தலாக் சட்டங்கள்.. தொடர் 2



பெரும்பாலும் ஆண்கள் தலாக் என்ற பேச்சை எடுக்கக் காரணம், மனைவி தன்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறாள் என்ற உணர்ச்சி வேகத்தில்தான். கட்டுப்பட மறுக்கும் பெண்ணை அழகிய வழிமுறைகளால் தனது வழிக்கு கொண்டு வந்து, குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முயற்சிப்பது தான் புருஷலட்சணம் ஆகுமே தவிர, எடுத்த எடுப்பில் கழற்றிவிட நினைப்பது ஆண்மைக்கு அழகல்ல; அது நியாயமானதும் அல்ல.

எனவே தான் உணர்ச்சிவசப்பட்டு, பெண்களுக்கு அநீதி இழைத்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாம் பல வழிகாட்டல்களை ஆண்களுக்கு வழங்குகியுள்ளது.அதில் ஓர் அம்சம் தான் 'ஈலாஃ' என்ற மார்க்க வழிகாட்டல் குறித்து முதல் பதிவில் பார்த்தோம்.. ( முதல் தொடரை வாசிக்க )
பெரும்பாலும் ஈலாஃ இருப்பதன் காலகட்டத்தில், தம்பதியர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழவே முன்வருவர். அப்படி முன்வராத பட்சத்தில் கணவன், கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது.

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (லேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:34)


முதலாவதாக மனைவிக்கு, அவள் செய்த தவறுகளின் விபரீதத்தை உணர்த்தும் விதமாக நல்ல முறையில் உபதேசம் செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில், மனைவியும் கணவனுக்குக் கட்டுப்படுவதன் அவசியத்தை மார்க்க ரீதியாகச் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறாள்.

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.

(அல்குர்ஆன் 4:34)


மேலும் கணவனுக்கு கட்டுப்படுதலை குறித்து நபிகளார் கூறும்போது,

"நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்கள்..

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 107




இதுபோன்ற மார்க்க கட்டளைகளை மனதில் நிறுத்தி பெண்களும் சற்று விட்டுக்கொடுத்துப் போனால் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்..

அறிவுரை செய்தும் கட்டுப்படாவிட்டால், அடுத்த கட்டமாக படுக்கையிலிருந்து தள்ளி வைப்பதன் மூலம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டவும், அதற்கும் கட்டுப்படாவிட்டால் இலேசாக அடிக்கவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.எனினும் முகத்தில் அடிக்கவோ, காயம் ஏற்படும்படி அடிக்கவோ கூடாது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)

குடும்ப பிரச்சனைகள் பெரிதாக உருவெடுக்கும்போது பலமாக படைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் பலவீனமான பெண்கள் மீது கைநீட்டுவது அவர்களையும் மீறி விரும்பியோ விரும்பாமலோ நடந்துவிடும்..அதுபோன்ற சூழல்களில், சில ஆண்கள் கோபத்தில் வரம்பு மீறி மனைவியை அடிப்பதைத் தடுக்கவே இலேசாக அடிக்க மட்டும் அனுமதிக்கிறது மார்க்கம். அதுவும் அவர்களுக்குத் தவறை உணர்த்தி சேர்ந்து வாழ்வதற்காகவே தவிர விரட்டும் நோக்கில் அல்ல...

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு எதையும் செய்யக்கூடாது. தவறை உணர்ந்து கட்டுப்பட்ட பிறகு மென்மேலும் அவர்களைக் குத்திக்காட்டி பிரச்சனையை மீண்டும் வளர்க்கக் கூடாது, மனைவியிடம் நல்லிணக்கத்தையே நாடவேண்டும், இறைவனே உயர்ந்தவனாக இருக்கிறான் என இறுதியாக அவ்வசனம் கூறுகிறது..

இவ்வளவு செய்த பிறகும் நல்லிணக்கம் ஏற்படவில்லை என்றால், அப்பொழுதும் கூட உடனே தலாக் என்ற பேச்சை எடுக்க ஆண்களுக்கு இஸ்லாம் அனுமதி வழங்கவேயில்லை. குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்கள், பிரச்சனையைச் சுமூகமாக அணுகி, கணவன் மனைவியரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த சில வழிமுறைகளை இஸ்லாம் அறிவுறுத்துகிறது...

இது பற்றிய விவரம் அடுத்த தொடரில்., இன்ஷாஅல்லாஹ்...

குறிப்பு : இது தலாக் பற்றிய தொடர் என்பதால் ஆண்களுக்குரிய உரிமைகள் கடமைகள் குறித்தே கூறிவருகிறோம்..விவாகரத்து விடயத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் குறித்து "குலாஃ" என்ற தலைப்பில் சொல்லப்படும்..

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!