மனித ஷைத்தான்கள் -1
மனித ஷைத்தான்கள் பதிவு 1
அமானிதமற்ற ரகசியம்..
ரகசியம் என்றாலே அமானிதம் தானே.. அதென்ன அமானிதமற்ற ரகசியம் எனக் கேட்டால்,
ஆம் ! உள்ளது…
📌 உங்களிடம் கஞ்சா, மது, போன்ற போதைப் பொருட்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ?
📌 உங்களிடம் சில திருட்டு சாமான்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ?
பேண மாட்டீர்கள். காரணம் ஹலாலானவற்றுக்கே அமானிதம். ஹராமானவற்றில் அமானிதம் பேணக் கூடாது என்பதை அடிப்படை அறிவுள்ள எவரும் அறிந்து வைத்துள்ளோம்..
மேலும், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே ஹலாலானதாக இருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அறியாமையில் ஹராமுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது என்பதை இவ்விடம் நினைவுறுத்துவது பொருத்தமாக இருக்கும்..
அதேபோல,
📌 உங்களிடம் ஒருவரைப் பற்றிய ஒரு மோசமான, எதிர்மறையான தகவலைச் சொல்லி இதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்காதீர்கள் என அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ?
பேணுவீர்கள்.. ஏனெனில் மதுவை போல, திருட்டை போல, விபச்சாரத்தை போல நாம் தான் பிறரைப் பற்றிய எதிர்மறை தகவல்கள் நமக்கு ஹராம் என்றே கருதுவதில்லையே..
தனது இறுதி வஸிய்யத்தில் பிறரின் மானமும், உயிரும், செல்வமும் புனித நாளை, விட, புனித மாதத்தை விட, புனித பூமியை விட புனிதமானது என்றார்கள் நபிகளார்..
இதை மறந்து வாழும் நாம், யாரேனும் பிறரைப் பற்றிய எதிர்மறையான தகவலை நம்மிடம் கூறி இது அமானிதம் என்று கூறிவிட்டால் சொன்னவரின் கூற்றை கண்மூடித்தனமாக நம்பி விடுவதோடு, அதை சம்பந்தப்பட்டவரிடமே கேட்டு தெளிவு பெறாமல், அவரை பற்றிய தவறான எண்ணத்திலேயே இருந்துவிடுகிறோம்.
*இதை அமானிதம் பேணுவது என்று கருதுகிறோம்.*
*ஒருவர் சொன்ன ரகசியத்தை அவரல்லாத மற்றவரிடம் பகிர்வது தான் அமானித மீறலாகும். யாரைப் பற்றி இவர் ரகசியம் சொன்னாரோ அந்த சம்பந்தப்பட்டவரிடமே விசாரிப்பது அமானித மீறல் அல்ல.. அவரிடம் விசாரிக்காமல் இருப்பது தான் பாவமாகும்.*
காரணங்கள் இரண்டு..
முதல் காரணம், பிறரை பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் அதை சமந்தப்பட்டவரிடமே கேட்டு தெளிவடைய வேண்டும் என்பது இறைவனின் வழிகாட்டல்..
*يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن جَآءَكُمْ فَاسِقٌۢ بِنَبَإٍۢ فَتَبَيَّنُوٓا۟ أَن تُصِيبُوا۟ قَوْمًۢا بِجَهَـٰلَةٍۢ فَتُصْبِحُوا۟ عَلَىٰ مَا فَعَلْتُمْ نَـٰدِمِينَ⭘*
*இறைநம்பிக்கை கொண்டோரே! பாவம் செய்பவன் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு நீங்கள் தீங்கிழைக்காதிருக்க (அதன் உண்மைத் தன்மையை)த் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (இல்லையெனில்) நீங்கள் செய்ததற்காக வருந்துவோராக ஆகி விடுவீர்கள்.*
*அல் குர்ஆன் - 49 : 6*
துஆவை எதிர்பார்த்தோ, அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்கோ ஒருவர் தனது சொந்த இரகசியத்தை சொல்லி இதை அமானிதமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் அதில் கண்டிப்பாக அமானிதம் பேண வேண்டும். அதை யாரிடமும் விசாரிக்க அவசியமில்லை..
