இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்

குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்..


وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا 
யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான்.

وَيَصْلَىٰ سَعِيرًا 
அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான்.

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا 
அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான்.

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ 
(இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான்.

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا 
அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான்.

அல்குர்ஆன் -   84 : 10 - 15

📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம்.

அந்த மகிழ்ச்சி சிலரை மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பை மறக்கும் அளவுக்கு  துன்யாவில் மூழ்கடிக்கிறது. மறுமையில் இறைவனின் சந்திப்பை மறந்து வாழ்கிறார்கள்.அதன் விளைவாக குடும்பத்தினர் செய்யும் பிழைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி அதற்கு சிலர் துணை நிற்கவும் செய்கிறார்கள்.

குடும்பத்துடன் சினிமாக்கள், சீரியல்கள் பொழுதுபோக்கு சுற்றுலாக்கள் என கேலிக்கைகளில் மூழ்குவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களில் பலர், குடும்பத்துடன் அல்குர்ஆனை தினசரி ஓதுவதிலும், மனனம் செய்வதில் அதில் போட்டிப் போடுவதிலும், குடும்பத்துடன் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதிலும் ஹதீஸ்களை வாசிப்பதிலும், மார்க்க ரீதியாக கலந்துரையாடுவதிலும்,  மார்க்க உரைகளை வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து கேட்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை...
.
சிறுசிறு பாவங்களை தங்களுக்குள் தடுத்துக் கொள்ளாமல் இருக்கின்ற போக்கு, ஒருகட்டத்தில் மது, வட்டி, மோசடி, போன்ற பெரும்பாவங்களில் தம் குடும்பத்தினர் ஈடுபட்டாலும் அதை தடுக்காமல் குடும்பத்தினரே துணை செல்ல துவங்குகின்றனர்.
.
இவர்கள் நிலையை குறித்து தான் அந்த வசனங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தான் எனக் கூறுகிறது.இவர்களின் இந்நிலைக்கு காரணம், உலகில் உபகாரம் செய்து கொள்வது மட்டுமே குடும்ப பொறுப்புகள் என மனிதர்கள் கருதுகிறார்கள்.

சம்பாதித்து போடுவது மட்டுமே தனது பொறுப்பு என குடும்ப தலைவர் கருதுகிறார். அவர் சம்பாதித்த செல்வத்தில் வாங்கிய தொலைகாட்சியும் செல்ஃபோனும் குடும்பத்தில் தவறான விடயங்களுக்காக பயன்படுத்தப்படுவது குறித்தும், வீணான செலவுகள் குறித்தும் விசாரிக்கப்படுவார் என்பதை அவர் சிந்திப்பதில்லை.

சமைத்து, துவைத்து வீட்டை தூய்மையாக பராமறித்துக் கொள்வது மட்டுமே தனது பொறுப்பு என குடும்ப தலைவிகள் கருதுகிறார்கள். தம் பொறுப்பின் கீழுள்ள குடும்ப உறுப்பினர்கள் தொழுகை ஓதுதலில் கவனம் எடுக்காமல் இருப்பது பற்றி இல்லத்தரசிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என கருதுகிறார்கள்.

சம்பாதித்து கொடுப்பதும், பராமறிப்பு பணிகளும், பொறுப்புகள் தாம். இதற்கும் விசாரணையும் கூலியும் உண்டு. ஆனால் இது தவிர்த்து மிக முக்கியமான பொறுப்பு குறித்து கீழுள்ள வசனங்கள் பேசுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். அல்குர்ஆன் 66:6

وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ  

(நபியே!) உமது குடும்பத்தினருக்குத் தொழுகையை ஏவுவீராக! அ(தைக் கடைப்பிடிப்ப)தில் பொறுமையை மேற்கொள்வீராக ! அல்குர்ஆன் -   20 : 132

وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ 
(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக !
அல் குர்ஆன் -   26 : 214

📌 இறைவனின் இந்த கட்டளைகள் யாவும் ஒவ்வொரு குடும்ப தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் என்றே அவர்கள் உணரவில்லை..எனவே உலக பொறுப்புகளிலும், உபரியான நேரங்களை வீணான பொழுது போக்கிலும் கழிக்கின்றனர்.

