தலாக் சட்டங்கள்.. தொடர் 1




ணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும்பொழுது விவாகரத்து என்ற முடிவுக்கு வருவது உலகில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களிடமும் கடைபிடிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். என்றாலும், முஸ்லிம்கள் செய்யும் விவாகரத்து மட்டும் இந்த நாட்டில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முழுமுதற் காரணம் முஸ்லிம்களுக்கு தலாக் பற்றிய சட்டங்களைச் சரியாக விளக்கிக் கூறாத, மார்க்கத்தை அறியாத மார்க்க அறிஞர்கள் தாம்.

முஸ்லிம்கள் தங்கள் விவாகரத்து விவகாரங்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லாமல் தங்கள் மார்க்க அடிப்படையிலேயே முடிவு செய்து கொள்கிறார்கள் எனும்போது இந்த மார்க்க அறிஞர்கள் அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் தான் எடுத்த எடுப்பிலெல்லாம் தலாக் கூறி பெண்களுக்கு அநீதி இழைக்கும் நிலை இந்தச் சமுதாயத்தில் உருவாகி, தற்போது சங்பரிவார கும்பலின் தூண்டுதலால் உச்சநீதிமன்றம் இதில் தலையிடும் அளவுக்கு வந்துள்ளது.

எஸ்.எம்.எஸ், ஈமெய்ல் ஆகியவற்றின் மூலமாக தலாக் சொல்லும் மூடர்களெல்லாம் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருந்தால், நரிகளெல்லாம் ஏன் நாட்டாண்மை செய்யாது?








நினைத்தவுடனே தலாக் சொல்லி மணமுறிவு செய்துகொள்வதையோ, பல வருடகால பந்தத்தை 'முத்தலாக்' என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்வதையோ இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை...


கணவன் மனைவியிடையே மனக்கசப்புகள் ஏற்பட்டால் தலாக் என்ற நிலைக்கு வருவதற்கு முன் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் சில வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவற்றை முறையாகக் கடைபிடித்தால் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டு, பெரும்பான்மையான மணமுறிவுகள் தவிர்க்கப்பட்டு விடும். மேலும், அந்த வழிகாட்டுதல்களை ஆய்வு செய்தால், விவாகரத்தைத் தவிர்த்து, நல்லிணக்கம் ஏற்படுத்தவே இஸ்லாம் விரும்புகிறது என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.


பொதுவாக விவாகரத்து என்ற பேச்சை எடுக்கும் அளவுக்கு கணவன், மனைவியிடையே பாரதூரமான பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால், அவர்கள் முதலில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை 'ஈலாஃ' என்பதாகும். அதாவது ஒருவரோடு ஒருவர் எந்த ஒட்டு உறவும் வைத்துக் கொள்ளாமல் சில காலங்களுக்குத் தற்காலிகமாகப் பிரிந்து இருப்பதாகும். அதிகபட்சமாக நான்கு மாதங்கள் மட்டுமே இதை கடைபிடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. அதற்குமேல் அனுமதியில்லை.

தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:226)

நான்கு மாதங்களுக்கு மேல் ஒருவரையொருவர் காக்க வைக்க அனுமதியில்லை.. அதற்குள் சேர்வதா பிரிவதா என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்பது இதன் பொருள். சிலர் எந்த முடிவையும் எடுக்காமலேயே வருடக் கணக்கில் பிரிந்திருப்பர்.. அது தடுக்கப்பட்டுள்ளது.. 

நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் மனைவிமார்களோடு ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் ஒரு மாத காலம் ஈலாஃ இருப்பதாகக் கூறி, 29 நாட்கள் அதைக் கடைபிடித்து, மீண்டும் மனைவியரோடு இணைந்துக் கொண்டார்கள். 
(பார்க்க புகாரி 5201, 5202, 5203)

ஒரு மாதமோ, இரண்டு மாதமோ பேசமாட்டேன் என சத்தியம் செய்தவர் அந்த காலக்கெடுவை நிறைவுசெய்ய வேண்டும் அவசியம் இல்லை.. இடையிலேயே மனம் மாறினால் இணைந்து கொள்ளலாம்..

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல பலருக்கு தங்கள் துணையின் அருமை, பிரிவில் தான் தெரிகிறது. சேர்ந்து இருக்கும் காலங்களில் தமது துணையிடம் பெரிய பிரச்சனைகளாகத் தெரிந்த விஷயங்களெல்லாம் தனித்திருந்து சிந்தித்தால் நகைப்பிற்குரிய செயலாகவே தெரியும். அது அவர்களின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கும். கணவனோ, மனைவியோ இருவரில் யார் மீது தவறு இருக்கின்றதோ அதை அவர் உணர்ந்து, தன் தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பாக அந்த பிரிவு அமையும்..

இந்தத் தற்காலிகப் பிரிவே அவர்களுக்கு நிரந்தரப் பிரிவு எத்தகைய துயரம் வாய்ந்தது என்பதை உணர்த்தி விடும். அல்லது தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது சேர்ந்து வாழ வழிவகுக்கும். இவ்வாறு உளவியல் ரீதியாக அவர்களுக்கு இஸ்லாம் இதுபோன்ற ஒரு வழிகாட்டலை வழங்கியுள்ளது.

ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, அல்லது இறைவன் அதிகபட்சமாக அனுமதித்த நான்கு மாதம் வரையில் கூட பிரிந்து இருந்த பிறகும் அவர்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் அடுத்து கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்...

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!