ஆடம்பரமும் அதன் அளவுகோலும்..
ஆடம்பரமும் , வீண் விரயமும்…
………
ஆடம்பரம், வீண் விரயம் குறித்து மக்களிடம் அதிகம் எச்சரிக்கை செய்கிறோம். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான், அவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புகள் என்கிற அல்குர்ஆன் வசனங்களை எடுத்து காட்டுகிறோம்.
.
ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால், “எது ஆடம்பரம்? “ என்பதை அறிவதில் தான்.
இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் "ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
கஅப் இப்னு மாலிக் (ரலி). திர்மிதி 2336.
அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும்.
ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற ஓர் அளவுகோலை வைத்துக்கொண்டு ஆடம்பரத்தை அளவிடுகிறார்கள்.
ஒருவருக்கு ஆடம்பரமாய் தெரிவது மற்றவருக்கு அத்தியாவசியமாகத் தெரிகிறது. ஆடம்பரத்துக்கு அழகு படுத்தல், எனக்கு இறைவன் அளித்த வசதிக்கு இது ஆடம்பரம் அல்ல என்று வியாக்கியானம் கூறுகிறார்கள்.
இதற்கு என்ன தான் தீர்வு ?
குர்ஆன் ஒருபோதும் குழப்பமான கட்டளைகளை இடுவதில்லை. இந்த மார்க்கத்தின் இரவும் கூட பகலைப் போன்ற தெளிவானது.
எது வீண் விரயம் என்பதை குர்ஆன் தெளிவாகவே சொல்கிறது.
அருட்கொடைகளில் வரம்பு மீறுதல்.
يَـٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍۢ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ⭘
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.!
அல் குர்ஆன் - 7 : 31
அழகு படுத்துங்கள், ஆடை அணியுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள் ஆனால் விரயம் செய்யாதீர்கள் என்று இந்த வசனம் கூறுகிறது.
எது விரயம் என்பதை அறிய அல்லாஹ் இந்த வசனத்தில் பயன்படுத்தி இருக்கும் “இஸ்ராஃப்” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறான்.
إِسراف : (اسم)
مصدر أَسْرَفَ
இதன் அகராதி அர்த்தம் “தேவைக்கும் அதிகமாக, வரம்பை மீறுதல்” ஆகிய அர்த்தங்கள் வரும். இதை புரிந்துகொள் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள சில உதாரணங்கள் இங்கே தருகிறோம்.
الإِسْرافِ في المال: تَبْدِيدُهُ وَصَرْفُهُ بِلاَ فائِدَةٍ
📌 பணத்தில் "இஸ்ராஃப்" என்பது எந்த பயனும் இல்லாததற்கு செலவழிப்பது ஆகும்.
الإٍسْرافُ في الحَديثِ : الإِطالَةُ
📌 செய்தியில் அல்லது பேச்சில் "இஸ்ராஃப்" என்பது தேவை இல்லாத வார்த்தைகளை அதிகப்படியாக பேசுவது.
الإِسْرافُ في الأَكْلِ: الإِفْراطُ فِيهِ .
📌 உணவில் "இஸ்ராஃப் என்பது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதாகும்.
.
அதாவது ஹலாலான அருட்கொடைகளையே அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்தாமல்,
தேவைக்கு அதிகமாக பெருமைக்காக, புகழுக்காக, பிறரின் பாராட்டை பெறுவதற்காக, உலக ஆசாபாசங்களுக்காக செய்யப்படும் செலவீனங்கள்,
பேசினால் நல்லதை அதாவது நல்லதை பேசு அல்லது வாய்மூடி இரு என்கிற ஹதீஸை மறந்து பொழுது போக்கிற்காக அதிகப்படியாக பேசப்படும் வீணான பேச்சுக்கள்,
பசிக்காக சாப்பிடாமல் ருசிக்காக தேடித்தேடி செலவழித்து உண்பதையே ஒரு பொழுதுபோக்காக கொண்டிருப்பது இவை அனைத்தும் இஸ்ராஃப் ஆகும்.
இதை கீழ்க்காணும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண் மருக்குப் போதுமானதாகும்" என்று கூறியதைக் கேட்டேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4182.
நபிகளார் கேட்ட துஆ வைப் பாருங்கள்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைப் போக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5681.
