நபி வழியில் கபுர் ஜியாரத் ..


கபுர் ஜியாரத் என்ற நபிவழி மார்க்கத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நபிவழியை தர்காவில் செய்யும் அமல் என்று பலர் கருதி வருகின்றனர்.இது முற்றிலும் தவறு..கபுர் ஸியாரத்துக்கும் தர்காவுக்கும் சம்பந்தமேயில்லை..ஏன் இஸ்லாத்திற்கும் தர்காவுக்குமே சம்பந்தமே இல்லை என சொல்லலாம்..

(அலீ (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது படைத்தளபதியாக இருந்த அபுல்ஹய்யாஜ் அல் அஸதி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்..


அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம்.. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.

(அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) "உயர்ந்துள்ள எந்தக் கப்றையும்" தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதி (ரஹ்)

                 நூல்: முஸ்லிம் 1764



கபுர்கள் காரையால் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்..

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
                 நூல்: முஸ்லிம் 1765, 1765


மிகத் தெளிவான இந்த இரண்டு ஹதீஸ்கள் பொதுவாக அடக்கத்தளங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நமக்கு கூறுகிறது. கபுர்கள் மீது பூசுவதோ, கட்டிடம் எழுப்புவதோ கூடாது.தரைமட்டமாக விட்டுவிட வேண்டும்.ஏற்கனவே உயர்த்தி கட்டப்பட்டுள்ள கபுர்களையும் நபிகளார் உடைத்து எரிய கூறியிருக்கிறார்கள் என்றால், எந்தளவிற்கு அது வெறுக்கத்தக்க காரியம் என்பதை விளங்கலாம்..

மேலும் அவ்வாறு கப்றுகளை உயர்த்தி கட்டுபவர்கள் படைப்பினங்களிலேயே மகா கெட்டவர்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
           நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873;
                               முஸ்லிம் 822, நஸயீ 0704,
                              அஹ்மத் 23731


தர்காக்களே கூடாது, அதை கட்டுபவர்கள் படைப்பினங்களிலேயே மகா கெட்டவர்கள் எனும்போது, பின்பு கப்று ஸியாரத் என்ற நபிவழி எங்கே செய்வது என்கிற கேள்வி இங்கே எழும்..


நபிகளார் எங்கே ஜியாரத் செய்தார்களோ, எப்படி ஜியாரத் செய்தார்களோ அதேபோல் தான் நாமும் நம் ஜியாரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்கேள்விக்கான சுருக்கமான பதில்.

இனி நபிகளாரின் ஜியாரத் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களை பார்ப்போம்..

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இருதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)" பகீஉல் கர்கத் " பொது மையவாடிக்குச் சொல்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள்
                  நூல்: முஸ்லிம் 1773

நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.நபி(ஸல்)அவர்கள் நான் என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
                 நூல்: முஸ்லிம் 1622

இந்த இரண்டு ஹதீஸ்களின்படி உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

நம் சமுதாயம் தர்காவில் சென்று உயர்த்தப்பட்டுள்ள கப்றை ஜியாரத் என்ற பெயரில் வழிபட்டு வருகிறது.ஆனால் இச்சமுதாயத்தின் வழிகாட்டியாகிய நபிகளார் அவர்களோ, தனது ஊரில் உள்ள பொது மையவாடியில் ஜியாரத் செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளார்களே ஏன் ?

அதே காலத்தில் மரணித்த எத்தனையோ அல்லாஹ்வின் நல்லடியார்கள், சொர்க்கத்திற்காக வாக்களிக்கப்பட்டவர்கள், ஷஹீதுகள் என பல அவ்லியாக்கள் இருந்தும், அவர்களது கப்றை தர்காவாக கட்டி ஜியாரத் செய்யுமிடமாக மாற்றித் தரவில்லையே ஏன் ?

அவ்லியா என்று ஊர்ஜிதமாகாத நிலையில் தர்காவின் உயர்த்தப்பட்ட கபுரை நம் சமுதாயம் ஜியாரத் செய்கிறது.ஆனால் நபிகளார் அவர்களோ அவர்களின் பெற்றோர்கள் அவ்லியா இல்லை, மாறாக நரகை அடையும் முஷ்ரிக்குகள் என தெரிந்தும் அவர்களின் கபுரை ஜியரத் செய்தார்களே ஏன்?

