தலாக் சட்டங்கள்.. தொடர் 5

ணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வந்து நல்லிணத்திற்கான இஸ்லாம் கூறும் அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்ட பின்னரும் பயனில்லை என்றால் தலாக் என்ற அமர்வுக்கு வர இஸ்லாம் அனுமத்திக்கின்றது என்று சென்ற தொடர்களில் பார்த்தோம்.. (முந்தைய தொடரை வாசிக்க)

தலாக் செய்யப்படும் பெண் அந்த நேரத்தில் தூய்மையான நிலையில் இருக்க வேண்டும்..அதாவது பெண்ணுடைய மாதவிலக்கு காலத்தில் தலாக் சொல்லக்கூடாது...

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அதிலிருந்தும் தூய்மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பினால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
முஸ்லிம் 2923


மாதவிலக்கு நேரத்தில் தலாக் சொல்லப்பட்டால் மனைவியை திரும்ப மீட்டிக்கொண்டு அந்த மாதவிலக்கு முடிந்து அடுத்த மாதவிடாய் வந்து தூய்மையான பிறகு தான் தலாக் செய்ய எண்ணமிருந்தால் செய்ய வேண்டும்.இந்த இடைப்பட்ட காலத்திலாவது இருவருக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாதா என்பதை எதிர்பார்த்தே இஸ்லாம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. மேலும் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் இயல்புக்கு மீறிய எரிச்சலை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்..அதுபோன்ற நேரத்தில் கணவன் எடுக்கும் எதிர்வினை அவசரத்தால் எடுத்ததாகக்கூட இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்..

தலாக்கிற்கு இரண்டு சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன்பே சொல்லியிருந்தோம்.. அவர்கள் இதுபோன்ற விஷயங்களை தெளிவுபடுத்திக்கொண்டுதான் சாட்சியமளிக்க சம்மதிக்க வேண்டும்..

தலாக் :-

தலாக் என்ற அனுமதியை மூன்றுமுறை பயன்படுத்த ஆணுக்கு இஸ்லாம் அனுமதியிளித்துள்ளது. இந்த மும்முறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் இந்த சமுதாயம் குழம்பித் திரிகிறது..மும்முறை என்றால் வாழ்நாளிலேயே மும்முறை என்றுதான் அர்த்தம்.. ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என சொல்வது மும்முறை ஆகாது..அது ஒரு முறையாகதான் மார்க்கத்தில் கருதப்படும்..

தலாக்கை முதல் இரண்டு முறை பயன்படுத்துவதற்கும், மூன்றாவது முறை பயன்படுத்துவதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது..அது என்ன என்பதை இப்போது காண்போம்..

மனைவியை நோக்கி தலாக் அல்லது நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் மூன்று வாய்ப்புகளில் முதல் வாய்ப்பை கணவன் பயன்படுத்திவிட்டார்..தலாக் என்று சொன்னவுடனேயே இருவருக்கும் மத்தியிலுள்ள பந்தம் முடிந்துவிடாது...தலாக் சொன்ன பிறகும்கூட மூன்று மாதவிடாய் காலம் மனைவி தன் கணவனுடைய வீட்டில்தான் இருக்க வேண்டும்..

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:1,2

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய இத்தா (எனும் காலக்கெடு) மூன்று மாதங்கள் ஆகும். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.

திருக்குர்ஆன் 65:4


தலாக் சொன்ன பிறகும் மனைவி கணவன் வீட்டில்தான் இருக்க வேண்டும். அவளை வெளியேற்றக்கூடாது, அவளும் வெளியேறக்கூடாது என்று மேற்கண்ட வசனங்கள் சொல்கிறது..

அந்த மூன்று மாதவிடாய் காலங்களுக்குள் இருவரும் சேர விரும்பினால் அப்படியே சேர்ந்துகொள்ளலாம்..எந்தவித திருமண ஒப்பந்தமும் செய்யத் தேவையில்லை..மூன்று மாதவிடாய்கள் கழிந்துவிட்டால் இருவரும் கணவன் மனைவி இல்லையென்று ஆகிவிடும்..இதன்பிறகு சேர விரும்பினால் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்..அனால் ஒரு தலாக்கை கணவன் பயன்படுத்திவிட்டார் என்பதில் மாற்றமில்லை..

ஒரு தலாக் செய்த பிறகு மீண்டும் சேர்ந்துவாழும் காலங்களில் மீண்டும் பிரச்சனைகள் வந்து முன்சொன்ன அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு மீண்டும் பிரிய நாடினால் இரண்டாவது தலாக் பயன்படுத்தப்படும்..

இரண்டாவது தலாக்கிற்கு பிறகும் மேற்சொன்ன அதே சட்டங்கள் தான்..தலாக் சொன்னபிறகு மூன்று மாதவிடாய் காலங்கள் மனைவி கணவன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.. அந்த காலக்கெடுவுக்குள் சேர்ந்துகொள்ள நாடினால் அப்படியே சேர்ந்துகொள்ளலாம்.. பிரிய நாடினால் மூன்று மாதம் கழித்து பிரிந்து கொள்ளலாம்.. மூன்று மாதங்கள் கழித்த பின்னர் சேர நாடினால் திருமணம் செய்து சேர வேண்டும்..

எனினும் இரண்டு தலாக்குகள் பயன்ப்படுத்தப்பட்டதாகிவிட்டது.. இரண்டு தலாக்குகளும் பயன்ப்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த காலங்களில் பிரச்சனைகள் வந்து மீண்டும் பிரிய நாடினால் மூன்றாவது தலாக் பயன்ப்படுத்தப்படும்.. மூன்றாவது தலாக்கும் சொல்லப்பட்ட பின்னர் இருவரும் சேர நாடினால் தான் உடனே சேர முடியாது.அந்த பெண்ணை வேறொருவன் மணமுடித்து அவனும் தலாக் விட்டால்தான் பழைய கணவனை அவள் மணமுடிக்க முடியும்.இவை அனைத்தையும் கீழ்க்காணும் வசனங்களில் இறைவன் விவரிக்கின்றான்..

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.


திருக்குர்ஆன் 2: 229, 230

கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தலாக் சொல்லப்பட்டால் பிள்ளையை பெற்றெடுக்கும் வரை கணவன் வீட்டில் இருக்க வேண்டும்..தலாக் சொல்லப்பட்ட பிறகு மூன்றுமாதங்கள் அல்லது பிள்ளைபெறும் வரையில் கணவன் வீட்டில் இருக்கும் மனைவியை கணவன் நல்லமுறை கவனித்து செலவிட வேண்டும்..

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இதுபற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும்.

திருக்குர்ஆன் 65:6

தனது கருவைதான் மனைவி  சுமக்கிறாள் என்ற நன்றியோடும் கடமையுணர்வோடும் கணவன் நடந்துகொள்வது அவசியம்..

தலாக் சொல்லப்பட்ட பிறகும் மூன்று மாதங்கள் கணவனின் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுவதற்கு காரணம் அந்த காலங்களில் கூட அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் தான்..இஸ்லாம் தம்பதியினரிடம் நல்லிணக்கத்தையே விரும்புகிறது.. ஷைத்தான் தான் பிரிவினையை விரும்புகிறான்..

மேலும் தலாக்கிற்கு பிறகு மனைவிக்குரிய இத்தா மற்றும் ஜீவனாம்சம், மற்றும் பெண்களுக்குரிய குலாஃ உரிமைப் பற்றி அடுத்தடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்..

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!