ஒருவருக்கு வயிறு நிறைய போதுமான அளவை விட கூடுதலாக சாப்பிடுவது இஸ்ராஃப் ஆகும்.
ஆனால் நாமோ கீழே கொட்டுவதைத் தான் இஸ்ராஃப் என்று விளங்கி வைத்துள்ளோம்.
நபி ஸல் கூறிய ஒரு செய்தி இதனை இன்னும் தெளிவாக விளக்குவதை கவனியுங்கள்….
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) :-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஒரு விரிப்பு ஆணுக்குரியது. மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது. மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4232.
வீட்டில் பயன்படுத்தப்படும் பொருள்கள் நாமும் பயன்படுத்தாமல் பிறருக்கும் கொடுக்காமல் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதே ஷைத்தானுக்குரியது என்று நபி ஸல் நமக்கு கூறுகிறார்கள்.
இதை அறியாமல் நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை விட எப்போதாவது தேவைப்படும் என்று சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள் தான் பன்மடங்கு அதிகம்.
இவை எல்லாம் இறைவனிடம் கணக்கு சொல்ல வேண்டிய விசயங்கள் ஆகும்.
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 102:8
எப்போது தேவைக்கு அதிகமாக செலவழிக்கிறோமோ அங்கெல்லாம் பெருமை, பகட்டு, புகழுக்காக தவிர செலவழிக்கப்படுவது இல்லை.
வீட்டு செலவினங்கள், உபயோகப் பொருட்கள் தொடங்கி திருமணச்செலவு வரைக்கும் எல்லா செலவிலும் இதை நீங்கள் காணலாம்.
நபி ஸல் எந்தளவு இதை வெறுத்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பி விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்து விட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி – 2613
அழகை அல்லாஹ் விரும்புவதாக கூறிய நபிகளார் தான் அலங்காரத் திரைச்சீலையை வெறுத்து வெளியேறினார்கள்.
திரைச்சீலை ஹராம் இல்லை.
ஆனால், உடுத்த ஆடையே இல்லாத மக்கள் வாழும் ஊரில், அழகுக்காக தொங்க விடுவதை நபிகளார் விரும்பவில்லை என்பதே நபி (ஸல்) அவர்களின் வெறுப்பிற்கு காரணம் ஆகும்.
எனவே தான் அதை விட தேவையுடைய வேறொருவருக்கு கொடுத்தனுப்ப சொல்கிறார்கள்.
📌அழகும், அநாவசியச்செலவும்..
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வசனத்தில்
விரயம் செய்யாதீர்கள் என்ற தடை அழகுபடுத்திக்கொள்ளுங்கள் என்ற கட்டளையோடு இணைந்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அழகுபடுத்தலுக்கும் அநாவசிய செலவுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது.
ஒரு பெண் தன் சிகையை சீவி அலங்கரிக்கலாம் . பார்லர் சென்று பத்தாயிரம் செலவிலும் அலங்கரிக்கலாம்.
முன்னது அலங்காரம், பின்னது ஆடம்பர செலவு.
பெருமையின்றி ஒருவரின் ஆடையும், காலணியும், அழகானதாக அணிந்து கொள்வது தவறில்லை. அதற்காக லட்ச ரூபாய்க்கு நான் ஒரு ஆடை எடுத்துப் போட்டுக் கொண்டு, நான் ஆடம்பரத்துக்காக அணியவில்லை, அழகுக்காக அணிந்தேன், இந்த ஒரு லட்சம் எனக்கு எளிதான செலவு தான் என ஒரு பணக்காரன் சொன்னால் அதை சரி காணும் அளவுக்கு இஸ்லாம் தெளிவற்ற மார்க்கமல்ல.
லட்சக் கணக்கில் செலவழித்து திருமணத்தை நடத்திவிட்டு, அதை நிகழ்ச்சியை அழகுபடுத்த செய்தேன் என எவராவது கூறினால் அதை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
அழகு படுத்துதல் எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றால், ஏன் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா ரலி வீட்டில் அழகான திரைச்சீலை தொங்கியதால் கோபித்துக் கொண்டு திரும்பினார்கள் ?
மாற்று ஆடைக்கே மக்கள் கஷ்டப்படும் அந்த காலத்தில் ஒரு திரைச்சீலையை எந்த பயனுமில்லாமல் அழகுக்காக மட்டுமே தொங்கவிடுவதை நபிகளார் அழகானதாக கருதவில்லை. வரம்பை மீறிய ஆடம்ரமாக கருதுகிறார்கள்.
