ஆய்வும் தக்லீதும்
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
மொழிபெயர்ப்புகளே மார்க்கம் ஆதாரம் என நம்பிவிடுவது தான் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழிபெயர்ப்பாளரின் புரிதலின் வெளிப்பாடு மட்டுமே. ஒருவர் எந்த சிந்தனையில் உள்ளாரோ அந்த சிந்தனைக்கு ஏற்றவாரே ஒரு வசனம் அல்லது ஹதீஸின் மொழிபெயர்ப்பை செய்வார்.
எவ்வளவு கற்றுதேர்ந்த அறிஞரானாலும், அவருக்கும் இவ்வுலகில் “ஒரு பறவை கொத்தியெடுக்கும் நீரின் அளவிலிருந்து குறிப்பிட்ட பங்கு” அறிவு தான் வழங்கப்பட்டுள்ளது எனும்போது, ஒரு எழுத்துக்குள் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் பரிபூரணமாக மொழிபெயர்க்கவே முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தங்களால் இயன்றளவு அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் சிறந்த சொல்லாடலை தருகிறார்கள் அவ்வளவே. அந்த கருத்துக்கள் அவர் கல்வி கற்ற சூழல், கற்பித்த ஆசிரியர்களின் அகீதா, அவர்கள் அல்குர்ஆன் ஹதீஸை அணுகும் கோணங்களை பொருத்து மாறுபடும். இதை நீங்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒன்றாக வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
மேலும், அல்குர்ஆன் மூல மொழியில் காலத்திற்கும் மாற்ற முடியாத வேதமாகும். ஆனால் இது நபிகளார் காலம் முதல், கியாமத் நாள் வரையுள்ள வேதமாகும் என்பதால், அதன் மொழிபெயர்ப்புகள் காலத்திற்கு தகுந்த பொருளை வெளிப்படுத்தும். ஹதீஸ்களும் அப்படித்தான்.
உதாரணமாக முன்னறிவிப்புகள் சார்ந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை நாம் இன்றைய காலத்தில் புரிந்து கொள்வதற்கும், முற்காலத்தவர்கள் புரிந்து கொண்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நம்மை விட எதிர்காலத்தில் வரக்கூடியவர்கள் அந்த கால சூழலை பார்த்து இன்னும் சிறப்பான விளக்கங்களை பெறுவார்கள்.
இப்படிப்பட்ட ஒப்பற்ற வேத நூலின் முழு பொருளை அறிந்துகொள்ள முயற்சிக்காமல், மொழிபெயர்ப்பை மட்டும் வாசித்து விட்டு , அதைக்கொண்டு மட்டுமே ஒருவர் ஒரு மார்க்க விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பது கண்டிப்பாக அது பிழையான முடிவாக இருக்கும். அல்லது யாரோ ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றும் தக்லீதின் வெளிப்பாடாகவே இருக்கும்.
ஏதேனும் ஓர் மார்க்க விவகாரத்தில் குர்ஆன் ஹதீஸை ஆய்வை செய்து, சரியான தெளிவை பெற கீழ்காணும் விசயங்களை பெற்றிருப்பது அவசியம்..
📌 1) மொழியறிவு
ஒரு அல்குர்ஆன் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பை அறிய, அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளுக்கான பொருளை அரபு அகராதியில் தேடிப் பெறுவது அவசியம். காரணம் ஒரு வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும். அதை தேடிப் பெறும்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துள்ள வார்த்தையை விட சிறந்த வார்த்தையை நீங்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் அந்த மொழிபெயர்ப்பாளர் சிந்திக்காத, விளங்காத கோணத்தில் நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையை அவன் நாடினால் பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, அல்குர்ஆனில் خليفة {கலீஃபா} எனும் அரபு வார்த்தை பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளதை காணலாம்.
(خلف - பின்னால்)
خليفة - ஆட்சியாளர் / பின்வரும் தலைமுறை
பின்வருவோர் / தலைமுறை ஆகிய அர்த்தங்களில் :-
அக்காலத்தில் இருந்தவர்களுக்கும், அதற்குப் பின்வருவோருக்கும் அதைப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு அறிவுரையாகவும் ஆக்கினோம்.
