வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 4

இறைதூதர் அல்லாதோரின் வழிமுறை மார்க்க ஆதாரம் ஆகுமா ?

தக்லீது என்கிற வழிகெட்ட கொள்கையால் இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளாம்.இந்த மார்க்க சட்டதிட்டங்களை நமக்கு போதித்த அல்லாஹ்வின் வசனங்களுக்கு, அதனை விளக்கிக் கூற வந்த நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையே சரியான விளக்கங்களை நமக்கு கொடுக்க முடியும்.மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள் எழும்போது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை முறையாக ஆய்வுசெய்தாலே போதுமான தெளிவு கிடைக்கும்.. அதில்தான் நேர்வழியும் உள்ளது..

அதைவிடுத்து, மார்க்க சட்டங்களை விளங்குவதற்கு எங்களுக்கு நபிகளாரின் வாழ்வும், வழிமுறையும் போதாது, நபிகளாருக்கு பின் வந்த ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள், இமாம்கள், நமது முன்னோர்கள் என இத்துனை சமுதாயத்தவரின் விளக்கங்களும் தேவை எனக் கூறுவோர் இந்த மார்க்கம் நபிகளார் காலத்தோடு முழுமையாக்கப் பட்டுவிட்டது என்கிற அடிப்படையை அறியாதோராகவே இருக்க வேண்டும்.. அல்லது இந்த மார்க்கத்தை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்கு புரியும்படி விளக்கிக் கூறவில்லை என்கிற வழிகெட்ட கொள்கையுடையோராக இருக்க வேண்டும்..

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 


திருக்குர்ஆன் 5:3


அப்படியானால் அனைத்துவிதமான விஷயங்களும் நபிகளார் காலத்திலேயே தெளிவுபடுத்தப் பட்டுவிட்டன, அவர்களுக்கு பிறகு இந்த மார்க்கத்தில் யாரும் எதையும் புதிதாக சொல்லும் தேவை இல்லை என்பதே பொருள்... தெளிவாக சொல்வதென்றால் இந்த மார்க்கத்தில் சட்டம் இயற்றுவதற்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தவிர யாருக்கும் அதிகாரமும் இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லும் ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன..

ஆக இந்த மார்க்கத்தை குர்ஆனிலிருந்தும், குர்ஆனுக்கு நபிமொழிகளிலிருந்தும் விளக்கம் பெறுவதுமே நேரிய இஸ்லாம் ஆகும்..இவை இரண்டை அடிப்படையாக கொண்டே நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை போதித்தார்கள்..

ஸஹாபாக்களும் அவற்றைதான் பின்பற்றினார்கள்..

எனினும் நபிகளார் காலத்துக்கு பிறகு சில நேரங்களில் சில சட்டங்கள் கிடைக்கப்பெறாமலோ, அல்லது மறதியிலோ சுன்னாவிற்கு மாற்றமாக சில செயல்களை செய்த ஸஹாபாக்களும் உண்டு.அவற்றை பற்றி நாம் பேசவோ எழுதவோ விரும்பியதில்லை.ஆனால் மார்க்கத்திற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கொடுத்த விளக்கங்கள் மாத்திரம் போதாது,ஸஹாபாக்கள், இமாம்கள், முன்னோர்களின் விளக்கங்களும் என்று கூறுவோர், ஸஹாபாக்கள் சுன்னாவிற்கு மாற்றமான செயல்களை செய்திருக்கவே மாட்டார்கள் என்கிற குருட்டுத்தனமான தக்லீது வாதத்தை முன்வைக்கும்போது,

"இதோ பாருங்கள்...!!! ஸஹாபாக்களிடமும் மனிதர் என்ற அடிப்படையில் மார்க்க விடயங்களில் அறியாமல் பிழைகள் வந்துள்ளது நபி அல்லாத மனிதர்களை எப்படி மார்க்க ஆதாரமாக கருத முடியும் ? குர்ஆன் ஹதீஸ் மட்டுமே நமக்கு மார்க்க ஆதாரம்" என்கிற சத்தியத்தை நிறுவவே இவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது...

ஸஹாபாக்களிடமும் தவறுகள் வரும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே முன்னறிவுப்பு செய்துள்ளார்கள்..


(மறுமையில்) என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் , நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
                   நூல் : புகாரி 3349, 3447



இந்த முன்னறிவிப்புக்கு தகுந்தவாறு மார்க்க விடயங்களில் சிறு சிறு தவறுகள் செய்த ஸஹாபாக்களும் உண்டு, பெரும். பாவங்கள் செய்த ஸஹாபாக்களும் உண்டு.. உதாரணத்திற்கு இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.


ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

நூல் : புகாரி 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550

.
இத்தகைய எச்சரிக்கையை மறந்து உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியில் காலீஃபா உதுமான் (ரலி) அவர்களை எதிர்த்து கலகம் செய்தவர்களில் சில ஸஹாபாக்கள் இருந்தார்கள்..அதற்குபின் உதுமான் (ரலி) கொலைக்கு நியாயம் கேட்க வேண்டும் என ஆட்சியாளர் அலி (ரலி) அவர்களை எதிர்க்க அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் தலமையில் வாளேந்தி அணிவகுத்தவர்களில் ஸஹாபாக்கள் இருந்தார்கள்.. அலி (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றபோது இரு படைகளிலும் ஸஹாபாக்கள் இருந்தார்கள்.இதன் பிறகு நடந்த கர்பளாவிலும் ஸஹாபாக்கள் இருந்தார்கள்.முஸ்லிம்கள் மத்தியில் நிகழும் இந்த உள்நாட்டு குழப்பத்தில் நான் பங்குகொள்ள மாட்டேன் என இறையச்சத்தோடு விலகிய ஏராளமான ஸஹாபாக்கள் அதே காலத்தில் இருந்தும் அவர்களை பார்த்தும் உணர்ந்துகொள்ளாமல் உள்நாட்டு குழப்பத்தில் பங்கேற்ற ஸஹாபாக்களும் அன்று இருக்கவே செய்தார்கள்.

இது சுன்னாவிற்கு மாற்றமில்லையா ? ஸஹாபாக்களிடம் சுன்னாவிற்கு மாற்றமான நடவடிக்கை வர வாய்ப்பேயில்லை என்று கூறுவோர் குருதி படிந்த இந்த வரலாற்றை மறுப்பதற்கு தயாரா ?


தடைசெய்யப்பட்ட வாடகை திருமண சட்டம் கிடைக்கப்பெறாமல் இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் :

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலி (ரலி),
                   நூல் : புகாரி 4216, 
                               5115, 5523, 6691.


வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.


அறிவிப்பவர் : அபூ ஜம்ரா,
                   நூல் : புகாரி 5116



ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலத்தில் போரின் சமயத்தில் ஸஹாபாக்கள் செய்துவந்த அறியாமைக்கால திருமணமான முத்ஆ எனும் வாடகை திருமணம் பிற்காலத்தி தடை செய்யப் படுகிறது.. அதை தான் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸ் கூறுகிறது..

ஆனால் நபிகளார் காலத்துக்கு பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என அபூ ஜம்ரா எனும் தாபிஈயிடம் கூறுகிறார்கள்.ஆக நபிகளார் காலத்திலேயே தடை செய்யப்பட்ட ஒரு சட்டம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல் போயிருக்கலாம் என்பது தெளிவாகிறது.

இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை வைத்துதான் சொல்கிறோம்.. ஸஹாபா பெருமக்கள் சிறந்த சமுதாயமாக இருந்தாலும், தியாகத்தில் நம்மைவிட உயர்ந்தவர்களாக இருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் கவனக்குறைவுகள், மறதிகள் வரலாம் என்று .

இந்நிலையில் ஸஹாபாக்களை எப்படி மார்க்க ஆதாரமாக கருதுவீர்கள் ?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகளார் காலத்திலேயே மார்க்கத்தில் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், இமாம்கள், இன்னும் முன்னோர்கள் என இவர்கள் யாரையெல்லாம் கருதுகிறார்களோ அவர்களின் விளக்கங்கள் இல்லாமல் குர்ஆன் ஹதீஸை விளங்க முடியாது என சொல்வது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நமக்கு புரியும் விதத்தில் விளக்கிக் கூற தெரியவில்லை என சொல்வது போலாகாதா..!?

(குர்ஆன் அனைத்து மக்களும் விளங்குவதற்கு எளிமையானது என்பதை முதல் தொடரில் விளக்கியுள்ளோம். வாசிக்க..)

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 7:3


இவற்றையெல்லாம் மறந்துவிட்டு கபுர் வணங்கிகளின் கொள்கையான இஜ்மா கியாஸ் என்கிற அறியாமைகால கொள்கைக்கே மீண்டும் திரும்பிசெல்லும் ஸலஃபுகள் என சொல்லிக்கொள்வோருக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக... இத்தகைய வழிகெட்ட கொள்கையை உடையோரிடமிருந்து நம்மை பாதுகாத்து குர்ஆன் மற்றும் நபி மொழிகளை மட்டும் மார்க்க ஆதாரமாக பின்பற்றும் சத்திய இஸ்லாத்தில் நம்மை சேர்ப்பானாக..

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!