..
ஆக அல்லாஹ் அழகை விரும்புகிறான் என்பதில் மாற்றுக் கருத்து அல்ல.. அந்த அழகுபடுத்துதல் மார்க்க வரையறைக்குள், பயனுள்ள வகையில் அமைய வேண்டும்.
ஆடைக்கு மட்டும் அல்ல இந்த கட்டளை வீடு கட்டுவது, பள்ளி வாசல் கட்டுவது, வாகனம் வாங்குவது மற்றும் அவற்றை அலங்காரம் செய்வது அனைத்தையும் குறிக்கும்.
பயன்படுத்த ஒரு நல்ல ஃபோன் வைத்திருப்பவர் அதை போதுமாக்கிக் கொள்ளாமல், ஐஃபோன் அடுத்த மாடல் ரிலீஸ் ஆகிவிட்டதே என்பதற்காக ஓடி சென்று வாங்குதல்,
போக்குவரத்து தேவைக்காக ஒரு நல்ல மைலெஜ் தரும் பைக் வாங்காமல், லட்சக்கணக்கில் செலவழித்து ஆடம்பர பைக் வாங்குவோர்,
பசிக்காக சாப்பிடாமல் ருசிக்காக சாப்பிடுவதையே பிழைப்பாக கொண்டிருப்போர் எல்லாம் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பணக்காரர்கள் ஆடம்பரமாக அநாவசியமாக செலவு செய்து விரயமாக்குவது ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பது ஆகும். அதனால் தான் அல்லாஹ் தர்மம் செய்வதை ஏழைகள் உரிமை என்று சொல்கிறான்.
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ⭘ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ⭘
அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும், (யாசிக்காத) ஏழைக்கும் நிர்ணயிக்கப்பட்ட உரிமை உண்டு.
அல் குர்ஆன் - 70 : 24,25
وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ⭘
அவர்களின் செல்வங்களில் இரந்து கேட்போருக்கும், (கேட்காத) ஏழைகளுக்கும் உரிமை உண்டு.
அல் குர்ஆன் - 51 : 19
ரீல்ஸ்களை பார்த்து சுற்றுலா மோகத்தில் லட்சக் கணக்கில் ஊர் ஊராக லக்ஸரி வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவோர் இவற்றையெல்லாம் சற்று சிந்தித்து,
செல்வம் அனுபவிக்க அல்ல.. சோதனைக்காக என்பதை உணர்ந்து,
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் செலவினங்களை அமைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் நல்வழியில் செலவிடுதலை அதிகப்படுத்திக் வேண்டும்.
அதுவே நம்மை இந்த உலக மோகத்தில் மூழ்கிவிடுவதை விட்டு நம்மை பாதுகாக்கும்..
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :
எனது உம்மத்தில் சிலர் இருக்கிறார்கள்,அவர்கள் வகைவகையான உணவுகளை உண்கிறார்கள், வகை வகையான பானங்களை குடிக்கிறார்கள், வகை வகையான ஆடைகளை அணிகிறார்கள். பேச்சிலே பெருமையடிப்பார்கள் அவர்கள் தான் என் உம்மத்தின் தீயவர்கள்.
முஃஜமுல் கபீர் 7512
📌 நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
உண்ணுங்கள் பருகுங்கள், தர்மம் செய்யுங்கள், நல்ல ஆடை அணியுங்கள்.. பெருமையின்றியும் விரயம் இன்றியும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடம் அவனது அருள் காணப்படுவதை விரும்புகிறான்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி
நூல் அஹ்மது: 6708
📌 முஆத் இப்னு ஜபல் ரலி கூறினார்கள் நபி ஸல் அவர்கள், தன்னை யமனுக்கு அனுப்பிய போது, "ஆடம்பரத்தைக் குறித்து உன்னை எச்சரிக்கிறேன். அல்லாஹ்வின் அடியார்கள் பகட்டானவர்களாக இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
முஸ்னது அஹ்மது: 22105
📌 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6435.
------------------
நமது வாட்சப் சானலைப் பின்தொடர..
https://whatsapp.com/channel/0029VbA02EB2phHJ62InjR38
Comments
Post a Comment