=========================
.
📌 துன்யாவில் வந்த நோக்கம் மறந்து இப்படியான துன்யாவுக்காக மட்டுமே வாழ்ந்து குடும்பத்துடன் நரகம் நுழைவதே நட்டத்திலேயே பெரும் நட்டம் என அல்குர்ஆன் கூறுகிறது.


قُلْ إِنَّ ٱلْخَـٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ⭘

நஷ்டப்பட்டோர் யாரெனில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் மறுமை நாளில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள்! இதுதான் தெளிவான நஷ்டமாகும்” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 39:15

அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாப்பானாக..
.
துன்யாவில் குடும்பத்தினருக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளுக்கே துடிதுடித்து போகின்றோம். அவர்களை மறுமையில் நரகத்திலிருந்து காக்க நாம் செய்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஒவ்வொரு குடும்ப பொறுப்பாளர்களும் இன்றே சிந்திப்போம்.. 

==========================

குடும்பத்துடன் சொர்க்கம் நுழைபவர்கள்.

جَنَّـٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍۢ⭘ سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ⭘ 

அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நல்லோராக இருந்தவர்களும் நிலையான சொர்க்கங்களில் நுழைவார்கள். அவர்களிடம் வானவர்கள் அனைத்து வாசல்களிலிருந்தும் வருவார்கள். “நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது அமைதி ஏற்படட்டும்! மறுமையின் முடிவு நல்லதாகி விட்டது (என்று கூறுவார்கள்.) அல் குர்ஆன் -   13 : 23,24

பூமியில் உலக முன்னேற்றங்களில் மட்டுமே தொலைந்து விடாமல், இஸ்லாத்தை படிப்பதிலும், படிப்பினையுடன் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதிலும், ஆர்வமுடன் செயல்பட்டோர், அதில் ஏற்படும் சிரமங்களில் பொறுமை மேற்கொண்டோர் குடும்பத்துடன் சொர்க்கம் நுழைவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது..

==========================

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்??


இதற்கு இப்றாஹிம் அலை அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மிகச் சிறந்த முன்மாதிரி ஆவார்கள்.

இறைக்கட்டளை பிரகாரம் வேளாண்மையில்லாத பூமியில் தமது மனைவி ஹாஜர் (அலை) மற்றும் பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை கொண்டுசென்று இப்றாஹீம் நபி அவர்கள் விட்டபோது இறைவன் தான் இப்படி கட்டளையிட்டானா?” என அன்னை ஹாஜர் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் என பதில் வந்தவுடன் அப்படியென்றால் இறைவன் என்னை கைவிட மாட்டான்” என விட்ட இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டார்கள், (பார்க்க புகாரி: 3364)

அதே போல இறைக்கட்டளை பிரகாரம் மகனை அறுப்பதற்கு இப்றாஹீம் அலை அவர்கள் தயார் ஆனபோது “உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றுங்கள், நான் பொறுமையாக இருப்பேன்” என்று இஸ்மாயீல் அலை கூறினார்கள். அல் குர்ஆன் 37:102

இவையெல்லாம் எதை காட்டுகிறது?

இறைக் கட்டளை என்று சொல்லிவிட்டால் அதில் எத்துனை பெரிய இழப்புகள் இருந்தாலும் அப்படியே கீழ்பபடியும் அளவுக்கு தன் குடும்பத்தினருக்கு  இறையச்சத்தை ஊட்டியிருந்தார்கள் நபி இப்றாஹீம் அலை அவர்கள்.
.
இந்த கீழ்ப்படிதலை தான் ஒவ்வொரு குடும்ப பொறுப்பாளர்களும் தமது குடும்பத்தினருக்கு போதிக்க வேண்டும். இறையச்சம் இருந்தால் மட்டுமே இத்தகைய அற்பணிப்பான கீழ்ப்படிதல் சாத்தியம்.
.
அந்த இறையச்சத்தையும் கீழ்ப்படிதலையும் தொழுகையில் துவங்கி ஒவ்வொரு சிறுசிறு விடயங்களிலும் இப்றாஹிம் (அலை) போதித்ததால் தான், இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ் தனியாக நினைவு கூர்கிறான்.
.

وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ إِسْمَـٰعِيلَ ۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلْوَعْدِ وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا

இஸ்மாயீலையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

அல் குர்ஆன் -   19 : 54

وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّۭا

அவர், தமது குடும்பத்தாருக்குத் தொழுகை மற்றும் ஸகாத்தை (நிறைவேற்றுமாறு) ஏவக்கூடியவராக இருந்தார்; தமது இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.

அல் குர்ஆன் -   19 : 55

தந்தையின் வளர்ப்பில் அடைந்துகொண்ட நேர்வழியை தனது குடும்பத்தினருக்கு ஏவக்கூடியவராக இஸ்மாயீல் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள்.
.
இப்படி குடும்பமாக இஸ்லாத்தை தானும் பின்பற்றி அதன் வளர்ச்சியிலும் பங்களித்த பல குடும்பங்களை அல்லாஹ் பொருந்தி கொண்டதாக அல்குர்ஆனில் கூறுகின்றான்.

إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰٓ ءَادَمَ وَنُوحًۭا وَءَالَ إِبْرَٰهِيمَ وَءَالَ عِمْرَٰنَ عَلَى ٱلْعَـٰلَمِينَ

ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

அல் குர்ஆன் -   3 : 33
.
==========================
.
📌 தொழுகையை ஏவுவதில் பொறுமையுடன் உறுதியுடன் இருத்தல்

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ

( நபியே ) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. அல்குர்ஆன் 20:132

சாப்பிட்டாயா என கேட்கும் அளவுக்கு கூட, கடமையான தொழுகைகளை தொழுதாயா என குடும்பத்தினருக்குள் கேட்டுக் கொள்வதில்லை.

அல்லது ஃபஜ்ர் தொழுகைக்கு பிள்ளைகளை எழுப்புவதை அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

கணவன் உழைத்த களைப்பில் உறங்குகிறார் என மனைவி நினைப்பதும், மனைவி வீட்டு வேலை செய்த களைப்பில் உறங்குகிறார் என கணவன் நினைப்பதும் அவர்கள் மீது காட்டும் அக்கறை போல ஷைத்தான் நமக்கு அழகாக்கி காட்டுகிறான்.

உண்மையில் அக்கறை என்பது அவர்களை நரகிலிருந்து காக்க நாம் எடுக்கும் முயற்சிகள் தான். ஆகவே தொழுகையை குடும்பத்தில் ஏவுவதை சிரமமாக கருதுவிடக்கூடாது.

📌 இரவுத் தொழுகையில் இணைந்து செயல்படும் குடும்பத்திற்கு இறைதூதரின் பிரார்த்தனையை பெரும் பாக்கியம்


رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى، وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ رَشَّ فِي وَجْهِهَا الْمَاءَ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى، فَإِنْ أَبَى رَشَّتْ فِي وَجْهِهِ الْمَاءَ ".
حكم الحديث: حسن صحيح

ஒரு மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான்.ஒரு மனிதர் இரவில் எழுந்து இறைவனை தொழுகிறார். தனது மனைவியையும் எழுப்பி விடுகிறார். அவள் உறங்கிக் கொண்டிருந்தால் அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்..

இன்னும், ஒரு பெண் இரவில் தொழுகைக்கு எழுகிறார். தனது கணவனையும் எழுப்பி விடுகிறார். அவர் உறங்கிக் கொண்டிருந்தால் அவர் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்.இத்தகைய பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். நூல் : இப்னு மாஜா


 إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ مِنَ اللَّيْلِ وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَصَلَّيَا رَكْعَتَيْنِ كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ ".

حكم الحديث: صحيح

இரவில் ஒருவர் எழுந்து, தன் மனைவியையும் எழுப்பிவிட்டு, இருவரும் இரவில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால், (அல்குர் ஆன் 33:35 வசனம் சொல்வது போல்) அல்லாஹ்வை அதிகம் நினைவுக்கூரும் ஆண் & பெண் என்கிற தகுதியை அவர்கள் அடைகிறார்கள்.நூல் : இப்னு மாஜா

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

என் தாய் தந்தையர் எனக்கு விபரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் இருந்ததில்லை. பின்னர் ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூ பக்ரு அவர்களுக்குத் தோன்றியபோது தம் வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக் கொண்டுமிருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும் குழந்தைகளும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூ பக்ரு மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும்போது அவரால் தம் கண்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஸஹீஹ் புகாரி : 476.

