வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள்.. தொடர் - 1

ஏகனின் திருப்பெயரால்...

"குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது"

இந்த வாசகத்தைக் கூறியே, இந்த ஏகத்துவ மார்க்கத்தில் ஏராளமான ஷிர்க், பித்அத்களைப் புகுத்தினார்கள், நம்மால் 'உலமாக்கள்' என்று நம்பப்பட்டவர்கள்.அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ வாதிகளின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான பிரச்சாரங்களின் மூலம் அவையெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு, ஒரு செயலை மார்க்கம் என்று யார் கூறினாலும் ஆதாரம் கேட்பது; குர்ஆன், ஹதீஸில் இருந்தால் மட்டுமே அது மார்க்கம்; எவருடைய சுய கருத்துக்களும் மார்க்கம் ஆகாது; யாரையும் கண்மூடித்தனமாக தக்லீத் செய்யக் கூடாது என்கிற விழிப்புணர்வை மக்கள் ஓரளவுக்கு அடைந்து வருகின்றார்கள்..

ஆனால், அன்று மக்களை மடமையில் தள்ளிய அன்றைய உலமாக்களின் "குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது" என்கிற அதே வாதம், இன்று ஏகத்துவக் கொள்கையின் பெயரிலேயே மக்களிடம் மீண்டும் முன்வைக்கப் படுகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றோம்.. 


ஸலஃபுகளின் வழிகெட்ட பிரச்சாரம் :-

குர்ஆன், ஹதீஸை எல்லோராலும் விளங்க முடியாது. ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், மேலும் கணக்கிலடங்கா உலமாக்கள், இவர்களின் விளக்கங்களை இணைத்தால் மட்டுமே இந்த மார்க்கத்தை விளங்க முடியும் என்பதே இவர்களின் வழிகெட்ட பிரச்சாரம்...
.
இதைப் பார்த்தாலே புரியும்,எந்த வாதத்தின் மூலம் தங்களை உலமாக்கள் என சொல்லிக் கொள்பவர்கள் நம்மைப் பலகாலமாக அறியாமையில் தள்ளி வைத்திருந்தார்களோ, அதே வாதம் ஸலஃபுகளின் வாயிலாக திரும்ப தட்டியெழுப்பப் படுகிறது என்று.. (இதே கொள்கையைத் தான் தப்லீஃக்வாதிகளும், கப்ர் வணங்கிகளும் "இஜ்மாஃ, கியாஸ்" என்கிற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்)

இப்படிக் கூறக்கூடிய ஸலஃபுகளிடம் "குர்ஆன், ஹதீஸில் விளக்கம் கிடைக்காமல் ஸஹாபாக்களின் புரிதலை வைத்து மட்டும் சட்டம் எடுப்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்கள்...

அதாவது இன்ன சட்டம் குர்ஆனில் சரியாக  விளக்கப்படவில்லை.,

நபியும் சரியாக விளக்கவில்லை.,

நான் ஸஹாபாக்களின் விளக்கங்களிலிருந்து மட்டும் தான் இதைப் புரிந்தேன் என்று, ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தைச் சொல்லுங்கள். நான் ஸலஃபு கொள்கைக்கே வந்துடுறேன்..!

என்றும் கூறிப் பார்த்துவிட்டேன்..
இதுவரை பதிலில்லை...


மார்க்கத்தை எல்லா மக்களும் சிந்தித்து விளங்க முடியாதா?

குர்ஆன், ஹதீஸை உலமாக்கள் துணையின்றி எல்லா மக்களும் சிந்தித்து விளங்க முடியாது என்கின்றனர் வழிகெட்ட ஸலஃபுகள்.இது அபத்தமான வாதம் என்பதைக் கீழ்காணும் வசனங்களை வைத்தே புரிந்துக் கொள்ள முடியும்.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம்.
படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:17


இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

திருக்குர்ஆன் 2:185

மேலும் பார்க்க: 39:23, 47:24, 59:21,


இவ்வாறு, ஏராளமான வசனங்கள் இத்திருமறைக் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன..

மேலும், 'ஆயாத்துன் பய்யினாத்' - தெள்ளத் தெளிவான வசனங்கள் என்பதாகப் பல்வேறு வசனங்களில் இக்குர்ஆன் குறித்து இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். உதாரணமாக, 2:99 10:15, 29:49, 57:9, 58:5, 65:11 ஆகிய வசனங்களின் வாயிலாக இதே கருத்தை அல்லாஹ் திரும்பத் திரும்பச் சொல்வதிலிருந்து, 'குர்ஆன் நமக்குப் புரியாது' என்கிற வாதம் எந்த அளவிற்கு அபத்தமானது என்பதை அறியலாம்.



இறைத்தூதர் எதற்கு ?

நம்பிக்கை கொண்டோர்க்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும்,ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்.இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் : 3:164

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம்.(இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

திருக்குர்ஆன் : 16:64

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் : 16:44

இக்குர்ஆனை விளக்கிக் கூற இறைவனால் நியமிக்கப்பட்டவர் தான் இறைதூதர் (ஸல்) அவர்கள். அவர்களின் பொன்மொழிகள் இருக்கும்பொழுது அவர்கள் அல்லாதவர்களின் விளக்கவுரைகளுக்கு இந்த மார்க்கத்தில் என்ன வேலை வந்தது.? விளக்கவுரைக்கே விளக்கம் வேண்டும் என்பது நமது அறியாமையல்லவா?

மார்க்க விஷயத்தில் கட்டுப்படுதல் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே:-

அல்லாஹ்வுக்கும்,இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் : 3:132

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். *அல்லாஹ்வுக்கும்,
அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள்.* அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்..

திருக்குர்ஆன் : 9:71

மேலும் பார்க்க : 3:31,32,53 4:64,69,80, 5:92, 7:157,158, 8:20,46, 24:47,52,56 ,33:71, 47:33, 49:14, 58:13, 64:12,

மேற்காணும் வசனங்கள் அனைத்தும் மார்க்க விஷயங்களில் நாம் கட்டுப்பட வேண்டியது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆக, திருமறை குர்ஆன் பாமர மக்களும் விளங்கும்படியாக எளிமையாக இறக்கியருளப்பட்ட வேதமாகும். அதனை விளக்கிக் கூறும் அதிகாரத்தை இறைவன் இறைத்தூதர் வசமே ஒப்படைத்துள்ளான்.
குர்ஆனின் தெளிவுரைகளை நபிமொழிகளிலிருந்து தேட வேண்டுமே தவிர ஸஹாபாக்களிடமோ, உலமாக்களிடமோ அல்ல.

நபித்தோழர்களின் தியாகங்களும், அவர்களுக்குப் பின் வந்த சமுதாயத்தினர் ஹதீஸ்களைத் தொகுப்பதற்காக உழைத்த
உழைப்பும் போற்றப்பட வேண்டியவையே. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும். எனினும் மார்க்கம் என வரும்போது அதனைக் குர்ஆன் மற்றும் ஹதீஸோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் வந்தவர்கள் கூறும் எதுவும் மார்க்கம் ஆகாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு. அதுவே தூய இஸ்லாமும் ஆகும்.

இறைவன் நம்மனைவரையும் நேர்வழியில் ஒன்றிணைப்பானாக!

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!