ஆனால் அதே ஒருவர் வேறு நபரைப் பற்றிய ஒரு தகவலை கூறி இதை அவரிடம் கேட்க வேண்டாம் அமானிதமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால், அதை விசாரிக்காமல் இருத்தல் கூடாது.
📌 இரண்டாவது காரணம் வஸ்வாஸை ஏற்ப்படுத்தும் மனித ஷைத்தான்கள்..
ஒருவரைப் பற்றி எதிர்மறையான தகவலை உங்களிடம் கூறுபவன் அந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதுபற்றி குறித்த நபரிடம் கேட்கவேண்டாம் என ஏன் கூற வேண்டும். இது நேர்மையற்ற செயலாகும்.
ஒருவரின் பின்னால் அவர்பற்றி பேசுபவன் அவரின் முன்னாலும் நேரடியாக அதை சொல்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
பெரும்பாலும் தனது தகவலில் பொய்யை கலந்து சொல்பவனே, தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதற்கு அஞ்சி, பிறரைப் பற்றி பேசிவிட்டு, அவரிடம் கேட்க வேண்டாம் இது அமானிதம் என்று கூறி நழுவுவான். அல்லது,
பிறரை பற்றிய வெறுப்பு தகவல்களை பரப்ப வேண்டும், ஆனால் அதை தான் பரப்பியதாக தெரிந்துவிடக் கூடாது என்று மறைந்திருந்து வஸ்வாஸை ஏற்ப்படுத்த நாடும் மனித ஷைத்தான்களே, இவ்வாறு அமானிதம் எனும் நற்பண்பை தங்களின் கேடான செயலுக்கு கேடயமாக பயன்படுத்துவர்..
தன்னை சார்ந்தவர்களுக்கு நலம் நாடும் நோக்கில் ஒரு தீயவன் குறித்து உண்மை தகவலை எச்சரிக்கை செய்துவிட்டு, அவனுடைய தீங்குக்கு அஞ்சி அவனிடம் இதை சொல்லிவிட வேண்டாம் என சொல்வோரும் மக்களில் உள்ளனர். விசாரித்து அறியும்போது சொல்லப்பட்ட தகவல் உண்மையாக இருந்தால் சொன்னவர் மீதும், கேட்டவர் மீதும் எந்த குற்றமும் இல்லை.
ஆனால் சிலர், இந்த அமானிதம் என்கிற வார்த்தையை தவறாக பயன்படுத்தி பிறரின் மானத்தில் விளையாடும் காரியங்களை செய்கின்றனர். அறியாத மக்களும் சொல்லப்பட்ட தகவலை அமானிதம் எனக்கூறிவிட்டதால் தீர விசாரிக்காமல் பொய்யையே உண்மையென நம்பி, பிறர் மீது தவறான எண்ணம் கொள்கின்றனர்.
இது அமானித பேனுதல் கிடையாது, குழப்பம் விளைவிக்கும் செயலாகும் என்பதில் முதலில் மக்கள் தெளிவுடன் இருத்தல் வேண்டும்..
காரணம், ஒருவரைப் பற்றி அவருக்கே தெரியாமல் மறைந்திருந்து கிசுகிசுக்க நாடும் இதுபோன்ற ஷைத்தான்கள் மனிதர்களில் உண்டு எனவும், இவர்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு கேட்குமாறும் அல்லாஹ் கற்றுத் தந்துள்ள அத்தியாயம் தான் சூரத்து நாஸ்..
.
சூரத்துநாஸ் எனும் அத்தியாயத்தை அதிகம் ஓதிக்கொள்வதில் நமக்கும், நம் சுற்றத்தாருக்கும் பாதுகாப்பு மட்டுமல்ல.. படிப்பினைகளும் பல உண்டு..
📌 தெளிவுரை…
*قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ⭘ مَلِكِ ٱلنَّاسِ⭘ إِلَـٰهِ ٱلنَّاسِ⭘ مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ⭘ ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ⭘ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ⭘*
*"மனிதர்களின் இரட்சகனும், மனிதர்களின் அரசனுமாகிய மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.*
*மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்.)*
*அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்” என்று கூறுவீராக!*
*அல் குர்ஆன் - 114 : 1,2,3,4,5,6*
வஸ்வாஸ் என்றால் இரகசியமாக தீயவற்றை நம் எண்ணத்தில் போடுவது, கிசுகிசுப்பது போன்ற பொருள்கள் உண்டு...