சிறு வயதிலிருந்தே தனது தந்தையை தொழுபவராக பார்த்த ஆயிஷா (ரலி) பிற்காலத்தில் பெண்களிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவராக, கல்வியில் தேர்ந்தவராக திகழ்கிறார்கள். பெற்றோர்கள் அபூபக்கர் ரலி போல இருந்தால் தான் பிள்ளைகளை ஆயிஷா ரலி போல எதிர்பார்க்க முடியும். பெற்றோர்களிடம் அமல்கள் செயல்வடிவம் இல்லாமல் வெறும் வாயளவில் மட்டும் இருந்தால் அது பிள்ளைகளிடம் பெரிய மாற்றத்தை தராது.

உபரியான தொழுகைகளை பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். அல்குர்ஆன் ஓதப்படாத இல்லங்களை நபிகளார் மண்ணறைக்கு ஒப்பாக கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் வீடுகளில் பேணுவதன் மூலமே குடும்பத்தினரை மார்க்க சிந்தணையிலேயே வைத்திருக்க முடியும்.

📌 குடும்ப பிளவுகளை தவிர்க்க பெரியவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

சிறுவனாக இருந்த யூசுப் நபியை கிணற்றில் தள்ளிவிட்டு ஓநாய் சாப்பிட்டுவிட்டதாக கூறிய பிள்ளைகளிடம் யஃகூப் அலை கூறிய பொறுமையான வார்த்தைகளே சூழ்ச்சிக்கார மகன்களை பிற்காலத்தில் நல்ல மனிதர்களாக மாற்றியது.

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ

“இல்லை! உங்கள் உள்ளங்கள் ஒரு செயலை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டி விட்டன. (எனது நிலை) அழகிய பொறுமையே! அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். அவனே நன்கறிந்தவன், நுண்ணறிவாளன்” என்று (யஃகூப்) கூறினார்.

அல் குர்ஆன் -   12 : 83

அந்த பொறுமையே பாவமன்னிப்பு தேடுபவர்களாக அவர்களை மாற்றியது..

قَالُوا۟ يَـٰٓأَبَانَا ٱسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَـٰطِـِٔينَ

“எங்கள் தந்தையே! எங்களுடைய பாவங்களுக்காக எங்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவீராக! நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள். அல் குர்ஆன் -   12 : 97

இதில் கவனிக்க வேண்டிய அம்சம், தனக்கு விருப்பமான பிள்ளையை தொலைத்துவிட்டு வந்ததால், மற்ற பிள்ளைகளிடம் யாஃகூப் அலை அவர்கள் வெறுப்பை உமிழ்ந்து பாரபட்சத்துடன் நடந்துகொள்ள வில்லை. அல்லாஹ்வை முன்னிறுத்தி அவர்களின் தவறை உணர்த்தும் அதே வேலையில் பொறுமையையும் கைக்கொண்டார்கள். அதுவே அவர்களை நல்லவர்களாக மாற்றியது.

ஆனால் இன்றோ, பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் மனக்கசப்புகளின் போது பொறுப்புடன் நீதியாக நடந்து அவர்களிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டிய பெற்றோர்ளே, தனக்கு பிடித்த பிள்ளையிடம் ஒரு மாதிரியும் மற்றவர்களிடம் வேறு விதமாகவும் நடந்து பிளவை பெரிதாக்கி விடுகின்றனர்.

இது மிகவும் தவறாகும்.குடும்பத்தினர்கள் மத்தியில்  பழிவாங்கும் உணர்வு இன்றி ஒருவருக்கொருவர் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ ٱلْيَوْمَ ۖ يَغْفِرُ ٱللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

“இன்றைய தினம் உங்கள் விஷயத்தில் பழிப்பும் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்.
(அல் குர்ஆன் -   12 : 92)

இது தன்னை கிணற்றில் வீசி பல இன்னல்களுக்கு ஆளாக்கிய சகோதரர்களை, யூசுஃப் அலை அவர்கள் சந்தித்த போது கூறிய வார்த்தைகள்.அப்போது யூசுஃப் அலை அவர்கள் நாட்டின் அமைச்சராக இருந்தார்.பெரும் அதிகாரம் உடையவராக மாறிய பின்னரும் தமது சகோதரர்களை தண்டிக்காமல், மன்னித்ததன் மூலம் அவர்களை நேர்வழியின் பக்கம் அழைத்தார்.

