தலாக் சட்டங்கள்.. தொடர் 4





ணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் வரும்பொழுது கணவன் தலாக் என்ற முடிவை எடுப்பதற்கு முன் அவர்களை சேர்த்துவைக்கும் நோக்கில் பல கட்டங்களை கடந்துவர இஸ்லாம் வழிகாட்டுகிறது என்ற விபரங்களை சென்ற மூன்று தொடர்களில் விவரித்தோம்.. (முந்தைய தொடரை வாசிக்க)

அவற்றில் முக்கியமாக, இரண்டு உறவினர்களை நடுவராக அமைத்து பேசுவது ஒரு முயற்சியாகும் என்பதையும் விவரித்து இருந்தோம்...இவ்வளவுக்கு பிறகும் தம்பதியினரிடம் சேர்வதற்கான எந்த சாதகங்களும் இல்லை என அந்த நடுவர்களும் முடிவெடுத்தால் தலாக் என்ற அனுமதியை கணவனுக்கு இஸ்லாம் வழங்குகிறது..

தலாக் என்ற அமர்வுக்கு வந்தபின் முதலில் கவனிக்க வேண்டியது இரண்டு சாட்சிகள் ஆகும்...

உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்!

திருக்குர்ஆன் 65:2


பொதுவாக சாட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் அநீதியான ஒப்பந்தங்களுக்கு துணைப்போகக் கூடாது என இஸ்லாம் தடுத்துள்ளது.(பார்க்க :நூல் முஸ்லிம் 3330 ) எனவே தலாக்கிற்கு சாட்சியாக செல்லக்கூடியவர்கள் நியாயமான காரணங்களுக்காக தான் தலாக் சொல்லப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.. அற்ப காரணங்களுக்காக சொல்லப்படும் விவாகரத்துகள் அநீதியாகும்..அதற்கு துணை போகக் கூடாது..

மனைவியின் ஒழுக்கத்தில் கலங்கம் சொல்லும் விதத்தில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் கணவனால் வைக்கப்பட்டால் அதற்கு சாட்சிகள் உண்டா என கேட்டறிந்து கொள்வது அவசியம்.. வேறு சாட்சிகள் இல்லாமல் மனைவியின் மானக்கேடான செயலை, கனவனே கண்ணால் பார்த்ததாக கூறினால் சாப அழைப்பு பிரமானம் செய்யச் சொல்ல வேண்டும்..

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று மீண்டும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்: .

புகாரி 2671


ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்..
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள 'லிஆன்' எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், 'உம்முடைய விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது' என்று கூறினார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் 'லிஆன்' செய்தார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே 'லிஆன்' செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது.

புகாரி : 4746


முதல் ஹதீஸில் ஹிலால் என்ற நபித்தோழர் தம் மனைவி மீது விபச்சார குற்றம் சுமத்துகிறார்.. அதற்கு நபிகளார் ஆதாரம் கொண்டு வா இல்லையேல் அவதூறு சுமத்திய தண்டனையாக கசையடி கொடுக்கப்படும் என்கிறார்கள்.. இரண்டாவது ஹதீஸில் அதே ஸஹாபி மீண்டும் வந்து அதையே கேட்கும்போது உம் விஷயத்தில் இறை வசனம் அருளப்பட்டுவிட்டது என்று கூறி கீழ்காணும் இறைச்சட்டத்தின் அடிப்படையில் இருவரையும் லிஆன் செய்யச் சொல்கிறார்கள்..
---------------
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.

தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.

அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.


"அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.

திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9

.---------------------

மனைவிமீது குற்றம் சுமத்தும் கணவன் அவனை தவிர வேறு சாட்சி இல்லாவிட்டால், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சொல்வது உண்மையே என்று நான்கு முறை சத்தியம் செய்து, நான் பொய்யனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று ஐந்தாவது முறை சாபத்தை கேட்க வேண்டும்...

அதேபோல் குற்றம் சுமத்தப்பட்ட பெண் அதை மறுத்தால் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் சொல்வது பொய் என்று நாங்கு முறை சத்தியம் செய்து, அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று ஐந்தாவதாக சாபத்தை கேட்க வேண்டும்..

பள்ளிவாசல் நிர்வாக கவனத்திற்கு வரும் தலாக் வழக்குகளில் இவை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்...தலாக் வழக்குகள் வரும்பொழுது தலாக்கிற்கு முன் கடைபிடிக்க வேண்டிய ஈலா போன்ற அனைத்தும் கடைபிடித்தார்களா? உறவுகளை நடுவராக வைத்து பேசினார்களா ? சாட்சிகளுக்குரிய பொறுப்புகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்களையும் விசாரித்து, அப்படியில்லையென்றால் கணவனுக்கு மேற்சொன்ன மார்க்க வழிகாட்டல்களை ஆலோசனையாக வழங்கி அனுப்ப வேண்டும்..

இவை அனைத்தும் கடைபிடிக்கப்பட்டுவிட்டன என்று தெரிந்தால் மட்டுமே விசாரணைக்கே எடுக்க வேண்டும்.. நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் இதுபோன்ற சட்டதிட்டங்கள் தெரியாமல்தான் இருக்கின்றது..

எல்லாம் கடைபிடிக்கப்பட்டும் நல்லிணக்கம் ஏற்படாத நிலையில் சாட்சியங்களோடு தலாக் சொல்வது குறித்தும், தலாக்கிற்கு பிறகுள்ள சட்டதிட்டங்கள் குறித்தும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்...

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!