந்துகொண்டே சொல்லாலும் செயலாலும் இறைமறுப்புக்கு வெளிப்படையாக சாட்சி சொல்வோரும், அறியாமையில் ஒரு தவறை சரியென நினைத்து செயல்படும் மக்களும் ஒன்றல்ல.
.
===================================
முஷ்ரிக் என சந்தேகம் ஏற்ப்படுத்தும் நபர்களிடையே அறிய வேண்டிய வேறுபாடுகள்..
.
உதாரணமாக, தர்ஹா, சூனிய நம்பிக்கைகள் உடைய முஸ்லிம்கள் எல்லோரும் முஷ்ரிக் என்பது சிலரின் எண்ணம். ஆனால் சுன்னத் வல் ஜமாத்தினரிடம் கூட முன்பை விட ஷிர்க் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்பட்டுள்ளது. விதிவிலக்கான சில ஊர்களை தவிர.
.
முஸ்லிம்களிடையே காணப்படும் உட்சபட்சமாக ஷிர்க்கில் தள்ளும் தர்ஹாவுக்கு செல்லும் மக்களிலேயே பல வகையினர் உள்ளனர்..
.
முதல் வகையினர்
இவர்கள் சிலைகள் தம் கோரிக்கைகளை செவியேற்கின்றன என்கிற இந்துமத நம்பிக்கை போன்றே, கப்ரில் அடங்கி இருப்பவர் தம் கோரிக்கைகளை செவியேற்கிறார் என நம்பிக்கை கொண்டிருப்பவர். இவர்கள் பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்து பலியிடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்து வழிபாடுகளையும் கப்ருக்கு செய்வார்கள்..
.
இரண்டாவது வகையினர்..
தர்ஹா வசூல் மூலம் பலனடையும் அதன் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், தர்ஹாவுக்காக பிரச்சாரம் செய்யும் இமாம்கள் ஆகிய கூட்டத்தினர். (காஃபாவில் ஜாஹிலிய வழிபாட்டை வைத்து வயிறு வளர்த்த அபு ஜஹ்ல், அபு லஹப் கூட்டத்தினர் போன்றவர்கள்.) இவர்களிடம் கேட்டால் ஆமாம் அவ்லியாக்களுக்கு செவியேற்கும் ஆற்றல் உள்ளது என்பார்கள். அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பார்கள். இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர் தான் தனது இறைமறுப்புக்கு தானே சாட்சி சொன்னவர் ஆவார்..
.
இந்த இரண்டு வகையினர் மட்டும் தான் திட்டவட்டமாக தங்களின் சொல்லாலும், செயலாலும் சாட்சி கூறும் முஷ்ரிக்குகள் ஆவார்கள்.
.
காரணம் அதை அல்லாஹ்வே கூறிவிட்டான்.
.
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا۟ مَسَـٰجِدَ ٱللَّهِ شَـٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلْكُفْرِ ۚ أُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ وَفِى ٱلنَّارِ هُمْ خَـٰلِدُونَ⭘
இணை வைப்போர், தமக்குத் தாமே இறைமறுப்புக்குச் சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களின் (நற்)செயல்கள் அழிந்து விட்டன. நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல் குர்ஆன் - 9 : 17
.
இணைவைப்பு காரியங்களில் ஈடுபடுவோர் என்று மட்டும் சொல்லாமல், தாம் இந்த நம்பிக்கையில் தான் இதை செய்கிறேன் என வெளிப்படையாக சாட்சி கூறுவோரையே முஷ்ரிக் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். இது ஒருவரை முஷ்ரிக் என்று முடிவெடுக்க அல்லாஹ் கற்றுத்தரும் அளவுகோல் ஆகும்.
.
இது தவிர்த்து தர்ஹாவின் எந்த வழிபாடுகளிலும் தம்மை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல், உலமாக்களின் தவறான பிரச்சாரத்தால் தர்ஹாக்கள் ஸியாரத் செய்யும் இடம், அங்கு செல்வது ஒரு இபாதத் என்று தவறான நம்பிக்கையில் சென்று எந்த வழிபாடும் செய்யாமல் வருபவர்கள், தர்ஹாவுடன் வணிக ரீதியாக தொடர்புடையவர்கள், அரசு அதிகார பதவிகளில் இருந்து கொண்டு துறை ரீதியாக கோவில் மற்றும் தர்ஹா மேம்பாடுகளில் பங்கெடுப்பவர்கள், ஒதுங்க இடமில்லாமல் அங்கே அடைக்களம் புகுந்துள்ள அநாதைகள் இவர்களெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தர்ஹாவுடன் தொடர்புடையவர்கள் தான்.
.
