வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள்.. தொடர் - 2



ஸஹாபாக்கள் மார்க்கத்தை விளங்கிய முறையும், இன்றைய ஸலஃபுகள் எனசொல்லிக் கொள்வோரின் வழிமாறிய பயணமும்.

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார்.அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் :
இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் :
புகாரீ (5283)


தன் கணவனை வேண்டாம் என பிரிந்த ஒரு சஹாபிய பெண்மணியிடம் "நீ அவரை திரும்ப சேர்த்துக்கொள்ளக்கூடாதா" என்று நபிகளார் கேட்கிறார்கள்.. அதற்கு அந்த பெண்மணி நீங்கள் எனக்கு கட்டளையிடுகிறீர்களா ? அல்லது தனிப்பட்டவிதத்தில் பரிந்துரை மட்டும் செய்கிறீர்களா ? என்று கேள்வி கேட்கிறார்கள்..
.
காரணம் நபிகளார் கட்டளையாக இதை கூறியிருந்தால் அது "வஹீ" யாக இருக்கும். வஹீ என்றால் அதனை ஏற்று பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை..வஹீ அல்லாமல் நபிகளாரின் தனிப்பட்ட பரிந்துரையாக இருந்தால் அதை ஏற்க தேவையில்லை.. எனவேதான் அந்த பெண்மணி அவ்வாறு கேள்வி கேட்கிறார்..

இப்போது நபி (ஸல்) அவர்கள், இல்லை.. முஃகீஸை திரும்ப சேர்த்துக்கொள் என்று நான் பரிந்துரை தான் செய்கின்றேன் என்று கூறினார்கள்..அதற்கு அந்த பெண்மணி அப்படியானால் அதை ஏற்க மாட்டேன் என கூறி விடுகிறார்..

ஆக நபி (ஸல்) அவர்களின் கட்டளையை கூட நபித்தோழர்கள் இரண்டாக பார்த்தார்கள்.. ஒன்று வஹீ (இறை கட்டளை).. இன்னொன்று நபிகளாரின் சுய விருப்பம்.. இதில் இறைக்கட்டளையாக இருந்தால் மட்டுமே சஹாபாக்கள் அவசியம் ஏற்று நடக்க வேண்டும் என விளங்கி வைத்து இருந்தார்கள்..காரணம் தன் தோழர்களுக்கு நபிகளாரும் அப்படித்தான் போதித்து இருந்தார்கள்..



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ``உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

முழுக்க முழுக்க வஹியை மட்டும் பின்பற்ற வேண்டும் என போதிக்கப்பட்ட நபிகளாரின் போதனைகளை தூக்கியெறிந்துவிட்டு, முன்னோர்களின் கூற்றுப்படி மார்க்கத்தை விளங்க வேண்டும் என்கிற இஜ்மா கியாஸ் கொள்கைக்கே வந்தவழியே திரும்பி செல்லும் ஸலஃபுகள் என சொல்லிக்கொள்வோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக..

உண்மையில் வரலாற்றில் ஸலஃபுகள் என அழைக்கப்பட்ட ஸஹாபாக்கள் இவர்களின் வழிகேட்டை விட்டு தூரமானவர்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் நாம் விளங்கலாம்...

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!