அல் குர்ஆன் - 2 : 66
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌۭ فِى ٱلْأَرْضِ خَلِيفَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ⭘
“வழித்தோன்றல்களை ஏற்படுத்தும் ஒரு படைப்பை பூமியில் உருவாக்கப் போகிறேன்” என்று வானவர்களிடம் உமது இறைவன் கூறியபோது, “குழப்பம் செய்து, இரத்தம் சிந்தக் கூடியவர்களையா அதில் நீ உருவாக்கப் போகிறாய்? நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அவன் கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 30
ஆட்சியாளர் என்ற அர்த்தத்தில்
يَـٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَـٰكَ خَلِيفَةًۭ فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ⭘
தாவூதே! பூமியில் உம்மை ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். எனவே மக்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! சுயவிருப்பத்தைப் பின்பற்றாதீர். அப்படிச் செய்தால், அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறிச் செல்வோர், விசாரணை நாளை மறந்ததால் அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
அல் குர்ஆன் - 38 : 26
📌 2) குர்ஆன், ஹதீஸ் பற்றிய ஆழ்ந்த அறிவு
அகராதியில் தேடுவது மட்டுமின்றி குறித்த அந்த அரபு வார்த்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எந்தெந்த இடங்களில், என்னென்ன அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை கவனிப்பது அவசியம். காரணம் அகராதியை கூட இன்று மேற்கத்திய உலகம் விருப்பத்திற்கேற்றார் போல் மாற்றிவிடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்ற இயலாது. எனவே அகராதியில் எடுக்கப்படும் பொருளையும் சரியாக புரிந்து கொள்வதற்கு நாம் அல்லாஹ்வின் வசனங்களையே கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக,
மேலேயுள்ள 2:66, 2:30 ஆகிய வசனங்களில் கலீஃபா எனும் வார்த்தைக்கு பின்வரும், தலைமுறை என பொருள் வைக்கப்பட்டுள்ளதை பார்த்தோம். அந்த வசனங்களில் வேண்டுமானால் அப்படி பொருள்கொள்வது பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால் 38:26 வசனத்தில் அதே வார்த்தைக்கு ஆட்சியாளர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
காரணம் இந்த இடத்தில் கலீஃபா எனும் வார்த்தைக்கு ஆட்சியாளர் என்று மட்டும் தான் பொருள் வைக்க முடியும். ஏனெனில் அங்கு “தாவூதே ! பூமியில் உம்மை தலைமுறையாக ஆக்க போகிறோம்” என மொழிபெயர்க்கவே முடியாது. எனவே ஆட்சியாளர் என்பதே இவ்விடத்தில் சரியாக இருக்கும் என்பதால், அவ்வாறு என மொழிபெயர்த்துள்ளனர். ஆக கலீஃபா எனும் ஒரே வார்த்தைக்கு தலைமுறை, ஆட்சியாளர் என இருவேறுபட்ட அர்த்தங்களை மாறி மாறி வைத்துள்ளார்கள்.
2:66, 2:30 ஆகிய வசனங்களை மட்டுமே படிப்பவர்கள், கலீஃபா எனும் வார்த்தைக்கு பின்வரும், தலைமுறை எனும் பொருள் இருப்பதாக மட்டுமே நினைப்பார்கள். எனினும் 38:26 வசனத்தையும், மேலும் நபிகளார் போருக்கு செல்லபோது மதீனாவில் ஒரு தற்காலிக ஆட்சியாளரை நியமித்து விட்டு செல்லும் ஹதீஸ்களை படிக்கும்போதும் தான், கலீஃபா எனும் வார்த்தைக்கு ஆட்சியாளர் எனும் இன்னொரு பொருளும் உண்டு என்பதை அறிய முடியும். எனவே தான் அகராதி மட்டுமின்றி, ஒரு அரபு வார்த்தை அல்குர்ஆன் & ஹதீஸ்களில் எந்தெந்த இடங்களில் என்னென்ன பொருள்பட வந்துள்ளது என்பதை தேடி அறிவது அவசியம் எனலாம்.
📌 3) வசனங்களின் தொடர்ச்சி பற்றிய கவனம்.
குறித்த அவ்வசனத்திற்கு சரியான விளக்கத்தை அறிய அதன் முன் பின் தொடர்ச்சியான வசனங்களை வாசிப்பதும், அவசியமாகும்.