தர்ஹாவின் வாடகை கடை வைத்து நடத்தும் எத்தனையோ பேர், தவ்ஹீத் சிந்தணை உள்ள சகோதரர்கள் உண்டு. அதே போல ஓட்டுனர்களில் சபரி மலைக்கும், கோவில்களுக்கும், தர்ஹா ஹந்தூரி விழாக்களுக்கு சவாரி கொண்டு செல்வோர் உண்டு. இவர்கள் அனைவரும் மறைமுகமாக தர்ஹாவின் மேம்பாடுகளில் பங்களிக்கிறார்கள். அங்கு சென்று வருவதாலேயே வெளிப் பார்வைக்கு இவர்கள் முஷ்ரிக்குகளாக தான் தெரிவார்கள். இதுவும் பாவமாகும் என்றாலும், இவர்களின் ஈமானின் நிலையென்ன, இவர்கள் நிரந்தர நரக பட்டியலில் வருவார்களா இல்லையா என அவர்களின் நிய்யத்தை பொறுத்து அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றவன்.
.
நாம் இவர்களை பிரித்தறியவும் முடியாது. வெளிப்படையை வைத்து முடிவெடுக்கவும் முடியாது. அவர்களே ஒப்புக்கொண்டாலே தவிர..
.
ஏனெனில், அங்கே உள்ளே செல்பவன் கூட, கப்ரை நோக்கி பிரார்த்தனை செய்கிறாரா, இல்லை தவறான புரிதலில் ஸியாரத்துக்கான துஆ மட்டும் ஓதிவிட்டு வருகிறாரா, அல்லது வேறு ஏதேனும் அலுவலுக்கு சென்றாரா என்பதை அவர்களே சொல்லும் வரை நாம் அறிய மாட்டோம். ஒவ்வொருவரையும் துருவி ஆராய்வதும், தீர்ப்பளிப்பதும் நமக்கு தடுக்கப்பட்டதும் ஆகும்..
.
ஆகவே, இவர்கள் செய்வது பெரும் பாவமாகும், எந்த வகையிலும் தர்ஹாவுடன் நம் தொடர்பு இருத்தல் கூடாது, அவை இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானவை, யூதர்களின் கலாச்சாரம், நபிகளார் அதை இடிக்க கட்டளையிட்டுள்ளார்கள், என்பதையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எனினும் அவர்கள் என்ன புரிதலில் இருக்கிறார்கள் என்பதை கேட்டறிந்த பின்னரே அவர்கள் முஷ்ரிக்கா இல்லையா என முடிவெடுக்கவே முடியும். அதுவரை அவர்களின் வெளிப்படையை வைத்து முஸ்லிமாகவே நாம் கருத வேண்டும்.
.
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَـٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا⭘
உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! செவி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றும் அதுகுறித்து விசாரிக்கப்படுவதாகும்.
அல் குர்ஆன் - 17 : 36
.
சந்தேகம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். என்பது நபிமொழி ஸஹீஹ் புகாரி : 5143.
.
இப்படி தீர விசாரிக்காமல் தர்ஹா தொடர்புடைய அனைவரும் முஷ்ரிக், காஃபிர் என்று முத்திரைக் குத்த தொடங்கினால், அடுத்து அவர்கள் நம் பேச்சை செவி கொடுத்து கேட்கும் வழியைக் கூட நாம் அடைத்து விட்டதாக ஆகிவிடும்.
.
மேலும் அவர்கள் இணைவைப்பு நம்பிக்கை அல்லாத, வேறு சில நோக்கங்களில் அங்கு சென்றவராக இருந்தால், அவரை முஷ்ரிக் என்று முடிவெடுத்த தவறான தகவலை பரப்பிய பாவம் நமக்கே வந்தடையும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
===================================
சூனியமும் ஜோதிடமும்,
அதே போல, சூனிய விவகாரத்திலும் பல வகையினர் உள்ளனர்.
1. சூனியத்திற்கு ஆற்றல் உண்டு எனக் கூறி பூஜை சடங்குகளை செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கும்பல்.
2. சூனியக்காரனுக்கு புற சாதனங்களின்றி அற்புதம் செய்யும் ஆற்றல் உள்ளது என நம்பி அவனிடம் சென்று சூனியம் வைக்கும் அல்லது எடுக்கும் காரியங்களில் ஈடுபடும் மக்கள்..
இவர்கள் இரு சாராரும் இணைவைப்பிலேயே உள்ளனர் என்பதில் மாற்றமில்லை. ஏனெனில் இவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தானை வழிபடும் ஒருவனிடமே செல்கின்றனர்.
.
ஆனால், வேறு சிலர் சூனியம் செய்வினை என்று சொன்னவுன் பேய், பிசாசு என பொய்யான கதைகளுக்கு பயப்படுவது போல ஜின் ஷைத்தான் நம்பிக்கைகளை இதனுடன் கலந்து, பயம் மற்றும் அறியாமையின் காரணத்தால் அதற்கு ஆற்றல் இருக்குமோ என அறியாமையில் இருக்கும் மக்கள். இவர்கள் சூனியக்காரனிடம் சென்று அமர்ந்து அந்த நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்காத வரை முஷ்ரிக் பட்டியலில் வர மாட்டார்கள்.
.
===================================
அடுத்ததாக தவ்ஹீதை பேசிக்கொண்டே சூனிய நம்பிக்கையில் நம்முடைய புரிதலுக்கு சில மாற்றுக் கருத்துக் கொண்ட ஜாக், ஸலஃபு மக்கள். அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சூனியம் பற்றி வரும் செய்திகளை வைத்து, சூனியத்திற்கு அல்லாஹ் நாடினால் தாக்கம் ஏற்படும் என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும்.