அப்படியென்றால் ஜியாரத்தின் நோக்கம்தான் என்ன ?

பொதுவாக இன்று ஜியாரத் என்றாலே மக்கள் விளங்கி வைத்திருப்பது, அவ்லியா என்ற எண்ணத்தில் உயர்த்தப்பட்டுள்ள கபுரின் முன்பு கையேந்தி கேட்பதும், அதை நோக்கி ஸஜ்தா செய்வதும், பைத்தியம் பிடித்து பேயாட்டம் ஆடுவதும் தான்.இதற்கும் நபிகளார் காட்டித்தந்த ஜியாரத்திற்கும் துளியும் தொடர்பில்லை..

ஜியாரத் எதற்காக காட்டித்தரப்பட்டது, எப்படி காட்டித்தரப்பட்டது அதன் நோக்கம் என்ன என்பதை மேற்கண்ட இரண்டு ஹதீஸ்கள் நமக்கு தெளிவாக கற்றுத்தருகிறது.

1. ஜியாரத் என்பது நமது ஊரில் உள்ள பொது மையவாடிக்கு சென்று நம் கண் முன்னே வாழ்ந்து மரணித்தவர்களை அமைதியாக சந்தித்து விட்டு வருவது தான்.

2. அதன் நோக்கம், நம் கண்முன்னே வாழ்ந்து மரணித்தவர்களை சந்திப்பதன் மூலம் மரணத்தின் நினைவும், நம் மறுவாழ்வை நினைத்து அச்சமும் வரும் என்பதுதான். நேற்று நம் கண்முன்னே சிரித்து பேசி நடமாடியவன் இன்று மண்ணறையில்..நாளை நமது நிலையும் இதுதானே என்கிற உலக வாழ்வின் எதார்த்தம் நினைவுக்கு வரும்.

இப்போது தர்காக்களுக்கு செல்லும் நீங்கள் சிந்தியுங்கள், நீங்கள் செல்லும் தர்காக்களில் அடங்கியிருப்பவர்கள் உங்கள் கண்முன் வாழ்ந்து மரணித்தவரா ? அவர் அவ்லியா என்று நீங்கள் அறிந்தவரா ? அதற்கு நீங்கள் மறைவான ஞானம் பெற்றிருக்க வேண்டுமே.
.
மேலும் நீங்கள் செல்லும் தர்காக்களில் போடப்பட்டிருக்கும் மின்விளக்கு அலங்காரங்கள், சாம்பிராணி வாசனைகள், கடைகள், வியாபார தலங்கள், உணவுப்பொருட்கள், இதெல்லாம் உங்களுக்கு மரணத்தை நினைவுபடுத்துகிறதா ? அல்லது மென்மேலும் உலகில் வாழும் ஆசையை ஊட்டுகிறதா ?

எனவே ஜியாரத் என்ற நபிவழி நமது ஊரில் உள்ள பொது மையவாடியில் சென்று மண்ணறைவாசிகளை அமைதியாக சந்தித்துவிட்டும், அவர்களுக்காக துஆ செய்துவிட்டும், சில வார்த்தைகளை கூறிவிட்டும் வருவதாகும் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் நமக்கு விளங்குகிறது.

ஜியாரத்தின்போது செல்லவேண்டிய வாசகம் :

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.
என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.

(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)அவர்கள்
                 நூல்: முஸ்லிம் 367


முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உண்மையாகவே இறைதூதர் என உளமாற நம்பிக்கை கொண்டிருந்தால் நமது வணக்கங்கள் அனைத்தையும் அவர்கள் வழிகாட்டியப்படியே அமைத்துக் கொள்வோமாக.. அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமாக நாம் செய்யும் எந்தவொரு அமலும் நிராகரிக்கப்படுவதோடு நம்மை நரகில் சேர்க்கும் என்பதை நினைவில் கொள்வோம்.. 

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.
நூல் : முஸ்லிம், 3442

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது``செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவைமார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.
நூல் : முஸ்லிம், 1435

அல்லாஹ் பாதுகாப்பானாக...


Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

ஆய்வும் தக்லீதும்