உதாரணமாக,
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
தூயவர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொட மாட்டார்கள்.
அல் குர்ஆன் - 56 : 79
இந்த வசனத்தை மட்டும் தனியாக படித்தால் தூய்மையானவர்களைத் தவிர குர்ஆனை யாரும் தொட கூடாது என்று பொருள் வரும்.
அதன் முன் வசனங்களான,
إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ
இது கண்ணியமிக்க குர்ஆனாகும்.
அல் குர்ஆன் - 56 : 77
فِى كِتَـٰبٍۢ مَّكْنُونٍۢ
(இது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளது.
அல் குர்ஆன் - 56 : 78
பாதுகாக்கப்பட்ட லவ்ஹூல் மஹ்ஃபூல் ஏட்டையும், தூய்மையாளர்கள் என மலக்குகளை தான் இவ்வசனம் குறிக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இல்லையென்றால், அந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து உழூ இல்லாமல் அல்குர்ஆனை தொடக்கூடாது என தவறாக புரிந்துகொள்ளும் நிலை உண்டாகும்.
📌 4) நாஸிஹ், மன்ஸூஹ்
மேலும் ஒரு சட்டம் தொடர்பாக, அல்குர்ஆனில் வெவ்வேறு இடங்களில் வந்துள்ள எல்லா வசனங்களையும், நபிமொழிகளையும் ஒன்றுதிரட்டி வாசிப்பது அவசியமாகும். காரணம் ஓரிரு வசனங்கள் & ஹதீஸ்களை மட்டுமே வைத்து முடிவெடுத்தால், சில நேரங்களில் மாற்றப்பட்ட பழைய சட்டங்களை வைத்து நாம் முடிவெடுக்கக் கூடும். அது முழுமையான முடிவாக இருக்காது.
உதாரணமாக,
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று 2:184 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185 ஆவது வசனம்) அருளப்பெற்றது.
நூல் : புகாரி 4507
இன்னும் இதை அறியாமல் நோன்பு வைக்காதவர் ஃபித்யா கொடுக்க வேண்டும் என்று பழைய சட்டத்தின் பிரகாரம் நம்புவோர் உண்டு.
📌 5) ஸபபுன் நுஸூல்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வசனம் இறங்கிய பின்னனியை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அப்போது தான் அவ்வசனம் எந்த சூழலில், எத்தகைய அறிவுறுத்தலுக்காக, என்ன பொருள்பட அல்லாஹ் இறக்கினான் என்பதையறிந்து அதன் சரியான பொருளை அறிய முடியும்.
உதாரணமாக,
“உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் !"
எனும் (2:195) வசனத்தை காட்டி சிலர் மார்க்கத்தை பேசினால் பெரிய அழிவு அல்லது உயிர்போகும் சூழல் ஏற்படும் என தெரிந்துகொண்டே அதுபற்றி பேசக்கூடாது, அது தற்கொலைக்கு சமம் என சொல்வோர் உண்டு.
( உதாரணம் சிலைவணக்கம் பற்றி பெரியளவு வாய்திறக்காமல் இருக்க இதுவோர் காரணம் )
ஆனால் இவ்வசனம் அல்லாஹ்வின் பாதையில் அற்பணிப்பதை விட்டுவிட்டு, உலக செல்வத்தை சேர்க்க சென்று விடுவதையே அழிவு என கூறுகிறது என்பதை அதன் பின்னனியை படித்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.
அல்லாஹ் இஸ்லாத்திற்குக் கண்ணியத்தை வழங்கி விட்டான். அதற்கு உதவியாளர்களும் அதிகமாகி விட்டனர். இதனால் "நமது செல்வங்கள் அழிகின்றன. நாம் நமது பொருள்களைப் பாதுகாப்பதில் நிலைத்திருந்தால் நமது பொருள்கள் அழியாமல் பாதுகாத்திருக்கலாம்" என்று அல்லாஹ்வின் தூதருக்குத் தெரியாமல் (அன்சாரிகளாகிய) எங்களில் சிலர் சிலரோடு இரகசியமாகப் பேசிக்கொண்டனர். அப்பொழுது அல்லாஹ் "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்! உங்கள் கைகளை அழிவின்பக்கம் கொண்டு செல்லாதீர்கள்!" என்ற (2:195) வசனத்தை நாங்கள் பேசிக் கொண்டதற்கு எதிராக அதற்குப் பதில் கூறும் இறக்கியருளினான்.