.
இவர்களும் முஷ்ரிக் பட்டியலில் வர மாட்டார்கள். எதுவரையென்றால் சூனியத்தை செயல் மூலம் உண்மைப்படுத்தும் வரை.காரணம், இஸ்லாமிய வரையறைக்குள் இருந்துகொண்டே அல்லாஹ்வின் பண்பு நலன்கள்களில் சில அறியாமையில் இருக்கும் யாரும் முஷ்ரிக் என்கிற அளவிற்கு நிச்சயம் வர மாட்டார்கள் என்றே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.
.
உதாரணமாக, ஜோதிடத்தை நம்புவது அல்லாஹ்வின் ஒரு தன்மையை ஜோசியக் காரனுக்கு கொடுத்ததாக ஆகும். காரணம் அல்லாஹ் தான் மறைவானவற்றை அறிகிறான் எனும்போது அந்த தன்மையை நாம் வேறெவருக்கும் கொடுக்கக் கூடாது.
.
عَـٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا⭘ إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍۢ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًۭا⭘
அவன் மறைவானவற்றை அறிபவன். தான் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர வேறு எவருக்கும் அவன் மறைத்திருப்பதை வெளிப்படுத்த மாட்டான்.
.
அல் குர்ஆன் - 72 : 26,27
.
ஆனால் இந்த ஜோதிடனுக்கு ஆற்றல் இருப்பதாக நம்பி அவனிடம் போய் ஏதேனும் கேட்போரை நபிகளார் முஷ்ரிக் என்று சொல்லவில்லை. மாறாக நாற்பது நாட்கள் தொழுகை பாழாகும் என்றே கூறியுள்ளார்கள்.
(முஸ்லிம்-4488 (4137)
.
அதே வேலையில் யார் அந்த ஜோதிடன் சொல்வதை உண்மைப்படுத்துகிறாரோ அதாவது அதன்படி அமல் செய்து விடுகிறாரோ அவரைத் தான் காஃபிர் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 9536)
.
ஆக, ஜோதிடன் சொல்வதை உண்மைப் படுத்தியவன் தான் காஃபிர் ஆகிறானே தவிர உள்ளத்தில் அந்த நம்பிக்கை இருப்பதால் சில அமல்களில் இழப்புகள் உண்டு, ஆனால் அவர் காஃபிர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
.
அதே போல தான் சூனியம் உள்ளிட்ட விடயங்களும். சூனியக்காரனுக்கு ஆற்றல் இருப்பதாக தவறான நம்பிக்கையில் உள்ளவர்களுக்கு அமல்களில் சில இழப்புகள் ஏற்படலாம். ஆனால் சூனியக்காரனிடம் சென்று அவர்கள் அவனை உண்மைப்படுத்தாத வரை அவர்கள் முஷ்ரிக், காஃபிர் எனும் பட்டியலில் வர மாட்டார்கள்.
.
ஒவ்வொருவர் கல்வி கற்ற சூழல், கற்பித்த ஆசிரியர்களின் அகீதா, அவர்கள் அல்குர்ஆன் ஹதீஸை அணுகும் கோணங்களை பொறுத்து அவர்களிடம் சில மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அது சரியாக காலம் எடுக்கலாம். அது நமது பார்வையில் தவறாக தெரிந்தால்,
.
இத்தகையோரிடம் ஈமானோடு இணைவைப்பை கலந்து விடாமல் இருப்போருக்கே மறுமையில் முழு பாதுகாப்பு உண்டு, என சரியான புரிதலை உண்டாக்க பாடுபடுவது மட்டுமே நம் கடமையே தவிர, முஷ்ரிக் என தீர்ப்பளிக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.
.
நாம் முரண்பட்ட விடயங்களில் அல்லாஹ்விடமே தீர்ப்பை எதிர்பார்ப்போம்..
.
கொள்கைக்காக உறவுகளையும் பகைக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அந்த உசூலை தன் மனோ இச்சைப்படி தவறாக பயன்படுத்தி, அவசியமற்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்களிடையே வெறுப்பை வைத்திருப்பது தான் பீஜேயிசத்தின் வெற்றி எனலாம். அல்லாஹ் நாடியவர்களை தவிர..
.
இத்தனை சான்றுகளையும் சிந்திக்காமல் , சர்வ சாதாரணமாக பிறரை முஷ்ரிக், காஃபிர் என்று கூறி முஸ்லிம்களிடையே வீணான பகைமையும் வெறுப்பையும் உண்டாக்கும் மக்கள் கீழ்க்காணும் நபிமொழிகளை படித்தாவது எசசரிக்கை பேண வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை “இறைமறுப்பாளர்“ (காஃபிர்) என்று கூறினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார், இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து "இறைமறுப்பாளனே!" ("காஃபிரே!") என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
.
ஸஹீஹ் முஸ்லிம் : 111.
.
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
.
ஸஹீஹ் புகாரி : 6045.
=========================
.
Comments
Post a Comment