இந்த அத்தியாயத்தில் மறைந்திருந்து வஸ்வாஸை ஏற்ப்படுத்தும் ஷைத்தான்களை விட்டும் பாதுகாவல் தேடக் கற்றுத் தரும் இறைவன்,
அத்தகைய வஸ்வாஸை ஏற்ப்படுத்துவோர் ஜின் இனங்களில் மட்டுமல்ல, மனிதர்களிலும் உள்ளனர் என்று நமக்கு விழிப்பூட்டுகிறான்.
.
ஜின்களில் உள்ள ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க எதிரியாவான் என்பதை நாம் அல்குர்ஆன் வாயிலாக அறிந்துள்ளோம்.
எனவே அத்தகைய தீய எண்ணங்கள் ஏற்ப்படும்போது “அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்” என ஓதிக் கொள்வது நமக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
கண்முன் தெரியாத ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடும் நமக்கு பெரும் தலைவலியாக அமைவது எதுவென்றால்,
நம் கண்முன் தெரியும் மனிதர்களில் யார் நம் உள்ளத்தில் வஸ்வாஸை போடும் ஷைத்தானை சார்ந்தவன் என்பதை அறிந்துகொள்வது தான்.
காரணம் ஜின் இன ஷைத்தானைப் போல இவர்கள் பகிரங்க எதிரிகள் அல்ல. இவர்கள் நம்மைச் சுற்றியே இருப்பார்கள். நம்முடன் சிரித்து பேசி பழகுவார்கள். முஸ்லிமாகவும் இருப்பார்கள்.
ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரைப் பற்றி அவருக்குப் பின்னால் கிசுகிசுத்துவிட்டு இது அமானிதம் என்றுகூறி வஸ்வாஸை ஏற்ப்படுத்தி நழுவி விடுவார்கள். சில நேரங்களில் இவர்களின் வஸ்வாஸின் பேராயுதமாக ஒரு கண்சாடையே இவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
ஆம் ! கூட்டத்தில் இருந்தாலும் கண் சாடையால் ரகசியம் பேசியாவது வஸ்வாஸிலேயே வாழும் இந்த ஷைத்தான்கள் அறிவதில்லை.. கண் சாடை காட்டுவது காஃபிர்களின் பண்பு என..
இவர்களை கண்டறிந்து விழிப்புடன் இருக்கவில்லை என்றால், தவறான தகவல்களுக்கு செவிகொடுத்து பல குழப்பங்களில் வீழ்ந்துவிடுவோம்.
.
பலர் நேர்வழியை விட்டு தவறுவதற்கும், உறவுகளிடையே கூச்சலும், குழப்பங்களும் மிகைப்பதற்கும் இந்த மனித ஷைத்தான்களே காரணமாக அமைகிறது.
ஆக எவன் ஒருவன் பிறரைப் பற்றி தீய தகவலை பரப்பும் அதே வேலையில், தன்னை மறைத்துக் கொள்வதற்காக, அதை அவரிடமே கேட்டுக்கொள்ள வேண்டாம் அமானிதம் என்று கூறி நழுவுகிறானோ,
இது அமானிதமல்ல, மறைந்திருந்து வஸ்வாஸை ஏற்ப்படுத்தும் நேர்மையற்ற மனித ஷைத்தானின் வேலைகளில் ஒன்றாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால்,
எந்த சூழலிலும், யார் சொன்னாலும் பிறரைப் பற்றி சொல்லப்படும் தகவலை அமானிதம் என்று கூறியதால் விசாரிக்காமலேயே நம்பி விடாமல், தீர விசாரித்து தெளிவடைவதும், அல்குர்ஆன் 114 அத்தியாயத்தை அதிகம் ஓதிக்கொள்வதுமே இதுபோன்ற மனித ஷைத்தான்களின் வஸ்வாஸிலிருந்து நாமும் சுற்றமும் பாதுகாப்பு பெற சிறந்த தீர்வாகும்.
இன்ஷா அல்லாஹ் மனித ஷைத்தான்களின் வஸ்வாஸ் பற்றிய மேலும் சில செய்திகள் அடுத்த தொடரில்..
To follow our Tazkiya Watsapp channel :
Comments
Post a Comment