அபூஅய்யூப் அன்சாரி (ரலி),
திர்மிதீ (2888), அபூதாவுத் (2512)
அவரவர் சிந்தணைக்கேற்றவாறு வசனங்களின் பொருளை வளைக்கும் குழப்பமான சூழல் நிலவும் இக்காலத்தில், அதன் பின்னனியை அறிந்துகொள்வதன் மூலமாகவே, அல்லாஹ் சொன்ன பொருளில் ஒரு வசனத்தை விளங்கி பல குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும்.
.
📌 6) தஃப்ஸீர்
அவ்வசனம் குறித்து நபி (ஸல்) அவர்களின் விளக்கம் அறிந்து கொள்வது அவசியமாகும். நபிகளாரின் நேரடி விளக்கம் இல்லாவிடில் நபித்தோழர்கள், முஃபஸ்ஸிரீன்கள் விளக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியமாகும்.
📌 7) உஸூலுல் ஹதீஸ் பற்றிய அறிவு
அந்த விளக்கங்கள் அல்குர்ஆனுக்கு முரண்படாமல் உள்ளதா, அதன் அறிவிப்பாளர் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
📌 8) சமகால உலக அறிவு மற்றும் மாற்றுக் கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவம்
நமது ஆய்வு தொடர்பாக பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களையும் தேடி படிக்கும்போது, அந்த சட்டம் குறித்து முற்காலத்திலும், தற்காலத்திலும் மாற்றுக் கருத்துக்கள் என்னென்ன எழுந்துள்ளது என எல்லா தரப்பு விளக்கங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டால் கூடுதல் தெளிவுடன் முடிவெடுக்க முடியும்.
மாற்றுக்கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல், அதன் விளைவாக அந்த வசனத்தின் பல்வேறு கோணங்களை நாம் அறியாமலே எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் பிழையாகவே அமையும்.
📌 9) இக்லாஸ்
தூய உள்ளத்துடன் இத்தனை தேடலுக்கு பின்னர் எடுக்கப்படும் மார்க்க நிலைபாடுகள் சரியாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நாடினால் இரட்டிப்பு நன்மையும், பிழையாக இருந்தால் ஒரு நன்மையும் உண்டு. ஆனால் இன்றோ சிலர், மார்க்க சட்டங்களை ஆய்ந்து அறிந்து முடிவெடுக்காமல், அவர்களுக்கு பிடித்தமான, அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் ஆலிம்களின் உரைகள் & தமிழ் கட்டுரைகளை வாசித்துவிட்டு,
அவர்கள் யாரை காஃபிர் என்று சொல்கிறார்களோ இவர்களும் அவ்வாறே கூறுகிறார்கள். அவர்கள் யாரை முஷ்ரிக் என்று கூறுகிறார்களோ இவர்களும் அவ்வாரே கூறுகிறார்கள். அவர்கள் எத்துனை ஹதீஸ்களை பலவீனம் எனக் கூறி மறுத்தாலும், அத்தனையும் இவர்களும் நிராகரிக்கிறார்கள். அந்த கருத்து மட்டுமே சரியென்பதை நிலைநாட்ட பிறரிடம் கடும் தர்க்கமும், சண்டையும் செய்கிறார்கள்..
ஆனால் இவர்கள் அந்த நிலைபாட்டை சுயமாக ஆய்வு செய்து அறிந்திருக்கவோ, அந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருக்கவோ, அல்லது அதற்கான முயற்சி எடுக்கவோ மாட்டார்கள். இப்படி ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் குறிப்பிட்ட இமாம்களின் அல்லது ஒரு குழுவின் விளக்கங்களை அப்படியே நம்பிவிடுவதற்கு பெயர் தான் தக்லீது ஆகும். இதை உண்டாக்கி பின்பற்றுபவர்களே மதுஹபுவாதிகள் ஆவார்கள்.