இன்று அற்ப உலக சொத்து சுகங்களுக்காக உடன்பிறப்புகளுடன் கடும் பகையுணர்வு கொண்டு முறித்து வாழ்வோர் இதில் படிப்பினை பெற வேண்டும்.

📌 நல்லோர்களின் இறுதி வசிய்யத்

இப்ராஹிம் அலை அவர்களும்  யஃகூப் அலை அவர்களும் தமது இறுதிக்காலத்தில் தம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறு வஸிய்யத் செய்கிறார்கள்.

وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

“என் பிள்ளைகளே! உங்களுக்காக இம்மார்க்கத்தை அல்லாஹ் தேந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்” என்பதையே தம் மக்களுக்கு இப்ராஹீமும், யஃகூபும் அறிவுறுத்தினர். அல் குர்ஆன் -   2 : 132

.
குடும்ப பொறுப்பாளர்கள் தம் குடும்ப உறுப்பினர்களிடம், எதையெல்லாமோ பேசுகிறார்கள்..
.
வரவு செலவுகள் பற்றி, வீட்டு தேவைகள் பற்றி, உறவினர்கள் பற்றி, பள்ளிக்கூட கல்வி பற்றி, விளையாட்டு பற்றி, நண்பர்கள் பற்றி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பற்றி, உலக முன்னேற்றங்கள் பற்றி இப்படி உலக ரீதியான எல்லா விவகாரங்களையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பாளர்கள் எத்துனைப் பேர் இஸ்லாம் பற்றியும், இறைவன் பற்றியும், அவனுக்கு அஞ்ச வேண்டிய முறைகள் பற்றியும், காலந்துரையாடுகிறோம் ?.

குடும்பத்துடன் இறைவனை பற்றியும், இறைதூரகள் பற்றியும், இறைவழியில் பாடுபட்ட தியாகிகளின் வரலாறு பற்றியும் படிக்கும் பழக்கமும், காலந்துரையாடும் பழக்கமும் குடும்பத்தினரிடையே ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் அல்குர்ஆனிலிருந்து சில பக்கங்களை தமிழில் வாசித்து குடும்பத்தினருக்கு போதிப்பது, குடும்பத்துடன் அமர்ந்து பயான்கள் பார்ப்பது இந்த பழக்கங்கள் தான் நம்மை குடும்பத்துடன் சொர்க்கம் கொண்டு சேர்க்கும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நல்குவானாக...

📌 குடும்பத்தினரின் மார்க்க உறுதிக்காகவும், மறுமை வெற்றிக்காகவும் நபிமார்கள் செய்த பிரார்த்தனைகள் சில..

இப்றாஹிம் அலை செய்த பிரார்த்தனை

وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ

“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

அல் குர்ஆன் -   14 : 35

رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!

அல் குர்ஆன் -   14 : 37

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!

அல் குர்ஆன் -   14 : 40

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ⭘

எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)

அல் குர்ஆன் -   14 : 41

லூத் அலை செய்த பிரார்த்தனை

رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ

“என் இறைவனே! இவர்கள் செய்வதை விட்டு, என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றுவாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)

அல் குர்ஆன் -   26 : 169

நூஹ் அலை செய்த பிரார்த்தனை

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

“என் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளராக என் வீட்டிற்குள் நுழைந்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் இறைஞ்சினார்.)

அல் குர்ஆன் -   71 : 28

மூஸா அலை செய்த பிரார்த்தனை

قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

“என் இறைவனே! என்னையும் எனது சகோதரரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார்.

அல் குர்ஆன் -   7 : 151

Comments

Popular posts from this blog

இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

ஆடம்பரமும் அதன் அளவுகோலும் ஓர் ஆய்வு

நட்பு ஓர் இபாதத்