தலாக் சட்டங்கள்.. தொடர் 3





ணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரும்பொழுது ஆண்கள் அவசரப்பட்டு தலாக் சொல்வதை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை,.அதற்கு முன் அவர்கள் இணைவதற்குண்டான பல வழிகாட்டல்களை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது என்பதைப் பற்றி சென்ற இரண்டு பதிவுகளில் பார்த்தோம்..  (2ஆம் தொடரை வாசிக்க)

சம்பந்தப்பட்ட தம்பதியர் எவ்வளவுதான் தங்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் மறைக்க நினைத்தாலும், அவர்களின் நடத்தையிலேயே குடும்பத்தார்கள் அறிந்துகொள்வார்கள். இருவரும் பிரியமாக தான் இருக்கிறார்களா இல்லையா என்பதை சில சூழ்நிலைகளே பெரியவர்களுக்கு காட்டித்தந்துவிடும்..

இதுபோன்ற சூழல்களில் குடும்ப பெரியோர்கள் தலையிட்டு விசாரிப்பது அவசியமாகும், அதற்கு சில வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது..

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:35


இருவருக்கு மத்தியில் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரிந்தால் பெண் வீட்டார் தரப்பிலிருந்து ஒரு நடுவரையும், கணவன் தரப்பிலிருந்து ஒரு நடுவரையும் நியமித்து, பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது..இதை அந்த கணவனே முன்வந்து செய்ய வேண்டும்.. இறைவனின் கட்டளையான இவற்றையெல்லாம் கடைபிடிக்காமல் உதறித் தள்ளிவிட்டு, எடுத்தவுடனே தலாக் செய்ய தயாராவது அநீதியாகும்..உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மனைவியின் விஷயத்தில் அநீதி இழைத்தால் அதுகுறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில்க் கொள்ளுங்கள்..

ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...
.
அப்துல்லாஹ்
இப்னு உமர்(ரலி)
புகாரி 5200.


பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் பிரச்சனை பெரும்பாலும் முற்றிக்கொண்டே செல்வதற்கும் வாய்ப்புண்டு. அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பு வழங்க நடுவர்கள் இருந்தால் எத்தகைய பிரச்சனையையும் சுலபமாக தீர்க்க முடியும்..

நியமிக்கப்படக் கூடிய நடுவர்கள் இதில் நீதமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டும் பிரிந்த . இருவருக்கிடையில் பொய்சொல்லியாவது நல்லிணக்கம் செய்துவைக்க மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது என்பதுபோன்ற சட்டங்களை அறிந்து நுண்ணறிவுத் திறனுடன் செயல்பட வேண்டும்..

சம்பந்தப்பட்ட தம்பதியினர் ஊர் ஜமாத்தார்களிடம் சொல்ல யோசிக்கும் விஷயங்களை கூட தங்கள் குடும்பத்தினரிடத்தில் இலகுவாக பகிர்ந்துகொள்வார்கள் என்பதால், இருவரையும் தனித்தனியே சந்தித்து பிரச்சனை குறித்த அனைத்து விபரங்களையும் விசாரித்து பெற வேண்டும்.. அவற்றை வைத்து இவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. தலாக் செய்யும் அளவுக்கு பாரதூரமான பிரச்சனை எதுவும் இல்லையென்றால் அவர்களுக்கு நல்ல முறையில் உபதேசம் செய்து சேர்த்துவைக்க முயற்சிக்க வேண்டும்.சிறியளவிலான பிரச்சனையாக இருக்கும்பட்சத்தில்,.பெரியோர்கள் பேசுவது மூலம் எத்தனையோ மணமுறிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது நடைமுறை உண்மை.

இல்லை..தீர ஆராய்ந்த பிறகும் அவர்கள் பிரிவது தான் நல்லது என அந்த நடுவர்களும் முடிவெடுக்கும் அளவுக்கு பிரச்சனைகள் இருந்தால் வேறுவழியே இல்லை.. சில விதிமுறைகளுடன் ஆணுக்கு தலாக் செய்யும் அனுமதியை இஸ்லாம் அளிக்கின்றது..

அந்த விதிமுறைகளில் முக்கியமான ஒன்று "இரண்டு சாட்சிகள்" முன்பு வைத்துதான் தலாக் சொல்ல வேண்டும்.. சாட்சிகள் முன்வைத்து சொல்ல வேண்டும் என்றாலே ஒரு சபையில்தான் சொல்லவேண்டும் என்றாகிவிடுகின்றது.. இன்று குறுந்தகவல்களிலும், தொலைபேசியிலும் தலாக் சொல்பவனெல்லாம் எவ்வளவு பெரிய மார்க்க விரோத காரியத்தையும் மடத்தனத்தையும் செய்கிறான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்..

இவ்வளவு சட்டதிட்டங்களை கடந்துதான் தலாக் என்ற முதல் அமர்வுக்கே வரச்சொல்கிறது இஸ்லாம்.. இவற்றில் எதையும் மக்கள் அறியாமலேயே அவசரப்படுவது வேதனைக்குரிய விஷயம்.. மார்க்க அறிஞர்களும் இதில் அதிக அலட்சியம் காட்டி வருகின்றனர்..

மேலும் இதுபோன்ற சூழல்களில்தான் தூய்மையான மனைவியாக இருந்தாலும் அவர்களின் ஒழுக்கத்தில் அவதூறு சுமத்தி திட்டமிட்டே மணமுறிவு செய்யும் அவலங்களும் சில இடங்களில் அரங்கேறுகின்றது.. அதை எப்படி தீர்க்க வேண்டும் என்ற சட்டத்தையும் இந்த ஜமாத்தார்களோ, ஆலிம்களோ இந்த அமர்வில் கடைபிடிப்பதில்லை..

அது தொடர்பான சட்டதிட்டங்கள், மற்றும் சாட்சிகளுக்குரிய பொறுப்புகள் குறித்தும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்..

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!