நன்மையான விடயங்களில் பிறரிடம் கற்றுக்கொண்டு அமல் செய்வது பிழையல்ல. ஆனால் பிறரை முஷ்ரிக், காஃபிர், கொள்கையற்றவன், என்றெல்லாம் கூறும் எதிர்மறையான ஃபத்வாக்களையும் இவர்கள் சுய ஆய்வு செய்து, உறுதிபடுத்தி விட்டு அதுபற்றி பேசாமல், தக்லீது செய்தே அதையும் கூறுகிறார்கள்.
இத்தகையோர் சிந்திக்க வேண்டும். ..
ஒருவேலை நீங்கள் நம்பும் உலமாக்களின் ஃபத்வாக்கள் தவறாக இருந்துவிட்டால் ?
அவர்கள் முஸ்லிம்களை முஷ்ரிக், காஃபிர் என்று கூறியிருந்து நீங்களும் அதை நம்பி ஒரு முஸ்லிமுக்கு அநீதி இழைத்திருந்தால் ?
அவர்கள் பலவீனம் என கூறிய ஹதீஸ்கள் ஸஹீஹானதாக இருந்து, அதை நீங்களும் நிராகரித்து இருந்தால் ?
இந்த உலமாக்களின் உரைகளையும், ஆக்கங்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றினேன், அவர்களே என்னை வழிகெடுத்தார்கள் என்று கூறினால் அல்லாஹ் நம்மை விட்டுவிடுவானா ?
அதுவும் மார்க்கத்தை ஆய்வு செய்ய போதிய எல்லா வசதிகளும் இன்றைய காலத்தில் இருந்தும், அதை அலட்சியம் செய்துவிட்டு அல்லாஹ்விடம் இப்படி சாக்குபோக்குகள் கூற முடியுமா ?
இப்படி காரணம் கூறுவோர் தான் நரகில் புரட்டியெடுக்கப் படுவார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறதே. எனவே, இத்தகைய கண்மூடித்தனமான தக்லீதை தவிர்ந்து கொண்டு இயன்றவரை மார்க்க விவகாரங்களை ஆய்வு செய்து தெளிவுபடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி தீர்க்கமாக அறிந்துகொண்டதை மட்டுமே (குறிப்பாக எதிர்மறையான விடயங்களில்) பொது வெளியில் பேச வேண்டும்.
அதைவிடுத்து பிறரை கண்மூடித்தனமாக நம்பி அவர்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே அப்படியே காப்படியத்து அமல் செய்வது (குர் ஆன் ஹதீஸுக்கு உட்பட்ட) நல்ல விடயங்களில் மட்டும் இருந்தால், அது நமக்கு பாதகமில்லை. அது நமக்கு நன்மையாகவே அமையும். ஆனால் எதிர்மறையான விடயங்களில் பிறரை காப்பியடித்து அப்படியே பரப்பினால், அவர்களின் பிழைகளையும் சேர்த்து பரப்பிய பாவத்தை நாமும் பெறுவோம் என்கிற பேணுதல் நம்மிடம் வர வேண்டும்.
சரி மொழிபெயர்ப்பை மட்டுமே வாசித்து மார்க்கத்தை கற்க முடியாதா, கண்டிப்பாக அரபு மொழியை கற்றே ஆக வேண்டுமா என்றால், அவரவர் மறுமைக்கு அமல்கள் செய்துகொண்டு வாழ்வதற்கு பெரிதாக அரபு மொழி ஞானம் தேவையில்லை. ஆனால் மார்க்க சட்டங்களை ஆய்வுகள் செய்து தீர்ப்பு வழங்குவதற்கு நிச்சயம் அரபு மொழி ஞானம் தேவை.
காரணம், இந்த உம்மத்தில் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களின் மொழி அரபுமொழியாக இருப்பதால் அதை கற்றறிந்து மார்க்க ஆய்வை செய்வதே அறிவார்ந்த செயலாகும். விரைவாகவும் சுயமாகவும் தீர்வு காண முடியும். கல்வியை தேடும் ஆர்வமிருந்தால் அல்லாஹ் நம் கையை பிடித்து வழிகாட்டுவான்.
அதற்கு வாய்ப்புகள் இல்லாமல் குறிப்பிட்ட ஆலிம்களின் தமிழ் உரைகள் கட்டுரைகளை மட்டுமே படித்து விட்டு மார்க்க பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் மூன்று விடயங்களில் கவனம் பேண வேண்டும்.
1) ஒரு மார்க்க சட்டம் குறித்து பொதுவெளியில் பேசும்போது, அந்த சட்டத்தை யாரிடமிருந்து அறிந்து கொண்டாரோ, அவரின் பெயரை குறிப்பிட்டு “இது இன்னாருடைய கருத்து, இது எனது அறிவுக்கு சரியானதாக தெரிகிறது, அல்லாஹ் மிக்க அறிந்தவன்” என்கிற அளவில் நமது கூற்றை அமைத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் ஒரு கருத்தை 100% அதுதான் சரி எனக் கூற வேண்டுமானால், நாம் அதை ஆய்வு செய்வதற்கு குறைந்தபட்ச முயற்சிகள் எடுத்தவராக இருக்க வேண்டும். நாம் ஆய்வு செய்யாத ஒன்றை ஒருவர் சொல்கிறார் என்பதற்காகவே அது 100% சரியென வாதிடுவது தான் தக்லீது ஆகும். மேலும் கேள்விப்பட்டதையெல்லாம் பரப்பும் பொய்யருக்கு நிகரான செயலாகும்.
2) மேலும் நாமே சுய ஆய்வு செய்யாமல் பிறரின் கருத்தை நம்பியே பயணிப்பதால், நாமே ஆய்வு செய்து அறிந்தவர் போல எளிதில் யாரையும் காஃபிர், முஷ்ரிக் என ஃபத்வா கொடுப்பதை தவிர்ந்து கொள்வது அவசியம். இந்த பேணுதல் ஒருவரின் கருத்தின் மீது கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையால் பாவமான ஃபத்வாக்கள் கொடுத்து விடுவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
3) ஒரு சட்டம் தொடர்பாக நமக்கு விருப்பமான தமிழ் உலமாக்களின் உரைகளையும், ஆக்கங்களையும் மட்டுமே பார்த்து முடிவெடுக்காமல், அது தொடர்பான எல்லா தரப்பு உலமாக்களின் மாற்றுக் கருத்துக்களையும் முழுமையாக பார்த்து படித்து தெரிந்துகொண்டு அதன் பிறகு அல்லாஹ் நமக்கு எந்த கருத்தில் தெளிவை தருகிறானோ அந்த கருத்தை ஏற்று நடப்பதே சிறந்ததாகும். *கவனம் ; முழுமையாக பார்த்து படித்து தெரிந்து கொள்ளுதல் அவசியம்.வெறும் ஓரிரு நிமிட கட்டிங் வீடியோவை பார்த்துவிட்டு முடிவெடுத்துவிடுவது அறிவார்ந்த செயல் ஆகாது* இதன் மூலம் ஒருதரப்பு கருத்தை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பி, இன்னொரு தரப்பு கருத்தை முழுமையாக ஆய்வு செய்யாமலே தவறான முடிவுகள் எடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும், பலதரப்பு வாதங்களை வைத்து சரியான முடிவை எடுக்கவும் இது வழிவகை செய்யும்.
அரபு மூலங்களை தேட ஆர்வமில்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே மார்க்கத்தை அறிவோர் இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தக்லீதிலிருந்து தப்பித்து சரியான கல்வியை அடைய குறைந்தபட்ச முயற்சிகளையாவது மேற்கொண்ட நன்மைகளையும், அல்லாஹ் நாடினால் சரியான தெளிவையும் அடைந்து கொள்ளலாம்.
உழைப்பு இல்லாமல் எதுவும் பெற முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. நேர்வழியும் அப்படித்தான்.
سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ،
'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.
முஆவியா (ரலி)
ஸஹீஹ் புகாரி : 71.
.
يُؤْتِى ٱلْحِكْمَةَ مَن يَشَآءُ ۚ وَمَن يُؤْتَ ٱلْحِكْمَةَ فَقَدْ أُوتِىَ خَيْرًۭا كَثِيرًۭا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ⭘
அவன், தான் நாடியோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். அறிவுடையோரைத் தவிர எவரும் படிப்பினை பெறுவதில்லை.
அல் குர்ஆன் - 2 : 269
அல்லாஹ் நம்மனைவரையும் சரியான கல்வியை தேடிப் பெற்று அவனுடைய சரியான தீனில் நிலைத்திருக்கும் தெளிவை தருவானாக…
Comments
Post a Comment